(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 9. தமிழ் வளர்ச்சிப் பணிகளில் உரிய வளர்ச்சி தேவை.)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்:

10. முதல்வர் சாட்டையை எடுக்க வேண்டும்!

தமிழுக்குச் செய்ய வேண்டியவற்றை அரசு மட்டும் செய்தால் போதும் என மக்கள் வாளாவிருந்துவிடுகின்றனர். அரசுத் துறைகளோ தமிழ் வளர்ச்சித்துறையோ மட்டும் தமிழ் வளர்த்தால் போதும் என நாம் எண்ணுவது தவறாகும். மக்கள் குடும்பத்தில், வணிகத்தில், கல்வியில், அச்சகங்களில், அழைப்பிதழ்களில், மண்டபங்களில், கதைகளில், கவிதைகளில், கட்டுரைகளில், திரைப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், திருமணங்களில், பிறந்தநாள் விழாக்களில், பிற விழாக்களில், இதழ்களில், காட்சி ஊடகங்களில், வழிபாடல்களில், இசை நாட்டிய நாடகங்களில், சடங்குகளில், உணவகங்களில், உறைவகங்களில்(தங்கும் விடுதிகளில்),   நூலகங்களில், மருத்துவ மனைகளில், நல வாழ்வு மையங்களில், பொது அலுவலகங்களில், தொழில்களில், அன்றாடப் பயன்பாடுகளில் என அடுக்கிக் கொண்டே போகும் வகையில் தமிழ்ப்பயன்பாட்டை நிறைவாகக் காண வேண்டியது குறித்துக் கூற வேண்டியுள்ளது. அரசு செய்ய வேண்டிய பொறுப்புகளும் மிகுதியாக உள்ளன. அவற்றைப்  பின்னர்க் கூறலாம் என எண்ணினோம். ஆனால், எதற்கும் அரசு முன்மாதிரியாக இருக்க வேண்டும் அல்லவா? அரசு அலுவலர்கள் தமிழை மறப்பதால் நாம் மீண்டும் மீண்டும் அரசைப்பற்றிக் கூற வேண்டியுள்ளது.

கோவை மாநகரக் காவல் துறை சார்பில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ‘போலீசு அக்கா’ திட்டத்தை மாநகரக்  காவல் ஆணையர் தொடங்கி வைத்துள்ளார்.

மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும், ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலர் என்ற முறையில் 37 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளைத் தொடர்பு கொண்டு அவர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களுக்கு ஏற்படும் உளவியல் வகையிலான, பாலியல் முறையிலான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது போன்ற பணிகளை மேற்கொள்வர்.  கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்களைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பது, போதைப் பொருட்கள் விற்பனை முதலியவற்றைக் கண்காணித்து, கண்டறிந்து காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்வது போன்ற பணிகளையும் செய்வர். இத்திட்டம் அருமையான திட்டம். இதனைப் பள்ளி மாணவியருக்கும் விரிவாக்க வேண்டும். பின்னர் பிற இளம் பெண்களுக்கும் விரிவாக்கலாம்.

இத்திட்டத்தை மனமுவந்து பாராட்ட வரும் பொழுது திட்டத்தின் பெயர் குறுக்கே நிற்கிறது. ‘அக்கா’ என்னும் பொழுது உரிமையும் நெருக்கமும் வந்து விடுகிறது என்பதால் அவ்வாறே குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால், ‘போலீசு அக்கா’ என்று ஏன் சொல்ல வேண்டும்? தமிழில் முழுமையாகப் பெயர் சூட்டத் தொடர்புடையவர்களுக்குத் தெரியவில்லையா? போலீசு என்பதையும் தமிழில் குறிப்பி்டத் தெரியவில்லையா? ஆங்கிலேயர்களோ ஆங்கிலேயர்களுக்குப் பிறந்தவர்களோ ஆங்கில நாட்டிலோ ஆங்கிலத்தில் பெயர் சூட்டினால் இயல்பாகக் கருதலாம். ஆனால், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டு மாணாக்கியர்களுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு ஆங்கிலத்திற்குப் பெயர் எதற்கு? திருந்தவே மாட்டார்களா? முதல்வர் சாட்டை எடுத்துச் சுழற்றினால்தான் தமிழ் நினைவிற்கு வருமா?

தமிழில் ‘காவல் அக்கா’ எனக் கூறுவதற்கு என்ன சிக்கல்? ‘போலீசு’ என்னும் சொல்லின் மூல இலத்தீன் சொல்லின் பொருள் ‘அரசு’. அண்மைக்காலங்களில்தான் சட்டம் ஒழுங்கைப் பேணும் துறையைக் குறித்தது. தமிழில் காவல் என்கிறோம். இப்பணி புரிபவரைக் காவலன் என்கிறோம். காவலன் என்பது தமிழில் ஆட்சியாளரையும் குறிக்கும். ஆக உயர்வான சொல்தான் இது. எனினும் காவல் அக்கா என்று சொல்ல விரும்பவில்லையேல் ‘உங்கள் அக்கா‘ அல்லது ‘என் அக்கா‘ எனலாம். “காவல்துறையின் ‘உங்கள் அக்கா’ அல்லது ‘என் அக்கா’” என விளம்பரப்படுத்தலாம். காவல் அக்காவிற்கான முத்திரையும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. (முத்திரைப் படத்தை மாற்றினால் நன்று.) காவல் துறையின் முத்திரையே ஆங்கிலத்திலும் ஆங்கில முழக்கத்திலும்தான் உள்ளது. தலையே அவ்வாறு இருக்கும்போது வாலும் அப்படித்தானே இருக்கும்.

ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

என்றார் பாரதியார். தமிழக அதிகாரிகளோ ‘போலீசு’ என்பதுபோன்ற அயற்சொற்களை யெல்லாம் தெருவெல்லாம் முழங்கச் செய்கிறார்கள்.

“தமிழ்ப் பண்டிதர்களே! தமிழ்ச்சனங்களே சாக்கிரதை! சாக்கிரதை! உங்களுடைய மொழியைக் காப்பாற்றுங்கள். ஒரு சன சமூகத்திற்கு உயிர் அதன் மொழிதான். தமிழ் மொழி அழிந்துவிட்டால் தமிழர்களின் சிறப்பும், சீரும் அழிந்துவிடும். தமிழ் மொழியில் தேவையான பதங்கள் இல்லையென்று வாய் கூசாமல் கூறுகின்ற பாரதப் புத்திரர்களுக்கு அப்பதங்களை ஆராய்ந்து கண்டுபிடித்துக் கொடுங்கள். சரியான பதங்கள் இல்லையேல் தமிழ் வாணியின் கிருபை கொண்டு இன்னும் அநேக காரணப் பெயர்களையாக்கிக் கொள்ளுங்கள்.

   உங்கள் நா தமிழே பேசுக! நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக! உங்களுடைய இருதயம் தமிழையே நாடுக! உங்களையெல்லாம் தமிழ் மாது தயையுடன் இரட்சித்திடுக!” என்கிறார் சுப்பிரமணிய சிவா(ஞானபாநு, செப்டம்பர், 1915) (இதனை ஒவ்வோர் அலுவலகத்திலும் எழுதி வைக்க வேண்டும்.)

காவல் துறையில் மட்டுமல்ல. பார்க்குமிடங்களி லெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது ஆங்கிலம்தான். அரசு பலமுறை ஆணை வாயிலாகவும் அறிக்கை வாயிலாகவும் அறிவுறுத்தியும் தமிழ்நாட்டிலுள்ள பெயர்ப்பலகைகள் பலவும் ஆங்கிலத்திலேயே காட்சி அளிக்கின்றன. தமிழில் கையொப்பமும் சுருக்கொப்பமும் இடாதவர் மிகுதியாக உள்ளனர். ஆணைகள் இருந்தும் இவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்த இயலவில்லை என்றால் அதற்கான துறைகள் ஏன் தேவை?

சென்னைப் பல்கலைக்கழகம் கூட ஆங்கிலத்தில் இன்னும் மெட்ராசு யூனிவர்சிட்டிதான்(University of Madras). சென்னை யூனிவர்சிட்டி என்று குறிக்கப்பெறவில்லை. மெட்ராசு என்பதைச் சென்னை என 1996இலேயே மாற்றிவிட்டோம். பெயர்ப்பலகையிலாவது சென்னை உயர்நீதிமன்றம் எனத் தமிழில் குறிக்க இயலாதா? உலகில் பல நாடுகள், நகரங்கள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அங்கெல்லாம் உடனடியாக பழைய பெயர் இருந்த இடங்களில் எல்லாம் அவை நீக்கப்பட்டுப் புதிய பெயர் நடைமுறைக்கு வந்து விடுகிறது. இங்கே பெயரளவிற்குத் தமிழர் ஆட்சி நடைபெறுவதால் அரசின் அறிவிப்பை அதன் கட்டுப்பாட்டிலுள்ள துறைகள்  நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. தத்தம் செல்வாக்கால் பழைய பெயர்களையே பயன்படுத்துகின்றனர்.

தன் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களைக் கட்டுப்படுத்த இயலாத அரசுகளால், அரசின் கொள்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலவில்லை. இதுவேதான் ஆட்சிமொழிக்கொள்கையிலும் நிகழ்ந்து கையாலாகத் தன்மை மேலோங்குகிறது

1960களில் ஒன்றியப் பொதுப்பணித் தேர்வாணையத்தில் இந்தி முதலிய மொழிகளில் தேர்வு எழுதலாம் என அறிவித்தபோது தமிழிலும் எழுத வாய்ப்பை வேண்டினார்கள். கல்லூரிகளில் தமிழைப் பாடமொழியாக ஆக்காமல் தமிழில் படிக்காமல் எவ்வாறு தமிழில் தேர்வுகள் எழுத இயலும்  எனத் தேர்வாணையம் அப்போது மறுத்து விட்டது. இப்பொழுது நாம் ஒன்றிய ஆட்சிமொழியாகத் தமிழையும் ஏற்க வேண்டுகிறோம். தமிழ்நாட்டில் ஆட்சித்தமிழ்த் திட்டத்தைக் கேலிக்கூத்தாகச் செயலாக்கிக் கொண்டிருக்கும்போது, இங்கே வந்து குரல் கொடுக்கிறார்களே என அங்கே உள்ளவர்கள் எண்ண மாட்டார்களா?

“வாய்ச்சொல்லில் வீரரடி”

எனப் பாரதியார் போல் அவர்கள் எண்ண மாட்டார்களா?

“மந்திரத் தாலேயெங்கும் – கிளியே

மாங்கனி வீழ்வதுண்டோ?”

தமிழ் தமிழ் என்று

“செப்பித் திரிவாரடி கிளியே

செய்வதறியாரடி கிளியே”

என்று பாரதியா் இன்றிருந்தால் சொல்லியிருக்க மாட்டாரா?

எனவே, தமிழ்நாட்டில் முழுமையாகத் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும். அது வரை ஒன்றியத்தில் தமிழும் ஆட்சி மொழி எனக் குரல்கொடுக்கக் கூடாது.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்

(திருவள்ளுவர், திருக்குறள் 200)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

ஐப்பசி 05, 2053/ 22.10.2022