மறக்க முடியுமா? – பேராசிரியர் நா.வானமாமலை

 இவர் எந்த ஒரு கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ பேராசிரியராகப் பணியாற்றவில்லை. தொழில் முறைப் பேராசிரியராகக் கூட இருந்ததில்லை. ஆனாலும் இன்றும் கூட அறிவுத் தளங்களில் இவர் பேராசிரியர் என்றே அழைக்கப்படுகிறார் என்பது இவரின் பெருமைக்குச் சான்று.

 திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இவரின் சொந்த ஊர். கார்த்திகை 22, 1938 / 7-.12.-1907 அன்று இவர் பிறந்தார்.

 திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் பயின்ற இவர் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.

  பொதுவுடமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட நா.வா, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலக் கல்விப் பிரிவுக்குப் பொறுப்பாளர் ஆனார்.

  அதைத் தொடர்ந்து சில அடிப்படையான அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். பல அறிவியல் கட்டுரைகளை எளிமையாக எழுதியிருக்கிறார்.

  ‘விண்வெளி இரசாயனம்’ – ‘விஞ்ஞானத் தொழில்புரட்சியும் அதன் விளைவும்’போன்ற அறிவியல் நூல்களும் இவரால் எழுதப் பெற்றுள்ளன.

  (இ)ரப்பரின் கதை, இரும்பின் கதை, காகிதத்தின் கதை ஆகிய நூல்களை இவர் சிறுவர்களின் அறிவியல் சிந்தனைக்காக எழுதி இருக்கிறார்.

  தமிழ்நாட்டில் தி.நா.சு., கி.வா.ச., பெரியசாமி தூரன், செ.அன்னகாமு போன்றவர்கள் நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து ஆர்வம்காட்டி வந்த காலம் அது.

 அப்பொழுது நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரித்து அதன் வரலாறு, பாடியவர்கள், பாடல் வழங்கிய இடங்கள், அவை சார்ந்த நிலம், சூழல், மெய்ப்பொருள், பாடல்களைச் சேகரித்தோர் என்று விளக்கங்களுடன் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார் நா.வானமாமலை.

  ‘தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ (1960), ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ (1964) ஆகிய இரு தொகுப்புகள் அப்படி அவரால் வெளியிடப்பட்டனவாகும்.

 நாட்டுப் புறப் பாடல், மானிடவியல், அடித்தள மக்களின் ஆய்வு போன்றவை அறிமுகமாகி விவாதத்தில் இருக்கும் போது ‘நாட்டுப்புறவியல்’ என்ற கலைச் சொல் உருவானது.

 அதை நா.வானமாமலை ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்றார். இவ்விரு சொற் பெயர்கள் இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன.

  நாட்டார் கதைகளைப், பாடல்களைப் பலர் தொகுத்தார்கள், வெளியிட்டார்கள்.

  சமூகவியல், மானிடவியலில் அந்நாட்டார் வழக்காற்றியல் எப்படி மையம் பெறுகிறது என்பதைச் சுட்டிக் காட்டினார். இவற்றை ஆய்வுகளுக்கும் உள்ளாக்கினார் நா.வானமாமலை.

  அதே சமயம் கதைப் பாடல்களுக்கும் முன்னுரிமை கொடுத்து, அவற்றை வெளிக் கொண்டுவந்த பெருமை இவரையே சாரும்.

  பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த போது, அவரின் துணையுடன் ஆறு கதைப் பாட்டிலக்கியங்களைப் பதிப்பாசிரியராக வெளியிட்டார் நா.வா. வெளியிட்டது மதுரைப் பல்கலைக்கழகம்.

அவை,

 1. கட்டபொம்மன் கதைப்பாடல்
 2. கட்டபொம்மன் கூத்து

 இவை இரண்டும் கட்டபொம்மன் குறித்த வரலாற்றை மக்களின் நாட்டுப்புறப் பார்வையில் சொல்கிறது.

 

 1. முத்துப்பட்டன் கதை

 இந்நூல் அருந்ததியர் சமூகம் குறித்த, குற்றால மலைப்பகுதியின் கதையாகச் சொல்லப்பட்டுள்ளது. செக்கோசுலோவேக்கிய மொழியில், மொழிபெயர்க்கப்பட்ட முதல் தமிழ்க் கதைப் பாட்டிலக்கியம் இது.

