மறக்க முடியுமா? : மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் : எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா?
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
“தேவதாசி/தேவடியாள் (தேவ அடியாள்) ஆஃகா! என்ன திவ்வியமான திருப்பெயர்கள். தெய்வத்திற்குப் பக்தி சிரத்தையுடன் தொண்டு புரிபவளே தேவதாசி/தேவடியாள்.”
“தேவதாசிகளின் மகிமையைத் தெரிந்து சாத்திரங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையாவது வைய வேண்டுமானால் ‘தேவடியாள் மகனே’ – அஃது ஒன்றே அவர்களுடைய தெய்வீக இலட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்கி நிற்கிறது”
“சாத்திரிகளைக் காட்டிலும், சத்தியமூர்த்தி சாத்திரிகள் ‘தேவதாசிகள் இருக்க வேண்டும், தேவதாசி முறையை ஒழிப்பது தெய்வ விரோதம்-சட்ட விரோதம்’ என்று கூச்சல் போட்டுப் பரப்புரை செய்யத் தொடங்குகிறார்கள்”
“நம் நாட்டில் பெண்கள் தெய்வங்களாகப் போற்றப்படுகிறார்கள் என்பது ஏமாற்றுப் பேச்சு. இந்நாட்டுப் பெண்கள் எல்லாத் துறைகளிலும் அழுத்தி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்குத் தெய்வங்களின் பேராலும் சாத்திரங்களின் பேராலும் ஒரு பெண் சமூகத்தை விபச்சாரத்திற்குத் தயாராக்கிக் கொலைபாதகம் செய்திருப்பதொன்றே போதிய சான்றாகும்.”
“தேவதாசி முறை ஒழிந்து சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டும்.”
நெருப்பைவிட அனல் மிகுந்து நெஞ்சை எரிக்கும் இந்த வரிகளை எழுதியவர் மேன்மைக்குரிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள்.
பார்ப்பனியத்தால் விதைக்கப்பட்டச் சாதியத்தை தூக்கிப்பிடித்து அலைந்து கொண்டிருக்கும் இச்சாதிய சமூகத்தில், அதனினும் கொடிய பெண்ணடிமைத் தனத்திலிருந்து பெண்விடுதலைக்காகப் பாடுப்பட்டவர்களுள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் குறிப்பிடத்தக்கவர்.
பெண்ணடிமைத் தனத்திலும் ‘தேவதாசி’ என அழைக்கப்படும் -‘பொட்டுக் கட்டி’ கோயிலுக்கு விடப்படும் அடிமைத்தனம் மிகமிகக் கொடுமை.
பருவம் எய்தாத சிறு பெண் குழந்தைகளைப் பார்ப்பனச் சடங்குகளுடன், பூசாரி அக்குழந்தையின் கழுத்தில் தாலிகட்டி, கடவுளுக்குச் சேவை செய்ய விடுவது என்பது – பொட்டுக் கட்டுதல்.
ப ருவம் எய்தியவுடன் மீண்டும் சடங்குகள் செய்து, கோயிலில் ‘பொது’ப் பெண்ணாக விட்டு, பலரும் ‘சமூக அங்கீகாரத்துடன்’ பாலியல் வன்கொடுமை செய்வதற்குப் பெயர் – தேவரடியார், தேவடியாள், தேவதாசி.
நெஞ்சம் பதறி, நாணிக்குறுகும் இந்தப் படுபாதகக் கொடுமைக்கு எதிராக, அதே சமூகத்தில் பிறந்து போராடிய பெரும் போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.
தி.பி. 1914 / கி.பி.1883 இல் கிருட்டிணன் – சின்னம்மாள் இணையரின் மகளாகப் பிறந்த இவர், சிறு அகவையில் 10 உரூபாவுக்குத் தேவதாசியாக இருந்த ஒருவரிடம் விற்கப்பட்டார்.
இவரைத் தேவதாசியாக மாற்ற முனைந்தபோது போராடி வெளியே வந்த இவர், திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறைக்கு(மாயவரத்திற்கு) அருகிலுள்ள மூவலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்.
தொடக்கக் காலத்தில் இவர் இந்தியத் தேசியப் பேராயக்(காங்கிரசுக்) கட்சியில் காந்தியின் பற்றாளராகவும், கட்சித் தேசிய உறுப்பினராகவும் இருந்தார்.
1925ஆம் ஆண்டு செங்கல்பட்டு பேராயக்கட்சி(காங்கிரசு) மாநாட்டில் வகுப்பு வாரித் தீர்மானம் குறித்த சிக்கலில், பேராயக்கட்சியை(காங்கிரசை) விட்டு வெளியேறிய தந்தை பெரியாருடன் இவரும் வந்துவிட்டார்.
பின்னர், தந்தை பெரியாரின் தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கத்தில் இணைந்து, அனைத்துப் போரட்டங்களிலும் கலந்து கொண்டு இருக்கிறார்.
