முதியோர் கொலை – வைகை அனிசு
பெண்குழந்தைக்கொலைபோல்
முதியோர் கொலை தொடரும் பேரிடர்!
“வீடு வரை உறவு, வீதிவரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ” என ஒலிபெருக்கி அலறினால் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்று பொருள். இது தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று. இதேபோன்று வடமாவட்டங்களில் முதியவர் கொலை அரங்கேறி வருகிறது. தற்பொழுதுள்ள பொருளாதாரச் சூழ்நிலையால் நடுத்தரக் குடும்பத்தில், தங்களுடைய போலி மதிப்பைக் காப்பாற்ற பிள்ளையே தன்னைப்பெற்ற அப்பா, அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் அவலமும் நடக்கின்றது. மேற்கத்திய உலகத்தை ஆட்டிப்படைத்த முதியோர் இல்லங்கள் தமிழகத்திலும் நுகர்வுப்பண்பாடாக மாறிவிட்டது.
தென்மாவட்டங்களில் உள்ள பல குடும்பங்கள் பஞ்சம் பிழைக்க குசராத்து, அசாம், மும்பை போன்ற பகுதிகளுக்கு முறுக்கு, நிதி, தவணைமுறையில் விற்பனை செய்வது போன்றவற்றைச் செய்து வருகின்றன. சில குடும்பங்கள், இதற்குத் தடையாக இருப்பது தங்களுடைய பெற்றோர்கள் என எண்ணுகிறார்கள். இதற்காக முதியவர்களைக் கொலை செய்துவருகிறார்கள். தென்னை மரத்தில் வைக்கப்படும் மாத்திரை, பூச்சிக்கொல்லிகளுக்கு அடிக்கப்படும் ‘நுவாக்ரான்’, ‘பால்டாயில்’ போன்ற மருந்துகளை வைத்துக் கதையை முடித்துவிடுவார்கள். இதற்காக முதியவர்களை அழைத்து அவர்களுக்கு ஆசையாக என்ன வேண்டுமோ அதனை வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். அதன்பின்னர் முழுநிலா(பௌர்ணமி), இருள்நிலா(அமாவாசை) நாள்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்துப் பலமணிநேரம் ஊறவைத்துக் குளிக்கவைப்பார்கள். இது பெரும்பாலும் ஐப்பசி, மார்கழி மாதங்களில் நடைபெறும். ஐப்பசி, மார்கழி மாதங்களில் பனி அதிகம் இருக்கும். இதில் இயற்கையாகவே மரணம் நிகழும். இம்மாதிரியான இயற்கை மரணத்தைக் காட்டி கொலை செய்யும் பழக்கம் நடைபெற்று வருகிறது. இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தொலைவுகளில் உள்ள உறவினர்களுக்குத் தகவல் பறக்கும். அதன்பின்னர் உற்றார், உறவினர்களை வரவழைத்து தன்னைப் பெற்ற தாய், தந்தையரைப் பார்க்கவிட்டு அதன்பின்னர் கருணைக்கொலையை அரங்கேற்றுவார்கள். போலி மருத்துவர்கள் மூலம் ஆட்களைக் கொலை செய்யும் மருந்துகளை ஏற்றிக் கொலை செய்வார்கள் இது ஒரு வகை. மற்றொரு வகை தென்னை மரத்திற்கு வைக்கும் மாத்திரையைக் கொடுத்து உயிரைப் போக்குவது. இதுபோலப் பலவகை உண்டு.
ஆனால் சொத்திற்காகவும், பணத்திற்காகவும் பிள்ளையே பெற்றோரைக் கொலை செய்யும் அவலம் தற்பொழுது அரங்கேறி வருகிறது. இவ்வாறு கடலோர மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, காரைக்குடி முதலான பகுதிகளிலும் இக்கொடுமை நடைபெற்று வருகிறது. இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். அன்றாடம் செய்தித்தாள்களில் பணத்திற்காக மூதாட்டி கொலை, நகைக்காக வயதான பெண் கொலை எனச் செய்திகள் வெளிவரும். காவல்துறையும் பெயர் அளவில் விசாணை மேற்கொண்டு கொலையாளியைத் தப்பிக்க வைத்துவிடுகிறது. இவற்றைத்தவிர கூலிப்படை வைத்தும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளரை அவருடைய வீட்டு வேலைக்காரி அல்லது வாகனம் ஓட்டுநர் மூலம் மரத்தில் வாகனத்தை மோதவிட்டுக் கொலை செய்யும் நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. மதுரையில் புகழ்வாய்ந்த உணவுவிடுதி உரிமையாளரை அவருடைய உறவினர்கள் ஓட்டுநர் மூலம் வாகனத்தை மோதவிட்டுக் கொலை செய்தனர். அதன்பின்னர் காவல்துறை விசாரணையில் சொத்துக்காகக் கொலை செய்தது அம்பலமானது.
இதேபோலத் திருநெல்வேலியில் புகழ்பெற்ற துணிக்கடை உரிமையாளரை ஓட்டுநர் உதவியால் புளிய மரத்தில் மோதவிட்டுக் கொலை செய்தனர். அதுவும் சொத்திற்காக நடந்த கொலைதான். இதே போலச் சென்னையில் நன்கறியப்பட்ட தொலைக்காட்சிச் செய்தியாளரின் பாட்டி, தாத்தாவை அவருடைய இரண்டாவது மகள் கூலிப்படை மூலம் வைத்துக் கொலை செய்துள்ளார். செய்தியாளர் என்பதால் புலனாய்வு செய்து இறுதியில் சொத்திற்காகக் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம் சங்கரன்பந்தலில் தன்னுடைய மகன் பெரோசுகான் என்பவர் பலமுறை கொலை முயற்சி செய்ததால் உயிர்தப்பினால் போதும் என்று அவருடைய தந்தை தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதன் தொடர்பாகச் சங்கரன்பந்தல், திட்டச்சேரி காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் ஏனங்குடியில் சீர்த்தி வாய்ந்தது பாவா சேட் மிட்டாய் கடை. இதனுடைய கிளைகள் அப்பகுதியில் ஏனங்குடி, ஆலமரத்தடி, ஆதலையூர், பேரளம், சன்னாநல்லூர் முதலான பகுதிகளில் உள்ளன. பாவா சேட் மிட்டாய் கடையின் உரிமையாளர் பாவா சேட் என்ற சுல்தான் அப்துல் காதர். இவருக்கு இரண்டு பெண்களும், ஆண்பிள்ளையும் உள்ளனர். ஒரே மகனுடைய பெயர் செல்லத்தம்பி என்ற முபாரக். அவருக்குப் பலகோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இந்தச் சொத்தைத் தனக்கு எழுதித்தரவேண்டும் என்று பலமுறை கொலை செய்ய செல்லத்தம்பி முயன்றுள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கொலைமுயற்சியில் ஈடுபடும்போது அதிலிருந்து தப்பித்து அருகில் உள்ள திட்டச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கொலை முயற்சியின் கெடுவிளைவைப் புரிந்து கொள்ளாமல் காவல்துறை அந்த மனுவைக் குப்பையில் போட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாவா சேட்டை மகன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் சேர்ந்து அவருடைய கழுத்தை இறுக்கி நெரித்துக் கொலை செய்துள்ளார்கள். கொலை செய்வதற்கு முன்பு இரவு 11.00 மணியிலிருந்து அதிகாலை 3.00 மணிவரை அக்கம் பக்கத்தைச் செல்லத்தம்பி நோட்டமிட்டுள்ளான். அதன் பின்னர் காரியத்தை கனக்கச்சிதமாக முடித்துவிட்டு அதிகாலை 4.00 மணியளவில் அக்கம், பக்கத்தில் தன்னுடைய தந்தை இறந்துவிட்டார் என்று நாடகமாடியுள்ளார். அதன்பின்னர் உறவினர், நண்பர்கள் அவருடைய பிணத்தைப் புதைத்துள்ளனர். அவர் இறந்தவுடன் அவருடைய மரணம் மருமமான மரணம் என்றும் காவல்துறை விசாரிக்கவேண்டும் எனவும் பலமுறை திட்டச்சேரி காவல்நிலையத்திற்குத் தொலைபேசி மூலம் புகார் சென்றுள்ளது. திட்டச்சேரி காவல்நிலையத்தினர் வேகமாகச் சென்று தங்களுடைய புலனாய்வைச் செய்துகொண்டிருக்கும்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இந்நாள் ஒன்றியத்தலைவர் மற்றும் அப்பகுதியைச்சேர்ந்தவர்களிடமிருந்து தொலைபேசி வந்தவுடன் தங்களுடைய புலனாய்வை நிறுத்திக்கொண்டு இயற்கை மரணம் எனச் சென்றுள்ளனர். அதன்பின்னர் பலஇலகரங்கள் கைமாறியுள்ளன. இதே போல ஒரு பெண்ணைக் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அரசியல்வாதியின் பின்புலத்தோடு கற்பழித்து இருப்புப்பாதை தண்டவாளத்தில் தூக்கி எறிந்துள்ளனர். அதன்பின்னர் அரசியல் தலையீடு காரணமாக அந்தக்கோப்பு முடிக்கப்பட்டுள்ளது.
பாவா சேட் மருமமான முறையில் இறந்தவுடன் முசுலிம் முறைப்படி உடலைக் கழுவும்போது அவருடைய கழுத்தில் கயிற்றைக்கொண்டு இறுக்கிய தடங்களும், உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்களும் இருந்துள்ளன. கொலை செய்வதற்கு முதல் நாள் ஓர் இடத்தை விற்பனை செய்ய முன்தொகை வாங்கித் திங்கள் கிழமை நாகூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யக் கூறியுள்ளார். அதற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை இக்கொலை நடந்துள்ளது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சென்னையில் உள்ள வழக்கறிஞர் ஒருவரின் உறவினர் இருப்பதாகத் தெரியவருகிறது.
Leave a Reply