தலைப்பு.முதல்வர் நலம்-இலக்குவனார் திருவள்ளுவன் ; thalaippu_muthalvarnalam_perattum_thiru

முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்!

 

  தமிழக முதல்வர் செயலலிதா உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனை  ஒன்றில் கடந்த புரட்டாசி 06, 2047 / 22.09.16 அன்று சேர்க்கப்பட்டார். காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடுமே நலக்கேட்டிற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையில் சேர்ந்த பின்னர், சருக்கரை மிகுதி, நுரையீரல் பாதிப்பு, அவ்வப்பொழுது மூச்சிரைப்பு போன்ற காரணங்களும் சொல்லப்படுகின்றன. தன் கட்சித்தொண்டர்களால் ‘அம்மா’ எனப் பாசத்துடன் அழைக்கப்படும் அவர், அன்பர்களின் வேண்டுதலால் விரைவில் நலம்  பெறுவார் என எதிர்பார்க்கிறோம். தமிழ் மருத்துவத்தையும் கடைப்பிடித்தார்கள் எனில், விரைவில் நன்னிலையடைவார் எனலாம். முதல்வர் செயலலிதா சுறுசுறுப்பாக இயங்கும் வகையில் விரைவில் முழு நலன் பெற வாழ்த்துகிறோம்!

  இதே நேரம் அவர் உடல்நிலை குறித்த  வெளிப்படையான போக்கு இன்மையில் புரளிகள் பலவகையாகப் பரவுகின்றன; புரளிகள் அவரது அன்பர்களுக்குப் பெருங்கவலையையும்  மன உளைச்சலையும் தருகின்றன.

  புரளிகள் யாவும் வேண்டுமென்றே உருவாக்கப்படுகின்றன என்று சொல்ல இயலாது. அவரின் உடல்நிலைபற்றிச் சரிவர எடுத்துரைக்கப்படாதபொழுது  ஊகங்கள் ஊர்வலம் வருவதைத் தடுத்திட முடியாது! அன்பர்களும் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என எண்ணிப் பலவாறாகப் பேசுவதைத் தடுத்திட இயலாது.

  அவரவர் ஊகங்களுக்கேற்ப முதல்வரின் உடல்நிலை பந்தாடப்படுவதைவிட, எந்த நிலையில் இருந்தாலும் அதை வெளிப்படையாகத் தொடர்புடையவர்கள் அறிவிப்பதே முறையாகும். இதையே அனைத்துக் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

  இதே நேரம் சேர்க்கப்பட்ட மருத்துவமனை குறித்தும் கூறப்படும் தகவல்களை நாம் குறிப்பிட வேண்டும்.

  உலகத்தரத்தில்  அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைத்து இருப்பதாக அரசே அறிவித்துள்ள பொழுது, முதல்வரைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளது ஏன் என்பது ஒரு சாராரால் எழுப்பப்படும் வினா.

  முதல்வர் செயலலிதா எங்கே தங்கினாலும் அவரது அறை அமைந்துள்ள தளம் முழுவதுமே காவல்துறைக்கட்டுப்பாட்டில் அல்லது முதல்வர் செயலகக் கட்டுப்பாட்டில் இருப்பதே நடைமுறையாக உள்ளது. அப்படித்தான் இப்பொழுது தங்கியுள்ள மருத்துவமனையிலும் ஒரு தளம் முழுவதுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது சரியா, தவறா என்பது வேறு செய்தி. ஆனால், இவ்வாறு அரசு மருத்துவமனையில் தளம் முழுவதையும் காலி செய்ய முடியாது. பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளுக்கு ஏழை எளிய மக்கள்தாம்  வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் செல்வர்களால், வேறு மருத்துவமனைக்குச் செல்வதுபோல் ஏழை எளிய மக்களால் மருத்துவமனை மாற இயலாது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறு நேரா வண்ணம் தனியார் மருத்துவமனையில்  சேர்த்தது சிறந்ததே!

  தனியார்மருத்துவமனையாக இருந்தாலும் செல்வ நிலையில் இருந்தாலும் நோயர்களுக்கு இடையூறு தரக்கூடாது. ஆனால், புதிய நோயர்களைச் சேர்ப்பதில்லை என்றும் தொடர் ஆய்வுகளுக்கு வரும நோயர்களைப் பின்னர் வருமாறு திருப்பி யனுப்புவதாகவும் செய்திகள் வருகின்றன. இவை யெல்லாம் நோயர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் துன்பம் தருவதுடன், நோயர்களின் உடல்நிலை முன்னேற்றத்திற்கும் தடைகளாக அமைவன. எனவே, இத்தகைய அழுகுரல்கள் வராவண்ணம் மருத்துவமனையைச் செயல்பட வைக்க வேண்டும். மருத்துவமனையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களால்தான் இஃது இயலும். எனவே, அனைத்து நோயர்களையும் சமமாகக் கருத வேண்டும் என்பதை நினைவில் கொண்டு பிறருக்குஇயல்பான மருத்துவவாழ்வு அமைய வழி விடட்டும்.

