முப்பால் வழியில் முதல்வர் மு.க.தாலின்

வாழ்த்து என்பது சடங்கல்ல. ஒரு மரபு. வாழ்த்திற்குரியவர்களை உள்ளன்புடன் வாழ்த்த வேண்டும். சங்க இலக்கியங்கள் இயன்மொழி வாழ்த்து, வாயுறை வாழ்த்து எனச் சில வாழ்த்து முறைகளை வகுத்து வைத்துள்ளன. அந்த வகையில்தான் தமிழக ஆன்றோர்களும் அனைத்து இந்தியத் தமிழ்ச்சங்கத்தினரும் மு.க.தாலின் அவர்களையும் அவர் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசினையும் இன்று(வைகாசி 09, 2052/23.05.2021) இணையவழியே வாழ்த்துகிறோம்.  அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கங்கள் வாழ்த்துகின்றன என்றால் அனைத்து இந்தியத்தமிழ் மக்களே வாழ்த்துவதாகத்தான் பொருள். சில உலக அமைப்புகளும் இதில் பங்கேற்றுள்ளன. எனவே உலகத்தமிழ் மக்கள் வாழ்த்துவதாகத்தான் பொருள்.

நாளும் நாளும் உயர்வுற்று

நலிவை நீக்கித் தொண்டாற்றி

பொலிவை வழங்கிப் புகழுற்று

எல்லா நாளும்மகிழ் நாளே

என மக்கள் கொண்டாடும் வகையில் சிறந்திடப் புதிய தமிழரசை நாம் வாழ்த்துகிறோம்.

ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகியவற்றைச் சிறப்பித்துப் பாடுவதை இயன்மொழி வாழ்த்து என்பர். அதே போல், இன்றைக்கு நாம் முதல்வர் மு.க.தாலின் அவர்களின் புகழ், வலிமை, கொடை, அருள் ஆகியவற்றைச் சிறப்பித்து உரைக்கின்றோம். எனவே, நாம் கூறுவது மிகையான வாழ்த்துரை அன்று. இயல்பான வாழ்த்துரையே!

நாட்டின் நான்காம் தூணாக விளங்குவன ஊடகங்களாகும். ஊடகங்கள் புதிய அரசு அமைந்ததிலிருந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் பார்த்துப் பாராட்டுகின்றன. தினத்தந்தி , தினகரன் முதலான தமிழ் நாளிதழ்களும் அகரமுதல முதலான மின்னிதழ்களும் இந்தியா டு டே, பிசினசு இந்தியா  முதலான ஆங்கில இதழ்களும் உலக இதழ்களும் பாராட்டுகின்றன. குறைந்த நாளிலேயே உலகளாவிய பாராட்டு பெறும் முதல்வரையும் அவர் தலைமயிலான தமிழக அரசையும் நாமும் பாராட்டி வாழ்த்துவதுதானே முறையாகும்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

 என்கிறார் தெய்வப்புவலர் திருவள்ளுவர் (திருக்குறள் 664). ஒரு செயலை இவ்வாறு செய்து முடிப்பேன் என்று சொல்லல் மிக எளிது. ஆனால், அவ்வாறு தான் சொன்னதை நிறைவேற்றல் என்பது அரிதான செயல் என்கிறார். தேர்தலின் பொழுது வாக்குறுதிகளைத் தலைவர்கள் அள்ளி வீசுகின்றனர். ஆனால் வெற்றி பெற்றதும் மறந்து விடுகின்றனர். நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் வாக்குறுதி அளிப்போர் உள்ளனர். சான்றாகக் கடந்த ஆட்சி நிதி நிலைமை மிக மோசமாக இருந்தும் அப்போதைய ஆட்சியாளர்கள் சலவைப்பொறியை இலவசமாக வழங்குதல் போன்ற பல வாக்குறுதிகளை அளித்தனர். இறந்தவர் குடும்பங்களுக்குத் தரவேண்டிய குடும்பப் பாதுகாப்பு நிதியைக்கூடக் கடந்த ஆண்டு(2020) மே 14 இற்குப் பிறகு வழங்க இயலாமல் நிறுத்தி வைத்திருந்தனர். மே 14, 2020 என்பது அரசுப்பணியாளர்கள் இறந்த நாளன்று. அவர்கள் இறந்து அதற்கு முன்னர் ஈராண்டுகள்கூட ஆகியிருக்கும். உரிய விண்ணப்பம் ஓய்வூதிய அலுவலகம் வரும் நாளே இது. உடனடியாகத் தரவேண்டிய நிதியைக்கூட அளிக்க முடியாத சூழல் இருப்பதை அறிந்துதான் பொய்யான வாக்குறுதிகள் தந்தனர். தொடக்க நல் வாழ்வு மையங்களில் போதிய மருந்துகள் இல்லை. பல மருந்துகளைத் தர இயவில்லை. சில மருந்துகளை இரு வேளை உட்கொள்ள வேண்டும் என்றால் ஒரு வேளைக்கு மட்டும் தந்தனர். சருக்கரைமானி மூலம் இரத்தச்சருக்கரை அளவைப் பார்க்கலாம் என்றால் அதற்குரிய ஆய்வுப்பட்டை இல்லை. இவ்வாறு பலவற்றைக் கூற இயலும். ஆனால் எவற்றை எல்லாம் எவ்வாறு செய்யலாம் எனத் திட்டமிட்டு, அதற்கேற்ப நலத்திட்டங்களை அறிவித்து அதனை இன்றைய அரசு நிறைவேற்றி வருகிறது. ஆம். “சொன்னதைச்செய்வோம், செய்வதைச் சொல்வோம்” என்ற தந்தையின் வழியில் முதல்வர் மு.க.தாலின் அரிய செயல்களையும் எளிதில் முடித்துக் கொண்டு வருகிறார். எனவே, வாழ்த்துவது நம் கடமையாகிறது.

மகுடைத்தொற்றில் அல்லலுறும் மக்களுக்கு இடர் உதவித்தொகையாக உரூ.2000/ வழங்கல், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிப் பாலின் வி்லையைக் குறைத்தல், அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், 100 நாட்களுக்குள் குறைகளை நீக்க ‘உங்கள் தொகுதியில் முதலைமச்சர்’ எனத் தனித்துறையை அமைத்தல், தனியார் மருத்துவமனைகளில் சேரும் மகுடைத் தொற்றாளர்களின் மருத்துவச் செலவைக் காப்பீட்டு முறையில் ஏற்றல்  என ஐந்து ஆணைகளை முதல்வர் பதவிப் பொறுப்பேற்றதும் செயல்படுத்தினார். இதனால் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்று அவர்களின் வாழ்த்து மழையில் நனைகிறார். இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அரசின் நலத்திட்டங்களைப் பாழாக்குவதற்கென்றே இல்லாத விதிகளைக் கூறிச் சிதைக்கும் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள், பெண்கள் பேருந்தில் பயணம் செய்தால் கட்டணம் இல்லை எனவும் பொதுப்பேருந்தில் பயணம் செய்தால் பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்று சொல்வதாகவும் இதனால் பெண்கள் பேருந்திற்குத் தனி வண்ணம் பூசப்போவதாகவும்  நாளிதழ்ச் செய்திகள் வருகின்றன. இவ்வாறு மக்கள் பணத்தை வீணடிக்க வேண்டா. இயல்பான கட்டணம் உள்ள எந்தப் பேருந்தில் பயணம் செய்தாலும் பெண்கள், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடம் கட்டணம் வாங்கக் கூடாது என்று முதல்வர் அறிவிக்க வேண்டும். (இதன் பின்னர் முதல்வர் அறிவித்து விட்டார்.பாராட்டுகள்!)

“எதையும் ஆறப்போட வேண்டும் என்றால் –  மூடிப் புதைக்க வேண்டும் என்றால் – விசாரணை ஆணையம் வை” என்பது அரசியல் நடைமுறை மொழி. முந்தைய முதல்வர் செயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை ஆணையமே இதற்குச் சான்று. அவ்வாறு தூத்துக்குடி செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் தொடர்பான விசாரணை ஆணையைக் கிடப்பில் போடவில்லை. தாம் ஆட்சிப்பொறுப்பேற்றதும் விரைந்து இடைக்காலப் பரிந்துரைகளைப் பெற்றார் முதல்வர். அதற்கிணங்கத் தங்களுக்கும் தங்கள் தலைமுறையினருக்குமான வாழ்வுரிமைக்காகப் போராடியவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்றுள்ளார். இறந்த குடும்பத்தினருக்கும் பெருங் காயமுற்றோருக்கும் நிதி யுதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் வழங்கியுள்ளார்.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்”

 என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள்:517). இதற்கேற்பத் தக்க அதிகாரிகளை முதன்மைத் துறைகளில் அமர்த்தியுள்ளார். மக்கள் மனம் கவர்ந்த வல்லவர்களான முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. தலைமைச்செயலராகவும் உதயச்சந்திரன் இ.ஆ.ப. முதன்மைச் செயலராகவும் பி.உமாநாத்து இ.ஆ.ப., எம்.எசு.சண்முகம், அனு சியார்சு இ.ஆ.ப. ஆகியோர்  பிற செயலர்களாகவும் அமர்த்தப்பட்டுள்ளனர்.

“அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி

என்கிறார் திருவள்ளுவர்(குறள்:506)

நாணயம் அற்றவரை, நேர்மை அற்றவரை, பதவிக்குரிய திறமை அற்றவரை, சுறுசுறுப்பு அற்றவரை, ஒழுக்கம் அற்றவரை, பண்பு அற்றவரை, தொண்டு உணர்வு அற்றவரை நம்பி எப்பொறுப்பையும் ஒப்படைக்கக் கூடாது. இதில் முதல்வர் கருத்துடன் இருப்பதால் வாழ்த்துகிறோம். இந்நிலை தொடர வேண்டுகிறோம்.

மு.க.தாலின் முதல்வராக மாட்டார்; அதற்கான நல்லூழ் அவருக்கு இல்லை;  என்றெல்லாம் ஒரு சாரார் ஏளனம்  செய்தும் கேலி செய்தும் வந்தனர். தன் மீது சாணியை எறிந்தாலும் உரமாக்கும் மன வலிமை மிக்கவர் இது குறித்தெல்லாம் கவலைப்படவில்லை. தன் இலக்கு மக்களுக்கான நல அரசை அமைப்பது. அவ்வாறு அமைந்ததும் என்னென்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே சிந்தித்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அதைச்செய்வோம், இதைச்செய்வோம் என்று அறிவிப்பவர்கள் உண்டு. ஆனால், அமைதியாகச் சிந்தித்துத் திட்டமிட்டுச் செயல் முறைகளை வகுத்துக் கொண்டார்.

“தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்”

 என்னும் திருவள்ளுவர் வழியில் (திருக்குறள்:462) துறையறிவு அறிந்தவர்களுடன் ஆராய்ந்து எண்ணிச் செயல் முறையை வகுத்துக் கொண்டார். எனவே, ஆட்சிக்கு வந்ததும் திட்டமிடலுக்கு நேரத்தை வீணாக்காமல் அரிய செயல்களையும் எளிதில் முடித்து வருகிறார்.

அரசு என்றால் கட்சி; கட்சி என்றால் ஆரவார வரவேற்பு என்பதே இயற்கை.

“வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை”

என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள்:439). தான் செல்லுமிடங்களில் தரும் வரவேற்பு, தன்னைத்தானே வியக்கச் செய்து பணிக்குறைபாட்டினை ஏற்படுத்தும் எனக் கருதி அடக்கத்துடன் அரசுமுறைப் பயணங்களில் கட்சி வரவேற்பிற்குத் தடை விதித்துள்ளார். இதுவரை யாரும்  செய்யாத, ஆனால், இத்தகைய வரவேற்புளால் இடையூறுகளுக்கு ஆளாகும் பொதுமக்கள் இவற்றை வெறுக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த உயர்ந்த உள்ளத்தை வாழ்த்தாமல் எப்படி இருக்க இயலும்?

மகுடைத்தொற்றிலிருந்து மக்களைப்பாதுகாக்கப் பல்வேறு திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறார். தடுப்புப்பணியில்  ஈடுபடுவோருக்கு ஊக்கத்தொகை, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரூ.25 நூறாயிரம், தடுப்பூசிக்கு உலகளாவிய ஒப்பந்தம், மகுடைத்தொற்றிற்கு ஆளான பெற்றோர்களின் குழந்தைகள் பாதுகாப்பு மையம், மக்களுக்கு விரைந்து உதவக் கட்டளை மையம், உயிர்வளிப் பற்றாக்குறையைப் போக்க உயிர்வளி உற்பத்தி எனப் பல வகையிலும் செயலாற்றி வருகிறார்.

மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு மகுடைத் தொற்றாளர்களுக்கான கூடுதல் வசதிகள் உடைய மருத்துவமனைகள் அமைத்தல் முதலான பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார்.

“நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு”

 என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க(திருக்குறள்:520) நாள்தோறும் மக்களின் குறைகளை ஆராய்ந்து அவற்றைப் போக்கும் பணிகளில் அரசைச் செலுத்தி வருகிறார்.