 1. கான்சாகிபு சண்டை

மருதநாயகம் என்று அழைக்கப்பட்ட கான்சாகிபு நடத்திய சண்டை பற்றிய நூல் இது.

 1. காத்தவராயன் கதைப் பாடல்

ஒடுக்கப்பட்ட பறையர் சமூகத்தளத்தில் இக்கதைப் பாட்டிலக்கியம் அமைகிறது.

 1. ஐவர் இராசாக்கள் கதை

– நாயக்க மன்னரின் மேலாதிக்க ஆட்சியை ஏற்க மறுத்த ஐந்து பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர்களின் கதை இது.

  இந்தக் கதைப் பாட்டிலக்கியப் பதிப்பின் வரலாற்றுக் குறிப்புகள், வழக்குச் சொற்கள், நிகழ்வின் குறிப்புகள், சொல் விளக்கம் ஆகிய சிறப்புகள் உடையன. இவற்றுடன் நா.வானமாமலையின் ஆய்வு முன்னுரைகள் மிக முதன்மைத்துவம் பெற்றதாக அமைந்திருக்கின்றன.

 1975ஆம் ஆண்டு தார்வார் திராவிட மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார்.

 அப்பொழுது International of Tamil Folk Creations என்று இவரால் எழுதப்பட்ட நாட்டுப்புற இலக்கிய ஆய்வு நூல் மிகச் சிறப்பாகப் பேசப்பட்டது.

 இந்நூலும், இவரின் பல ஆங்கிலக் கட்டுரைகளும் இன்னமும் தமிழில் மொழிபெயர்க்கப் படவில்லை.

 தமிழின் ஆய்வுத் தளத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ‘ஆராய்ச்சி’ என்ற ஆய்விதழை 1969ஆம் ஆண்டு தொடங்கினார் இவர்.

 இதில் இவரின் ஆய்வுகள் மட்டுமின்றி, பல்வேறு  துறை சார்ந்த ஆய்வறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தார்.

 பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளும், தன் இறுதிகாலம் வரை இவ்விதழை இவர் நடத்தி வந்தது குறிக்கத்தக்கது.

 1. இந்திய நாத்திகமும் மார்க்சியமும்;
 2. இலக்கியத்தின் உள்ளடக்கமும் உருவமும்;
 3. உயிரின் தோற்றம்;
 4. உரைநடை வளர்ச்சி;
 5. கட்டபொம்மன் கதைப்பாடல்;
 6. கட்டபொம்மன் கூத்து;
 7. கான்சாகிபு சண்டை;
 8. முத்துப்பட்டன் கதை;
 9. காத்தவராயன் பாடல்;
 10. ஐவர் இராசாக்கள் கதை;
 11. தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்;
 12. தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்;
 13. தமிழ் நாட்டுப் பாடல்கள்;
 14. தமிழர் பண்பாடும் தத்துவமும்;
 15. தமிழர் வரலாறும் பண்பாடும்;
 16. பழங்கதைகளும் பழமொழிகளும்;
 17. புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்;
 18. மக்களும் மரபுகளும்;
 19. மார்க்சிய அழகியல்;
 20. மார்க்கிய சமூக இயல் கொள்கை;
 21. வ.உ.சி முற்போக்கு இயக்கங்களிள் முன்னோடி;
 22. Studies in Tamil Folk Literature

ஆகிய இவரின் 22 நூல்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

  இவரின் இளமைக் காலத்தில், நாங்குநேரி வட்டார விவசாய இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் செயல்பட்டார்.

  புகழ்பெற்ற திருநெல்வேலி சதிவழக்கு விசாரணைக் கைதிகளுள் இவரும் ஒருவர்.

  கோயில் நுழைவு, சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, நில மீட்புப் போராட்டங்கள் எனப் பல்வேறு போராட்டங்களில் இவர் பங்கு கொண்டுள்ளார்.

 நகராட்சி உறுப்பினராகவும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத்தலைவராகவும் இவர் ஆற்றிய குமுகாயப் பணிகளும் மறக்கக் கூடியவை இல்லை.

 இப்படிப்பட்ட பெரும் சிறப்புக்கு உரிய பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் தன் 73ஆம் அகவையில் 1980ஆம் ஆண்டு காலமானார்.

எழில்.இளங்கோவன்

கருஞ்சட்டைத் தமிழர் – 17, செட்டம்பர் 2017