  முதல்வர் நலமுடன் எழுந்து வந்து தன் திருமுகத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான அவரின்அன்பர்கள் மருத்துவமனை முன்னர் காத்துள்ளனர். அவர் நலத்தை எதிர்நோக்கியுள்ள சூழலில் சிலர் ஒப்பாரி வைத்து அழுவது ஏற்புடைத்தல்ல. இறைப்பற்றிலும் பகுத்தறிவு தேவை.  ஆனால், மூடநம்பிக்கையின் அடிப்படையில் வேண்டுதல்கள் செய்வோரும் உள்ளனர். இவர்கள் யாரும் மருத்துவமனையில் கூடாதவாறும்  அவரவர் இல்லங்கள் அல்லது ஊர்கள் அல்லது விரும்பக்கூடிய கோயிலுக்குச்சென்று வழி படட்டும் என அறிவித்து, யாரும் அங்கே கூடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கோப்பெருஞ்சோழன்  பிசிராந்தையார்  நட்பு போன்ற நட்பு முதல்வர் செயலலிதா – தோழி சசிகலா நட்பு. முன்னவர் வாழ்விலும் தாழ்விலும் உறுதுணையாக இருப்பவர் பின்னவர். எனவே, அவர் கனிவுடனும் கருத்துடனும் தன் தோழியைக் கவனித்துக்கொள்வார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.  ஆனால், இது தொடர்பாகவும் தவறான தகவல்களைச் சிலர் தெரிவிக்கின்றனர்.  இது குறித்த ஐயப்பாட்டினைப் பரப்புவது உள் நோக்கம் கொண்டது. அவர் மீது இவர் வைத்துள்ள அக்கறை பிறரது அக்கறையைவிடக் கூடுதலானது. எனவே,  இது குறித்தும் தவறாகப் பரப்ப வேண்டா.

 புரளியைப் பரப்ப வேண்டா என்னும் பொழுது அவ்வாறு பரப்புவதற்கான வாய்ப்பையும் நல்கக்கூடாதல்லவா? பொய்யை விட அரைகுறை உண்மையே பெருந்துன்பத்தை விளைவிக்கும். மருத்துவக்கருவிகள் பொருத்தப்பட்ட சூழலிலோ மருந்துகளில் தாக்கத்தால் ஏற்படும் மயக்கநிலைச் சூழலிலோ அவரால் பேச முடியாதவாறு இருக்கலாம். அதனைத் தெரிவிப்பது  தவறல்ல. ஆளுநர் பார்த்தபொழுது கூட, “வணக்கம் தெரிவித்தார்; நலம் உசாவியதற்கு நன்றி தெரிவித்தார்” என்பன போன்ற செய்திகள் வராமையால், தீவிரக் கவனிப்புப்பிரிவின் உள்ளே செல்ல இயலாமல் அறைக்கண்ணாடி வழியாகப் பார்த்திருக்கவே வாய்ப்பு உள்ளது என மக்கள் எண்ணுகிறார்கள்.  உண்மை இதுதான் என்றால் அதனைத் தெரிவிப்பதில் என்ன சிக்கல்? அல்லது “நன்கு பேசக்கூடிய நிலையில் உள்ளார் எனில் அதைத்  தெரிவிக்கலாமே! காணொளி மூலம்  உணர்த்தலாமே!” என்கின்றனர் மக்கள்.

 இந்த நேரம் பேரறிஞர் அண்ணா நலக்குறைவுடன் இருந்தபொழுது  அவரைப் படம்பிடித்து மிகுந்த ஒளிபடும்படிச்செய்து அவரைக் கலைஞர் கருணாநிதி கொன்றுவிட்டார் என்று இன்றும்  ஒரு சாரார்  பழி சுமத்துவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.  எனவே, அதனைத் தவிர்ப்பது நல்லதுதான். ஆனால்,  அலைபேசி அல்லது பகிர்பேசிவாயிலாக முதல்வர் செயலலிதா, தான்  விரைவில் நலத்துடன் திரும்புவேன் எனச் சொல்லி மக்களை அமைதியில் ஆழ்த்தலாம் அல்லவா?

   எனவே,  ஏதேனும் தக்க வழியில் புரளி எழாதவண்ணம் முதல்வரின் உடல்நிலையை மக்களுக்கு உணர்த்த வேண்டும்!

  முதல்வரும் விரைவில் நலம் பெற்று உற்சாகமாக இயல்பு வாழ்க்கையில்  ஈடுபடவேண்டும்!

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல். (திருவள்ளுவர், திருக்குறள் 948)

 முதல்வருக்கு வந்துள்ள நோயையும் தணித்து, அதைமறைப்பதால் எழும் புரளிகளையும் தணித்து, அவற்றால் அன்பர்களுக்கு ஏற்படும் துன்பத்தையும் தணிர்ப்பார்களாக!

முதல்வர் செயலலிதா வாழ்க நலமாக நூறாண்டு!

இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

அகரமுதல 154, புரட்டாசி 16, 2047 / அட்டோபர் 02, 2016

அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo