மொழித் தாளைக் குறைப்பது

ந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே!

  மொழிப்பாடங்கள் சுமையாக இருப்பதாகக் கூறி அரசு, தாள் 1, தாள் 2 என இருந்த முறையை மாற்றியுள்ளது. இனி  மொழிப்பாடங்களில் ஒரு தேர்வுத்தாள் மட்டுமே இருக்கும்.  மேம்போக்காகப் பார்க்க இது சிறப்பானதாகத் தோன்றலாம். ஆனால்,  மொழி அறிவு என்பது அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை. அறிவியல் முதலான பிற மொழிப்பாடங்களைப் படிப்பதற்கும் மொழி அறிவு துணை நிற்கின்றது. அறிவில் சிறக்கத் துணையாய் இருக்கும் தாய்மொழி அறிவு குறைக்கப்படுவது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.

 பிற எல்லா நாடுகளிலும் தாய்மொழிக்கு முதன்மை அளிக்கின்றனர்; தாய்மொழி அறிஞர்களைப் போற்றுகின்றனர். நம் நாட்டிலோ தாய்த்தமிழ் ஆசிரியர்களைத் திரைப்படங்களில்கூட நகைச்சுவைக் காட்சிகளுக்காகத்தான் பயன்படுத்துகின்றனர். “தமிழ் வாழ்க” என்று நாம் முழக்கமிட்டாலும் தமிழை வாழ வைக்கும் வழிகளில் ஈடுபடுவதில்லை. எனவேதான் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

  இதில் மற்றொரு சதியும் உள்ளது. இந்தியா முழுவதும் ஒரே கல்வி என்பதுதான் பா.ச.க.வின் முழக்கம். மத்திய அரசு கல்வி வாரியத்தில் மொழித்தாள் ஒன்றுதான் உள்ளது. எனவே, அதைப்போல் இங்கும் மாற்ற முயல்கின்றனர். மும்மொழித்திட்டம் என்ற பெயரில் இந்தியையும் சமற்கிருதத்தையும் திணித்து வரும் பாசகவினர், தேர்வுத்தாள் சுமை குறைந்துவிட்டது; அதனால் இந்தியும் சமற்கிருதமும் சுமையல்ல என்றும் கூறுவார்கள்.

 மொழித்தேர்வு இரண்டுதாளாக இருந்தாலும் பிற பாடங்களுக்கு உள்ளதுபோல் 100 + 100  என 200 மதிப்பெண்கள்தான் வழங்கப்படுகின்றன. எனவே, மொழிப்பாடங்களில் ஓர வஞ்சனை காட்டக் கூடாது. இதனடிப்படையில் பிற பாடங்களுக்கான மதிப்பெண்களையும் 100 எனக் குறைத்தால்  அறிவு வளர்ச்சி குறையும்.

  மத்திய அரசின் கல்வித்திட்டம் மேம்பட்டது எனத் தவறான பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகக் கல்வி முறையில் வினா இருந்தால் மத்தியக்கல்வி பயின்றவர்கள் போதிய தேர்ச்சி  பெற மாட்டார்கள். எனவே மத்தியக் கல்விவாரியததின் மொத்த மதிப்பெண்கள் 500 என்னும் தேர்ச்சி முறையைத் தமிழகஅரசு பின்பற்றத் தேவையில்லை.

  தேர்வுத்தாள் ஒன்றை நீக்குவதன் மூலம் வினாத்தாள் தயாரிப்புச் செலவு, விடைத்தாள் திருத்தும் செலவு முதலானவை குறைவதாக இதன் ஆதரவாளர்கள் பட்டியல் போடுகின்றனர். செலவுக் கண்ணோட்டத்தில் கல்வி இருப்பின் கல்வி வளர்ச்சி என்பது கனவாகப் போய்விடும். கல்வித்துறையில் அடிப்படைச் செலவுகளுக்குக் கணக்கு பார்க்கக் கூடாது.

   இன்னும் சிலர் மாணவர்களுக்கு மன உளைச்சல்  போவதாகக் கூறுகின்றனர். மன உளைச்சல் என்றால் எந்தத் தேர்வும் நடத்த வேண்டாவே!

 தமிழாக இருந்தாலும் பிற மொழியாக இருந்தாலும் மொழிக்கல்வி என்பது ஆழமானதாக இருக்க வேண்டும். எனவேதான் இரண்டு தேர்வுத்தாள் தேவைப்படுகின்றன.

