தலைப்பு-மாணிக்கனாரின் சொல் நேர்த்தி, அ.அறிவுநம்பி :thalaippu_maanikkanaarin_solknethi_arivunambi

மாணிக்கனாரின் சொல் நேர்த்தி!

  எழுத்து பேச்சு எதுவாக இருந்தாலும் ஒருவருடைய வெற்றிக்கு அவர் செதுக்குகின்ற சொற்களே அடிப்படைக் காரணமாக அமையும்.
சிலப்பதிகார இலக்கிய மேடை ஒன்றில் உதிர்க்கப்பெற்ற சில சொற்களை இங்கே அடுக்கிப் பார்க்கலாம். “கோவலன் இறந்தவுடனேயே கண்ணகியும் இறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? கள்வன் ஒருவன் இறந்தான் என்பதற்கு நாணி கள்வி ஒருத்தியும் மறைந்தாள் எனப் பேசப்பெறுமே தவிர அவளைக் கற்பி என உலகு போற்றியிருக்குமா?” இப்பகுதியில் ‘கள்வன்’ என்ற ஆண்பாலுக்குரிய பெண்பாலாகக் ‘கள்வி’ என வருதலும் கற்புடை மங்கை என்ற பொருளை உணர்த்தக் ‘கற்பி’ என வருதலும் தமிழுக்கான புதுச்சொல் வரவுகள். கள்வி எனச் சில செய்யுள்களில் வருவதாகக் கூறப்பெறினும் தமிழ் உரைநடையில் செறிவும் செழுமையும் நிறைந்து அமைந்தவை இச்சொல்லாடல்கள். இவற்றை மொழிந்தவர் மூதறிஞர் முனைவர் வ.சுப.மாணிக்கனார்.

பண்டிதமணி கதிரேசனிடம் தமிழ் கற்றவரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பங்காற்றியவருமான செம்மல் வ.சுப.மாணிக்கம் சின்னஞ்சிறு சொற்களுக்குள்ளே கூடச் செந்தமிழை நிறைத்தவர்; தான் கற்ற நூல்களில் தமிழ்ச் சொற்களின் நிமிர்ச்சியைக் கண்டவர்; தான் கண்டெடுத்த அருமைச் சொற்களை மொழிந்தவர்.

ஒரு பதச்சோறு வருமாறு: கம்பன் பாடல்களில் புகழ்பெற்ற ஒரு பாடலின் நிறைவு வரியாக “ஏழிரண்டாண்டின் வாவென்று இயம்பினன் அரசன் என்றாள்” என்ற வரி ஒளிரும். ஆணையிடுபவன் தந்தையும் அரசனுமான தயரதன்; இங்கே கதை மாந்தரின் நிலைப்படி ஏவினன் என்று வருவதுதான் முறையே தவிர இயம்பினன் என்ற சொல் பொருத்தமுடையதாக அமையவில்லை எனக் கருதுகிறார் மாணிக்கம். அவ்வாறு ஒரு சொல் மாற்றம் (பாடபேதம்) உள்ளதெனவும் கண்டறிந்த அவர், காப்பியப் பக்கங்களை மீண்டும் மீண்டும் அலசுகின்றார்.
மரபு, நடைமுறை, உளவியல் போன்ற கூறுகளின் அடிப்படையில் தந்தை ஒருவன் தன்மகனுக்குக் கட்டளையிடுவதே முறைமையாகும். ஒரே நிலையில் வாழும் இருவரிடம் இடம்பெறுவதே இயம்புதல் என்ற சொல். அச்சொல் இங்கே ஏற்புடையதில்லை என்ற தன் கருத்தை நிறுவ அவர் பட்ட தொல்லைகள் பற்பல. காப்பியத்தின் வேறிடங்களில் வரும் நிகழ்வுகளில் காப்பியப் புலவன் இழைத்தளித்த சொற்களைத் தரங்காண்கிறார் அவர்.

“என்று பின்னரும் மன்னன் ஏவியது”
 “ஏவிய குரிசல் யாவர் ஏகிலார்”
 “தெருளுடை மனத்து மன்னன் ஏவலிற்றிறம்ப”

போன்ற மணிவரிகளைத் தெளிவுற நிரல்படுத்துகிறார் வ.சுப.மா.

 “தாதை ஏவலின் மாதொடு போந்து”  கானகம் கண்ட காகுத்தன் கதையில் தயரதன் மொழிந்தது இயம்புதல் அன்று; ஏவல் மட்டுமே எனத் தெளிவுறுத்த அவர் மேற்கொண்ட கடுமையான உழைப்பே அடித்தளமானது. பொருத்தமான சொல்லும் நமக்குப் பரிமாறப்பெற்றது.

 மதுரையில் துணைவேந்தராகப் பணிபுரிந்தபோது உணவுச்சாலைக்கு (Canteen) ‘உண்டியகம்’ எனவும், ஆசிரியர் குடியிருப்புப் பகுதிக்கு (Quarters) ‘குடிமனை’ எனவும், விருந்தினருக்கான ஓய்விடத்திற்கு (Main Guest House) ‘முதன்மை விருந்தில்லம்’ எனவும் பெயர்சூட்டி, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் தங்கத்தமிழை வளர்த்தெடுத்ததையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

 “சொல்லுக சொல்லிற் பயனுடைய” என்ற வள்ளுவம் மாணிக்கனாரின் வாழ்க்கைப் பாடமானது. அமைதியாக உட்கார்ந்து எழுதும்போது மட்டுமல்லாமல் சட்டென்று மேடைக்கு வரும்போதும் அவர் நெய்துதரும் சொல்லாட்சிகள் கவனத்துக்குரியன ஆகும்.

  காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்வினை இங்கு பதிவு செய்வது தக்கது. மாணவர்கட்கான மேடைப் பொழிவுக் கலையை வளர்க்கக் ‘கலைக்கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கினார் அவர்.

  ஒருநாள் அரங்கில் மாணிக்கனாரும் ஏனைய பேராசிரியர்களும் அமர்ந்திருந்தனர். பேசிப் பழக மேடையேறிய மாணவருக்குப் பேச நா எழவில்லை. ஓரிரு மணித்துளிகள் கடந்தபின் தன் சட்டைப் பையில் வைத்திருந்த ஒருபக்கக் காகிதத்தை எடுத்து கிடுகிடு என அதில் எழுதியிருந்த கருத்துகளை உரத்து வாசித்துவிட்டு அமர்ந்துகொண்டார். பார்வையாளர்கள் பக்கம் அந்த மாணவர் திரும்பவேயில்லை.
நிறைவாக வ.சுப.மா. மேடையேறினார். செந்தமிழ், நாப்பழக்கம் ஆகவேண்டுமென உரைத்து, “முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உயர்ச்சி தானே இடம்பெறும்” என்றார். அவ்வுரையின் நிறைவில் அவர்கூறிய தொடர் குறிக்கத்தக்கது. மாணவர்கட்கு வழிகாட்டிய பிறகு நிறைவில் அவர் மொழிந்த சொல்வரிசை:

 “ஆள்முகம் பார்த்துப் பேச வேண்டுமே தவிரத்
 தாள்முகம் பார்த்துப் பேசக்கூடாது!”
 

 – முனைவர் அ. அறிவுநம்பி
 

  [17.4.2016 வ.சுப.மாணிக்கனாரின்
 நூற்றாண்டுத் தொடக்கம்.]

தினமணி

Dinamani-logo-main