செய்தித்தாள்களில் படிக்கும் செய்திகளுக்கேற்பவும் குறைகளைக் களைகிறார்.  அதே நேரம் பாராட்டவேண்டியவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்துகிறார். அவற்றில் ஒன்றுதான் சேலத்தில் மூதாட்டிக்கு உதவிய இளையராணி என்பவரைப் பாராட்டி ஊக்கப்படுத்தியது. 

“செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு”

என்பது வள்ளுவர் வாய்மொழி (குறள்:389)

“மக்களின் குறைகளும் அமைச்சரின் அறிவுரைகளும் தன் காதுகட்கு வெறுப்பை விளைவிக்கக் கூடியனவாக இருந்தாலும் அவர்கள் நாட்டின் நலன்கருதிப் பொறுமையோடு கேட்கும் பண்பினையுடைய அரசன் ஆட்சியில் உலகம் நிலை பெற்றிருக்கும்” எனப் பேராசிரியர் சி இலக்குவனார் விளக்குகிறார். இதற்கேற்ப மு.க.தாலின் மக்கள் குறைகளைக் கேட்கும் பொழுது வெறுப்படையாமலும் சலிப்படையாமலும் பொறுமையாகக் கேட்டுக் குறைகளைப் போக்குகிறார். 

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்,

“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்

என்னும் திருவள்ளுவர் நெறிக்கிணங்க(குறள்:504) நன்கு ஆராய்ந்து இராசீவு கொலைவழக்கில் சிக்கியுள்ள அப்பாவிகள் எழுவர் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர், அவர்கள் விடுதலை தொடர்பில் குடியரசுத் தலைவருக்கு மடல் அனுப்பியுள்ளார். பேரறிவாளனுக்கு ஒரு மாதம் விடுப்பு வழங்கியுள்ளார். இதில் குடியரசுத்தலைவர் காலத்தாழ்ச்சி செய்தால் மாநில அரசிற்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவரையும்  நீண்டகாலம் சிறையில் உள்ள பிற சிறைவாசியரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும்.

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, தம் சொந்தச் செலவில் உரூ ஒரு கோடி வழங்கிக் கலைஞர் செம்மொழித் தமிழ் விருது வழங்க ஏற்பாடு செய்திருந்தார். விருது என்பது உரூ 10,00,000 தொகையாகும். இத்துடன் தகுதிச்சான்றிதழும் தமிழ்த்தாய்ச்சிலை நினைவளிப்பும் தங்கப்பதக்கமும் பொன்னாடையும் வழங்கப்பெறும். ஆண்டுதோறும் ஏப்பிரலில் விண்ணப்பங்கள் கேட்டு, மேத் திங்கள் முடிவெடுத்து, நன்கொடையாளரான கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான சூன் 3-இல் விருது வழங்கப்பெறும்

முதல் விருது 2009இல் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அசுகோ பர்ப்போலா (Prof. ASKO PARPOLA) என்னும் அறிஞருக்கு வழங்கப் பெற்றது. பின்னர் இவ்விருது வழங்கப்பெறவே யில்லை. அதிமுக ஆட்சியின் காழ்ப்புணர்ச்சியால் விருதிற்கான பரிந்துரைக் கோப்புகளை உறங்க வைத்தனர். கலைஞருக்குச்செலுத்தும் உண்மையான அஞ்சலியே இவ்விருதினை வழங்குவதுதான் என நான் நக்கீரனில் எழுதியிருந்தேன். ஆனால் இன்றுவரை கலைஞர் செம்மொழி விருது வழங்கவே இல்லை. ஆனால், முதல்வர், இவ் விருதினை வழங்க மத்திய அரசிற்கு மடல் எழுதியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்றதும் மத்தியில் உள்ள தேக்கத்தையும் போக்க நடவடிக்கை எடுத்துள்ளது பாராட்டிற்குரியது. மேலும் தூண்டுதலாக இருந்து கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்கப்பெற வேண்டும்.

 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்

என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள்:605)

இதற்கு மணக்குடவர், “விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்ததனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை நான்கும் கெடுந்தன்மையுடையார் காதலித்தேறும் மரக்கலம்” என்கிறார். இத்தகைய மத்திய அரசின் போக்கை எடுத்துரைத்தமை பாராட்டிற்குரியது.

ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையானது அண்ணா நூற்றாண்டு நூலகம். மேனாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி 16.05.2008 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார்;15.09.2010 இல் திறந்து வைத்தார். ஆனால் அடுத்து வந்த முதலமைச்சர் செயலலிதா இதனைக் குழந்தைகள் நல நலச் சிறப்பு மருத்துவமனையாக மாற்ற முயன்றார். இந்நூலகத்தைப் பள்ளிக்கல்வி வளாகத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுத்தார். உயர்நீதி மன்றத் தடையால் இந்நூலகம் தப்பியது. திருமண விழாக்களுக்கு வாடகைக்குக் கொடுக்கவும் முயன்றார். இதுவும்  உயர்நீதிமன்றத் தடையால் நிறுத்தப்பட்டது.

உயர்நீதிமன்றத்தால் தப்பிப் பிழைத்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குப் புத்தாக்கம் கொடுக்க முதல்வர் முயல்கிறார்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்(திருக்குறள் 466)

என்கிறார் திருவள்ளுவர். அண்ணா நூற்றாண்டு நூலகத்தின்  வளர்ச்சிக்குத் தடையானவற்றைச் செய்தும்  மேம்பாட்டிற்கு வேண்டியற்றைச் செய்யாமலும் அதை அழிக்கப் பார்த்தது அ.தி.மு.க. அரசு. அவ்வழிவிலிருந்து அதனை மீட்டு வருகிறார் முதல்வர்.

‘வெளிநாடு வாழ் இந்தியர்கள்’ என்கிற துறையை ‘வெளிநாடு வாழ் தமிழர் நலன்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளார் முதல்வர். இஃது எழுச்சி மிகு மாற்றமாகும். உலகத்தமிழர்கள் பயனுறத்தக்க ஏற்பாடாகும். அதே நேரம், இதனை ‘அயலகத் தமிழர்கள் நலத் துறை’ என மாற்றி தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள அந்தமான், இலட்சத்தீவு, உட்பட பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் நலன்களுக்கானதாகவும் மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அதே நேரம் முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நிலையில் உள்ள இரண்டினையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஒன்று இணையப் பயன்பாடு. எத்துறையிலும் இணையப் பயன்பாடு செம்மையாக இல்லை. முதல்வர் பொறுப்பேற்றதையும் அமைச்சர்கள் பெயர்ப்பட்டியலையும் கூட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவில்லை. பிற துறைகளிலும் மக்களுக்கு இணையப் பயன்பாட்டால் உரிய பயன்கிடைக்கவில்லை. எனவே, எல்லாத் துறைகளிலும் இணையப் பயன்பாடு முழுமையாகவும் நிறைவாகவும் அமைய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றொன்று தமிழ்வளர்ச்சித்துறையின் தக்க செயல்பாடின்மை. விருதுகள் வழங்கும் விழாக்களைச் சிறப்பாக நடத்தும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் மிகவும் பின்தங்கி உள்ளது. பார்க்கும் இடங்களில் எல்லாம் ஆங்கில் நீக்கமற நிறைந்திருப்பதற்கு இதன் செயல்பாடின்மையே காரணம். எனவே, தமிழ் வளர்ச்சித்துறை ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் முழுக்கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விருது வழங்கும் பணிகளை இயலிசைநாடக மன்றத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள கலை பாண்பாட்டுத்துறைக்கு மாற்றிவிடவேண்டும்.

குறை காணுமிடத்துக் களையும் போக்கு மாண்புமிகு முதல்வரிடம் இருப்பதால் இதனைக் கூறுகிறோம்.

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையின் பீடுடையது இல்(திருக்குறள்:1021)

 என்கிறார் திருவள்ளுவர்.

தன் நாட்டு மக்கள் உயர்வதன் பொருட்டு உரிய கடமையைச் செய்வதற்குச் சலிப்படையேன் என்னும் பெருமைபோல, ஒருவனுக்கு பெருமை தருவது வேறில்லை என்பது இதன் பொருளாகும். நேரம், காலம் பார்க்காமல், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைக்கும் முதல்வர் மு.க.தாலின் இத்திருக்குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். முப்பால் வழியில் நடக்கும் மு.க.தாலின் வாழ்க வாழ்க என நாம் வாழ்த்துவோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்

thiru2050@gmail.com

(வைகாசி 09, 2052 / ஞாயிறு / 23.05.2021 / அன்று நடைபெற்ற மாண்புமிகு மு.க.தாலின் தலைமையிலான புதிய அரசினைப் பாராட்டும் வாழ்த்தரங்கத்தில் ஆற்றிய தலைமையுரையின் எடு பகுதி.)