மொழிப்பாடம் என்பது வளர்ந்து வரும் துறையாகும். இதில் மிகுதியாகப் படித்துவிட்டுக் குறைவான விடைகளை அளிக்கும் சூழல் ஏற்படுத்துவதுதான் உண்மையில் மாணவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்தும். மிகுதியான தெரிவுகள் இருக்கும் பொழுது   ஏற்படும் மன அமைதி இல்லாமல் போய்விடும். முழுமையாகப் படிக்காமல் பலவற்றை விட்டுவிடத் தோன்றும். இது. தேர்வில் தோல்விக்கு அழைத்துச் செல்லும். எனவே தமிழக அரசின் புதிய முறை மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கையைக் குறைக்கவே செய்யும்.

இங்கிலாந்தில் 10 ஆம் வகுப்பில்  பிரிவு 1 முதல் 3 வரை பயில்பவர்கள்  ஆங்கில மொழி – தாள் 1, தாள் 2 எழுதுகின்றனர்.  11 ஆம் வகுப்பில் ஆங்கில் இலக்கியம் தாள் 1, தாள் 2 எழுதுகின்றனர்.

10 ஆம் வகுப்பில் பிரிவு 3 முதல் 7 வரை படிப்பவர்கள் ஆங்கில இலக்கியம் தாள் 1, தாள் 2 படிக்கின்றனர். இவர்கள் 11 ஆம் ஆண்டில் ஆங்கில  மொழி – தாள் 1  தாள், 2 படிக்கின்றனர். எப்படியாயினும இரண்டு தாள்களில் தேர்வு எழுத வேண்டும். என்றாலும் தேர்வு முறை அவர்கள் மனப்பாடம் செய்து ஒப்பிதது எழுதும் முறையில் அமைக்கவில்லை நன்கு  உணர்ந்து படித்துத்  தெரிவிக்கும் முறையில் அமைத்துள்ளனர்.

 நாம் தேர்வுத்தாள் எண்ணிக்கையைக் குறைக்காமல் தேர்வு முறையை மாற்றலாம்.

தாள் 1 என்பதை இப்பொழுது உள்ளதுபோல், பார்க்காமல் எழுதும் வகையில் அமைக்க வேண்டும். தாள் 2 என்பது புத்ததகங்களைப் பார்த்து எழுதும் வகையில் இருக்க  வேண்டும். பார்த்து எழுதுவதா? அப்படியானால் அப்படியே புத்தகங்களைப் பார்த்து எழுதி மறந்துவிடுவார்களே என எண்ண வேண்டா. அதுபோல் துண்டுத்தாளை அல்லது புத்தகத்தைத் திருட்டுத்தனமாகப் பார்த்துப் படி எடுப்பதுபோல் எழுதுவதற்கும் புத்தகங்களைப் பார்த்துச் சிந்தித்து எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. கருத்தைச் சுருக்கி எழுதுதல், விரித்து எழுதுதல், புத்தகங்களில் உள்ள தொடர்களை வேறுவகைகளில் பயன்படுத்தி எழுதுதல், புத்தகச் செய்தி ஒன்றை நாடகமாக நடித்துக் காட்டுதல், கவிதையாக எழுதுதல் என்பன போன்று மாணவர்களின் படைப்புத்திறன்கள் வளரும் வகையில் வினாத்தாள் அமைய வேண்டும். அப்படியாயின் மாணவர்கள் முன்கூட்டியே புத்தகங்களைப் படிப்பர்  சிந்தனைக்கு இடம் கொடுக்கும் வகையில் பாடங்களில் கருத்து செலுத்துவர்.

 இம் முறையில் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாது. அறிவு வளர்ச்சிதான் ஏற்படும்! சிந்தனைத்திறன்தான் வளரும்!

  மொழிப்பாடம் என்பது மண்ணின் மணத்தை வெளிப்படுத்துவது; பண்பாட்டை உணர்த்துவது; நாகரிகத்தை ஏற்படுத்துவது; கலையை வளர்ப்பது; விரிந்து பரந்த பயன்கள் கொண்டது. அதனைச் சுருக்குவது என்பது  நல்ல தன்று. புதுமை செய்வதாக எண்ணிக் கொண்டு சில அதிகாரிகள் செய்கைக்கு அரசும் துணை போகக் கூடாது. மத்திய அரசின் கல்வி முறையுடன் ஒப்பிட்டும் நம் கல்வி முறையைச் சிதைக்க கூடாது.

  • இலக்குவனார் திருவள்ளுவன்
  • நக்கீரன்  இதழ் 30.22. / சூன் 27-29, 2018:   பக்,22-23