மொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்
மொழிக்கொலைப் போலிக்
கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்
ஒரு மொழியின் தூய்மையையும் தனித்தன்மையையும் சிதைத்தும் அயற்சொல் கலந்தும் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் மொழி அழிகின்றது. ஒரு மொழி அழியும் பொழுது அம்மொழி பேசும் இனமும் அழிகின்றது. எனவே மொழிக் கொலை புரியும் படைப்பாளிகள், பேச்சாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இங்கே தலைப்பில் கவிஞர்கள் எனக் குறிப்பிட்டாலும் மொழிக்கொலைகாரர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்களே!
கவிஞர்களைக் குறிப்பிட்டதன் காரணம் ‘சர்க்கார்’ என்னும் திரைப்படப் பாடல்களில் வேண்டுமென்றே மொழிக்கொலை புரிந்த கவிஞர் ஒருவரைக் குறிப்பிட்டுத்தான்.
‘சிமிட்டாங்காரன்’ என்னும் தலைப்பில் சொல்லப்படும் பாட்டு என்ற பெயரிலான கொலை வரிகளில் முதலில் வருவன
பல்டி பக்குற டார்ல உடனு பல்த்து
வேர்ல்டு மொத்தமும்
அரள உடனும் பிஃச்து .
பிசுறு கெளப்பி
பேரல வுடனும் பல்த்து
அடுத்துச் சில வரிகளுக்குப்பின் வரும் வரிகள்
சிம்டாங்காரன் எங்கனாநீ சீரென்
நின்டேன் பாரேன்
முடிஃச்டு அப்டிக்கா போறேன்
இவற்றை மேற்கோளாகக் காட்டவே மனம் நடுங்குகின்றது. எனினும் அறியாதவருக்கு உண்மையை உணர்த்த இங்கே குறித்துள்ளோம்.
இவற்றை எல்லாம் தமிழிசைக்கான இணையத்தளம் உருவாக்கியுள்ள இசையமைப்பாளரும் பின்னிணி பாடியவர்களும் காட்சியை இயக்குநரும் இயக்குநர் குழுவும் காட்சியில் நடிக்கும் நடிகர்களும் பட உருவாக்குநரும் பாடலாக்கத்திலும் காட்சியிலும் தொடர்புடைய பிற கலைஞர்களும் எப்படித்தான் ஏற்றுக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. இதற்கு மிகுந்த வரவேற்பு இருக்கும் என எதிரபார்ப்பதாக இசையமைப்பாளர் கூறுவதுதான் வேடிக்கை. நச்சுக்கிருமிகள் விரைவாகப் பரவுகின்றன. அதற்காக அவற்றிற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறி அவற்றை ஒழிக்காமல் இருக்க முடியுமா?
மன்பதைக்கு எதிரான கருத்துகள் உள்ளதாகக் கூறிப் புத்தகங்களை அரசு தடை செய்வதுபோலும் திரைப்படத் தணிக்கைக் குழு மூலமும் அரசு இப்படப்பாடல்களையும் காட்சிகளுடன் சேர்த்துத் தடை செய்ய வேண்டும். பாடலாசிரியர் முதலான குழுவினருக்கும் சிறைத் தண்டனை வழங்க வேண்டும்.
இப்பாடல் குறித்துச் “சர்க்கார் படத்தில் காணாத தமிழ்” என எழுதியுள்ள தினமலருக்கும் உரிய செய்தியாளருக்கும் பாராட்டுகள். படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களில் 4 பாடல்களில் தமிழ் இல்லை என்பதைத் தினமலர் வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளது. வலைத்தளங்களில் ஆங்காங்கே கண்டனங்களும் பதிவாகியுள்ளன. மக்கள் இப்படத்தைக் காசு கொடுத்துப் பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்.
பல நாடுகளில் மொழிச்சட்டங்கள் உருவாக்கி தத்தம் மொழியைக் காத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசும் ‘தமிழ்மொழிப் பாதுகாப்புச் சட்டம்’ எனச் சட்டம் ஒன்றை உருவாக்கித் தமிழ் மொழியைக் கொலை முயற்சிகளிலிருந்து காப்பாற்ற வேண்டும். சட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்புகளில் தமிழ் உணர்வும் தமிழறிவும் உள்ளவர்களையே பொறுப்பாளர்களாக அமர்த்த வேண்டும். பொதுவாக யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழ் தொடர்பானவற்றில் தமிழர் அல்லாதவரை அல்லது தமிழ் உணர்வு அல்லாதவரை அமர்த்துவதே தமிழக அரசின் செயல்பாடு என்னும் தவறான நிலையை மாற்ற வேண்டும்.
பிரான்சு நாட்டில் பிரெஞ்சுமொழியைக் காப்பாற்ற சட்டம் உள்ளது. இச்சட்டத்தை அறிமுகப்படுத்திய பண்பாட்டு அமைச்சர் தூபன் (Jacques Toubon ) பெயரில் தூபன் சட்டம் என அழைக்கப்பெறுகிறது. தூபன் என்றால் ‘யாவும் நன்று’ என்னும் பொருளும் உள்ளதால் அப்பெயரிலும் இச்சட்டம் அழைக்கப்பெறுகிறது.
