uraiyaasiriyaral-ki.vaa.sa

மூலப்பொருளை அறிய உதவுவன உரைகளே!

  இலக்கண நூல்களுக்கு உரைகள் இல்லாவிடின் அவற்றின் பொருளை அறிவது எளிதன்று. தொல்காப்பியத்தில், இலக்கணத்துக்கு உரை இவ்வாறு அமையவேண்டும் என்ற வரையறை இருக்கிறது. இலக்கணமும் இலக்கியமும் சமய நூல்களும் சூத்திர வடிவில் அமைந்திருப்பதால் அவற்றின் பொருளை அறிந்து கொள்ள உரைகள் இன்றியமையாதவை. இலக்கிய நூல்களின் பொருளையும் மரபறிந்து இலக்கண அமைதி தெரிந்து விளக்க வேண்டும். உரையாசிரியர்கள் அவ்வாறு செய்கிறார்கள். நூல்களின் பொருள்களை விளக்குவது மாத்திரம் உரையாசிரியர்களின் இயல்பு என்று எண்ணக் கூடாது. நூல்களின் கருத்தை விளக்கும்போது நூலைக் கற்பார் உள்ளம் கொள்ளும்படி பலவித உத்திகளை மேற்கொண்டு விளக்கவேண்டும். நூலாசிரியர்­களின் உள்ளக் கிடக்கையை நன்கு தெரிந்துக்கொண்டு கருத்தை விளக்குவதோடு, உவமை மேற்கோள் முதலியவற்றையும் கட்டித் தெளிவிக்க வேண்டும். இதுவோ அதுவோ என்று ஐயுறுவதற்குரிய இடங்களில் தக்க காரணங்களைக் காட்டி இன்னதுதான் என்று தெளிவுபடுத்த வேண்டும். செய்யுள் வழக்கு, உலக வழக்கு இரண்டிலிருந்தும் மேற்கோள்களும் ஒப்புமைகளும் காட்ட வேண்டும். இலக்கியங்களில் உள்ள நுட்பங்களையும் நயங்களையும் எடுத்துக்காட்டும் உரையாசிரியர்களை மக்கள் பெரிதும் விரும்புவார்கள். தமிழ் இலக்கிய இலக்கணங்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் பலர். அவர்கள் புலமையிலும் விளக்கும் திறமையிலும் நடையிலும் வெவ்வேறு வகையானவர்களாக இருக்கிறார்கள். இலக்கண நூல்களுக்கும் சமய நூல்களுக்கும் உரை எழுதிய ஆசிரியர்களின் விளக்கங்களில் பொருள் தெளிவை எதிர்பார்க்கி­றோம். இலக்கியங்களின் உரைகளிலோ பொருள் தெளிவோடு நயங்களையும் எதிர்பார்க்கிறோம். தமிழ்நூல் உரையாசிரியர்களிடம் இந்த இருவகை ஆற்றல்களையும் பார்க்கிறோம்.

-கி.வா.சகநாதன்,

உரையாசிரியர்கள் நூலின் சிறப்புரை