புறநானூற்றுச் சிறுகதைகள்

3. ஊசி முனை

  அப்போது நகரத்திலே திருவிழா சமயம் விழாவின் கோலாகலமும் ஆரவாரமும் நகரெங்கும் நிறைந்து காணப் பட்டன. ஊரே அந்தத் திருவிழாவில் இரண்டறக் கலந்து ஈடுபட்டிருந்தது. ‘விழா என்றால் மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்?

  ஆனால், இந்த மகிழ்ச்சியில் தனக்கும் பங்கு வேண்டும் என்பதுபோல மழை இடைவிடாமல் பெய்து கொண்டிருந்தது. திருவிழா ஆரவாரத்தின் விறுவிறுப்பை அதிகப்படுத்தியிருந்தது இந்த மழை.

  மழையில் நனைந்து கொண்டும் விழா காண்பதற்காக நகர வீதிகளில் பொங்கி வழிந்து கொண்டிருந்தது மக்கள் வெள்ளம். இந்த மக்கள் வெள்ளத்திற்கு இடையிலேதான் நம்முடைய கதாநாயகனை நாம் சந்திக்க முடிகின்றது. அவனும் விழாக் காண்பதற்குத்தான் மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தான். அந்தநகரத்தைச் சேர்ந்த படைவீரர்களின் தளபதிகளில் அவனும் ஒருவன். அவன், மனைவியையும் விழாவுக்கு அழைத்துக் கொண்டுவர முடியாமற் போயிற்றே என்ற ஏக்கத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தான்.

  வீட்டில் அவன் மனைவிக்கு நிறைமாதம். இன்றோ நாளையோ பேறு காலமாக அமையலாம். அத்தகைய நிலையில் அவள் எப்படி விழா காண்பதற்கு வெளியே வர முடியும்? அவனை மட்டும் விழாவுக்குச் சென்று வருமாறு கூறி விடை கொடுத்து அனுப்பியிருந்தாள். அவளை அந்த நிலையில் விட்டுப் பிரிந்துசெல்ல அவனுக்கும்.மனம் இல்லைதான். ஆனால் அவளே வற்புறுத்தி வேண்டிக் கொண்டதனால் அவன் மறுக்காமல் ஊர் விழாவிலே தானும் பங்குகொள்ள வேண்டியதாயிற்று. வீட்டில் அவளுக்கு எப்படி இருக்கிறதோ? என்ன செய்கிறதோ? – என்ற சிந்தனையோடு கூட்டத்தில் மெல்ல, மழையில் நனைந்தபடியே நடந்து கொண்டிருந்தான் அவன். திடீரென்று வீதியில் காதுகள் செவிடுபடும்படி முரசொலி எழுந்தது! அவன் திடுக்கிட்டான். ஆம். அது போர் அறிவிப்பு முரசின் ஒலி, யாரோ ஒர் அரசன் திருவிழா நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அந்த நகரத்தின் மேல் உடனடியாகத் தன் படைகளோடு முற்றுகையிட வந்திருந்தான். அரண்மனையின் முக்கியமான தளபதிகளில் அவனும் ஒருவனாயிற்றே. உடனே அவன் அரண்மனைக்கு ஓடோடிச் செல்ல எண்ணினான்.

  போர் அறிவிப்பு ஒலியைக் கேட்டவுடன் திருவிழா கூட்டம் பரபரப்பாகக் கலைந்துவிட்டது. எங்கும் திகைப்பும் கலவரமும் நிறைந்தன. தளபதி அரண்மனைக்கு விரைந்தான். எதிரே அவனைச் சந்தித்த ஒருவர் அவனுடைய மனைவிக்கும் மகப்பேறு ஆகிவிட்ட செய்தியை அவசரமாக அவனிடம் கூறினார். இந்த இக்கட்டான நிலையில் மனைவியைக் காணப் போவதா? போருக்கு வந்த பகைவனுக்கு அறிவுபுகட்ட அரண்மனை சென்று போர்க்களம் புகுவதா? அவன் ஒரு விநாடி தயங்கினான். ஒருபுறம் காதல் மனையாளை, மகப்பேறுற்ற நிலையிற்கான வேண்டும் என்ற ஆசை மறுபுறம், பிறந்து வளர்ந்த தாய் நாட்டைக் காப்பதற்குக் களம்புக வேண்டிய கடமை, தளபதி என்ற பதவிப் பொறுப்பு வேறு அவன் கடமையை வற்புறுத்தியது. இரண்டு முனைகளும் கூர்மையான ஒர் ஊசியின் முனைகளைப்போலப் பற்றுவது எதை என்ற சிந்தனை அவனுள் எழுந்தது. இருள் சூழும் நேரத்தில் இருட்டுவதற்குள் கட்டிலைப் பின்னிவிட வேண்டும் என்ற ஆத்திரத்தில் கயிற்றையும் கோனுசியையும் வேகவேகமாகக் குத்தி இழுக்கும் கட்டில் கட்டுபவன் கையிலுள்ள ஊசியின் துனிபோல விரைந்தது அவன் மனம்.

  ஊசிமுனை பாயும் வேகத்தில் கடமையின் பக்கம் தாவிப் பாய்ந்தது அவன் மனம். ‘என் மனைவியைவிடப் பெரியது நாட்டின் உரிமை, அதைக் காப்பது என் உயிரினும் சிறந்த கடமை’ என்றெண்ணிக் கொண்டே அரண்மனையை நோக்கி ஓடினான் அவன்!

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணிற்றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர்கொளிங்ந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே. (புறநானூறு-8)

(சாறு = திருவிழா, தலைக் கொள்ளல் = தொடங்குதல், பெண்ஈற்று = மனைவியின் பிள்ளைப்பேறு, மாரி ஞான்ற = மழை பெய்ய, நிணக்கும் = உண்டாக்குகின்ற, இழிசினன் = மலைமகன், போழ்துரண்டு ஊசி = கயிற்றை இழுத்துத் தைக்கும் கூரிய ஊசி, பொருநன் = பகைவன், ஆர்புனை = மாலையணிந்த, நெடுந்தகை = வீரன்)

தீபம் நா. பார்த்தசாரதி