விளம்பரங்கள், ஊடகங்கள், பணி ஒப்பந்தங்கள், மாநாடுகள் முதலான அனைத்து இடங்களிலும் தூய பிரெஞ்சு மொழியைப் பேணச் செய்வதே சட்டத்தின் நோக்கமாகும். பிரெஞ்சு மொழியில் ஆங்கிலம் முதலான அயல்மொழிகளின் சொற்கள், தொடர்கள் முதலானவற்றைப் பயன்படுத்த இச்சட்டம் வகை செய்கிறது. இதைமீறி நடப்பவர்களுக்கு இச்சட்டத்தின்படி பிரெஞ்சு நாணயத்தில் 2000 வரை ஒறுப்புத் தொகையும் (அபராதமும்) விதிக்கப்படும்.
இலத்தீன், ஆங்கிலம் முதலான மொழிகளில் இருந்து பிரான்சுமொழியைக் காப்பதற்காக பிரான்சியக் கழகம்(Académie française) 1635 ஆம் ஆண்டே அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு இப்பொழுது, வழக்கத்தில் உள்ள மின் அஞ்சல்/ஈ-மெயில் (e-mail) முதலான சொற்களுக்கான பிரெஞ்சு மொழிச்சொற்களைக் குறிப்பிட்டு அவற்றைப் பயன்பாட்டில் கொண்டு வர வலியுறுத்துகிறது. இதற்காக இணையத்தளம் தனியாக உருவாக்கப்பட்டுச் ‘சொல்; சொல்லற்க’ (Dire, Ne pas dire /To say, Not to Say) என்னும் தலைப்பில் இயங்கி வருகிறது.
கனடாவில் பிரெஞ்சு மொழி வழங்கும் கியூபெக்கில்(Quebec) விளம்பரப்பலகை, தகவல் பலகை முதலானவற்றில் ஆங்கிலம் இடம் பெற்றால் ஆங்கில எழுத்துகளைப்போல் இரு மடங்கு அளவில் பிரெஞ்சும் இடம் பெற வேண்டும் எனச் சட்டம் உள்ளது.
9 ஆவது தேசிய மக்கள் பேராயத்தின் 18ஆவது நிலைக்குழுவின் பரிந்துரைக்கேற்ப, மக்கள் சீனக் குடியரசுத் தலைவரின் 37 ஆம் சட்டம் நாள் 31.10.2000 இன்படி 1.01.2001 முதல் சீன மொழித்தூய்மை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சீனாவில் ஒலி,ஒளி பரப்புக்காக அயல்மொழியைப் பயன்படுத்த வேண்டுமென்றால், மாநிலக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒலிபரப்புப் பணியாண்மைக் குழுவின் (broadcasting and television administration under the State Council) ஒப்புதல் பெற வேண்டும்.
சீன மொழிப்பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அயல்மொழி வணிக நிறுவனப்பெயர்கள், குறியீட்டுப்பெயர்கள் சீனமொழிக்கு மாற்றப்பட்டுப் பயன்படுத்தப் படுகின்றன அயல்நாட்டார் பெயர்கள், அயல்நாட்டிடப் பெயர்கள், அறிவியல்-தொழில்நுட்பப் பெயர்கள் ஆகியவற்றிற்கான சீனவடிவப்பெயர்களை மாநிலக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள தரமான பேச்சு எழுத்துப் பணிக்குழு தெரிவிப்பதற்கேற்ப பயன்படுத்தப் பெற வேண்டும். தமிழர்கள்தாம் பெயர்ச்சொற்களை மாற்றுவதா? அடுத்த மொழிக்காரன் கண்டுபிடித்ததற்குத் தமிழ்ப்பெயர் எதற்கு? என்றெல்லாம் கேட்டுக் கொண்டு உ ள்ளனர்.
10.02.20146 இல் அரபுமொழிக் காப்புச்சட்டம் (Protection of the Arabic Language) இயற்றப்பட்டு அரபின் தூய்மை காக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
எசுக்கிமோக்கள் என அழைக்கப்பெறும் இன்யூட்டு மக்கள் மொழிக்காக இன்யூட்டு மொழிப் பாதுகாப்புச்சட்டம் (Inuit Language Protection Act) உள்ளது.
இவ்வாறு பிற நாடுகளைப் பின்பற்றித் தமிழ்நாட்டிலும் தமிழ்மொழித்தூய்மை காக்க அரசு உடனே சட்டம் இயற்ற வேண்டும்.அதற்கு முன்னதாகச் சர்க்கார் பாடலாசிரியரையும் குழுவினரையும் தண்டிக்க வேண்டும்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். (திருவள்ளுவர், திருக்குறள் 550)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல
தமிழுக்காக போராடுகிறேன் என்று சொல்லும் போலி அரசுகளால் வந்த நிலை இது..