(மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி)

மறைமலையடிகள் 2/5 

  அவரது நூல்களிற் பல தமிழ்ப்பற்றையும் சமயப் பற்றையும் வளர்க்கக் கூடியவை. சில ஆராய்ச்சி அறிவை வளர்க்கக் கூடியவை. அவரது ஆழ்ந்த, அகன்ற நுண்ணறிவைப் பல நூல்களிலும் கண்டு மகிழலாம். அவற்றுள் சில அவரது அச்சகத்திலேயே அச்சிடப் பெற்றவை. சிலரது நூல்களிற் காணப்படுவதுபோன்ற அச்சுப்பிழைகள் எதையும் அவரது நூல்களிற் காணமுடியாது. அவர் தலைமை வகிக்காத, சொற்பொழிவு நிகழ்த்தாத, தமிழ்க் கழகங்களோ, சைவ சபைகளோ தமிழகத்தில் ஒன்றுகூட இல்லை.

  1914-இல் வடநாடுகளுக்கும், 1915-இல் இலங்கைக்கும் சென்று சமயச் சொற்பொழிவுகளும் தமிழ்ச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தி வந்தார். அவரது பேச்சும் எழுத்தும் இந்தியாவிலும் இலங்கை யிலும் பல புலவர்களை உண்டு பண்ணியிருக்கின்றன. இதனால், அவர் புலவர்க்குப் புலவராக விளங்கி வந்திருக்கிறார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, வடமொழியும் தமிழும் கலந்து பேசுகிற, எழுதுகிற மணிப்பிரவாள நடையே இருந்து வந்தது. அதை மாற்ற, தூய்மைப் படுத்த, அவர் எடுத்துக் கொண்ட முயற்சி, உழைத்த, உழைப்பு முதலியவை எவராலும் செய்ய முடியாதவை. தமிழ் மொழியில் ஒரு தனித் தமிழ் நடையைப் புகுத்தித், தன் காலத்திலேயே வெற்றி கண்ட ஒரு பேரறிஞர். இதனாலேயே தமிழ் அறிஞர்கள் பலர் அவரைத் ‘தனித். தமிழின் தந்தை‘ எனக் கூறுவதுண்டு. எனக்கு அவரது நட்பு ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்தது. அஃதாவது 1921இலேயே கிடைத்தது. திரிசிரபுரம் சைவ சிந்தாந்த சபையின் துணையமைச்சராய் நான் பணி புரிந்தபோது நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அவரோடு சில மணித் துளிகள் பேசிவரும் பொழுதெல்லாம் ஒரு பெரிய நூலைப் படித்து முடித்த அளவுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

  திரிசிரபுரம் சைவ சித்தாந்த சபையில் ஆண்டு விழா வொன்றை மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் நடத்தினேன். அதற்கு அவரைத் தலைமை வகிக்க அழைக்கப் பல்லாவரத்திற்குச் சென்றிருந்தேன். அவர், அச்சடித்து வைத்திருந்த பட்டியலொன்றை என்முன் நீட்டினார். அதைக் கண்டு பயந்து போனேன். அதில், அவர் தங்குமிடம் எப்படியிருக்க வேண்டும் என்பதும், படுக்கும் அறையில் இருக்க வேண்டிய பொருள்களும், காண வருவாரிடத்து இருக்க வேண்டிய பொருள்களும், இறை வழிபாட்டு அறையில் இருக்க வேண்டிய பொருள்களும், சமையலறையில் இருக்க வேண்டிய பொருள் களும் குறிக்கப் பெற்றிருந்தன. அவற்றுள்ளும் தண்ணீர் கலவாத ஆவின்பால் காலையில் காற்படி, மாலையில் அரைப்படி. நாலரை அங்குல சுற்றளவுள்ள எலுமிச்சம் பழம் நாள்தோறும் ஏழு. இரண்டடி நீளத்திற்கு மேற்படாத காய்ந்த வேம்பின் விறகு பன்னிரண்டு. முனை முறியாத பச்சரிசி, புளிப்பில்லாத தயிர், பச்சை மங்காத காய், அப்பொழுதே பிடுங்கிய கீரை என இவ்வாறு எழுதப்பெற்றிருந்ததோடு, இருக்கும் பலகையின் நீளமும், அகலமும், உயரமும், பூசைப் பொருள்களின் எண்ணிக்கையும், அவற்றின் அளவுகளும், கீழே விரிக்கும் விரிப்புகளின் எண்ணிக்கையும், அகலமும், நீளமும் குறிக்கப்பெற்றிருந்தன. இளமை முறுக்கினால் எதையும் செய்து முடித்துப் பழகிய பழக்கத்தினால் இவையனைத்தையும் தவறாது வழங்குவதாக வாக்களித்துவிட்டு, ‘வழிச் செலவுகளுக்கும் சேர்த்து இருநூறு வெண்பொற்காசுகள் கேட்கிறீர்களே? இவ்விதமானால் தங்களை அழைத்துத் தமிழ்த் தொண்டும் சைவத்தொண்டும் செய்ய என்னைப் போன்று எத்தனை பேர் முன் வருவார்கள்?’ என்று வருந்திக் கேட்டேன். அதற்கு அவர் ” ‘தா,தை’ என்று கூத்தாடுகிறவர்களிடம் இக்கேள்வியைக் கேட்பதில்லை. நான்கைந்து பாடல்களைப் பாடம் பண்ணி வைத்துப் பாடுகிறவர்களிடம் இக்கேள்வியைக் கேட்பதில்லை. அவர்களுக்கெல்லாம் ஆயிரக்கணக்கில் அள்ளிக் கொடுக்கின்ற தமிழகம், தமிழ்ப் புலவர்களிடத்தில் மட்டுமே இக்கேள்வியைக் கேட்கிறதே. இஃது ஏன் தமிழைப் படித்தீர்கள்? என்று கேட்பதுபோல் இருக்கிறது” என்றார். அதையும் வழங்குவதாக ஒப்புக்கொண்டு வந்து, அவர் குறித்த அத்தனை பொருள்களையும், அகலம், நீளம், உயரம், அளவு, எண்ணிக்கை, எடை தவறாமல் வாங்கி வைத்து விட்டேன். இதற்கு எனக்கு ஆறு நாட்கள் பிடித்தன. அவர் இரண்டு நாள் தங்குவதற்காகக் கேட்டிருந்த அமைப்பில் திருச்சிராப்பள்ளியிலேயே வீடுகள் இல்லை. இருந்த இரண்டொரு வீடுகளும் காலியாக இல்லை. அளவு கடந்த முயற்சி எடுத்து அதையும் கண்டு பிடித்து வழங்கி, ஒரு பெரிய போரில் வெற்றி பெற்றதைப் போன்று மகிழ்ந்தேன்.

(தொடரும்)

கி.ஆ.பெ.விசுவநாதம்

எனது நண்பர்கள்