1938ஆம் ஆண்டு ஆகத்து 1ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிராகத் திருச்சிராப்பள்ளியில் இருந்து சென்னை வரை நடத்தப்பட்ட 35 நாள்கள் பேரணியில், பேரணிக் கூட்டங்களில் செற்பொழிவாற்றியபடி இறுதிவரை வந்தார்.
இவரின் தமிழ் மொழிப்பற்றுக்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு.
அதே 1938ஆம் ஆண்டு இந்திமொழித் திணிப்புக்கு எதிராக, மருத்துவர் தருமாம்பாள் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட சென்னைப் பேரணியில், இராமாமிர்தம் அம்மையாரும் கலந்துகொண்டார்.
இவரோடு மயிலை சிவமுத்துவின் அக்காள் மலர்முகத்தம்மை, பாவலர் பாலசுந்திரத்தின் துணைவி பட்டம்மாள், மருத்துவர் தருமாம்பாளின் மருமகள் சித்தம்மாள், அவரின் மூன்று அகவை & ஓர் அகவை குழந்தைகளும் கைதாகி 6 வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் வேலூரில்.
இராமாமிர்தம் அம்மையார் கைம்பெண் (விதவைத்) திருமணங்களையும், சாதி மறுப்புத் திருமணங்களையும் நடத்தி வைத்திருக்கிறார்.
குஞ்சிதம் – குத்தூசி குருசாமி இணையரின் சாதி மறுப்புத் திருமணத்ததை ஏற்பாடு செய்ததில் இவரின் பங்கு பெரிது.
இவரின் அடிப்படை நோக்கமான தேவதாசி முறை ஒழிப்புக்காக, 1917ஆம் ஆண்டு முதல்முறையாக போராட்டக் களத்தில் இறங்கினார்.
அடுத்த ஆண்டு தேவதாசிப் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்டு ‘நாகபாசத்தார் சங்கம்’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்பு பின்னாளில் ‘இசை வேளாளர் சங்கம்’ என்று அழைக்கப்பட்டது.
1933 காலக்கட்டங்களில் இராமாமிர்தம் அம்மையார், கோயில் பூசாரிகளால் கட்டப்பட்டப் பொட்டுத் தாலிகளை அறுத்தெறியும் சங்கங்களை உருவாக்கினார்.
தன்மதிப்பு இயக்கத் தோழர்களும் அம்மையாருக்குத் துணையாக ஆங்காங்கு இதுபோன்ற பொட்டறுக்கும் சங்கங்களை உருவாக்கி, பெண் விடுதலைக்குப் போராடச் செய்தார்கள்.
மாயவரத்தில் நடந்த மாநாட்டில் தேவதாசிகள் பலரை அழைத்து வந்து, மேடையிலேயே பொட்டுத்தாலிகளை அறுத்தெறிந்து, அவர்களுக்கு அங்கேயே திருமணம் செய்து வைத்த வீராங்கனை இராமாமிர்தம் அம்மையார்.
1930 ஆம் ஆண்டு தேவதாசி முறையை ஒழிக்க முயன்ற, மருத்துவர் முத்துலட்சுமி(ரெட்டி) அவர்களுக்குத் துணைநின்றார். அம்முயற்சி தோல்வியில் முடிந்தது.
இருந்தாலும் அம்மையாரின் தொடர் போராட்டங்களாலும், தந்தை பெரியார் – தன்மதிப்பு இயக்கத்தின் முயற்சியாலும், 1947ஆம் ஆண்டு தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இது மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
1936ஆம் ஆண்டு இவர் எழுதிய “தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்” கதை வடிவிலான இச்சமூக சீர்திருத்த நூல், சிவகிரி கிழார்(சமீன்) வெள்ளைத்துரைச்சி நாச்சியார் உதவியினால் வெளிவந்தது.
இந்நூல் தான் முதல்முதலாகத் தேவதாசிகளின் அவலத்தை வெட்டவெளிச்சமாக்கியது.
பின் வந்த காலங்களின் இராமாமிர்தம் அம்மையார் அறிஞர் அண்ணா தலைமையின் கீழ்த் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து இறுதி வரை பணியாற்றினார்.
இவர் தமிழ், தெலுங்கு, சமக்கிருத மொழிகளில் புலமைபெற்றவர்.
இவரின் நினைவைப் போற்றும் வகையில் ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமணத் திட்டம்’ என்ற திட்டத்தை 1979ஆம் ஆண்டு தொடங்கினார் கலைஞர்.
பெண் உரிமைக்காகப் போராடிய மூவலூர் இராமாமிர்த அம்மையார் அவர்கள் ஆனி 13, 1993 / 27.6.1962 அன்று மரணத்தை தழுவிக்கொண்டார்.
இவரை நாம் மறக்கமுடியுமா?
மூத்த இதழாளர் எழில்.இளங்கோவன்
கருஞ்சட்டைத் தமிழர் : நவ.16-30, 2016
Leave a Reply