யார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
யார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டுங்கள்!
தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
சட்ட மன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளவர்தான் முதல்வராக முடியும் என்ற நிலைப்பாட்டில் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.
மக்கள் செல்வாக்கு அடிப்படையில் முதல்வராக வேண்டும் எனில் தேர்தலில் பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவர்தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வரமுடியும். இதனை அறிந்த பின்னரும் பா.ச.க. ஆதரவால் ஆட்சியமைக்கப் போராடி வருகிறார் பன்னீர்செல்வம்.
அ.தி.மு.க. உட்கட்சிச் சண்டையால் அடுத்த பெரும்பான்மைக்கட்சியான தி.மு.க.விற்கே வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நடைமுறையில் தாலின் ஆட்சி அமைக்கும் வாய்ப்பினை ஆவலாக எதிர்நோக்கியுள்ளார்.
மத்திய அரசின் முகவரான ஆளுநரோ, பா.ச.க.விற்கு இணங்கி வருபவரையே ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற கட்டளைக்கிணங்க, யாருக்கும் வாய்ப்பு தராமல் காலங்கடத்தி வருகிறார். மத்தியஅரசின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ள பன்னிர்செல்வத்திற்கே முதல் வாய்ப்பு என்றாலும் இதனைக் கூறி மிரட்டியே பிற தரப்பாரையும் வளைக்கலாம் என்பதே திட்டம் போலும்! இல்லையேல், இருக்கவே இருக்கிறது, சட்டமன்றத்தை முடக்கி வைத்துவிட்டுப் பா.ச.க.வின் மறைமுக ஆட்சியை நடைமுறைப்படுத்தலாமே!
யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பது பா.ச.க.வின் கைகளில்தான் உள்ளது. ஆனால், யார் ஆட்சி அமைத்தாலும் மூடநம்பிக்கைளை ஒழிக்கப்பாடுபடுவது என்பது ஆட்சியில் அமர்வோரின் கைகளில் உள்ளது.
உடல் நலனுக்காக, விடுதலைக்காக, ஆட்சிக்காக, உயர்பதவிக்காக என்று பல்வேறு காணரங்களுக்காக மண்சோறு உண்ணல், தெய்வுப்புலவர் திருவள்ளுவரால் கண்டிக்கப்பட்ட வேள்வி(யாகம்) நடத்துதல் போன்ற மூட நம்பிக்கைகளும் பகுத்தறிவிற்கு ஒவ்வாதானவும் இப்பொழுது பெரிதும் பெருகி வருகின்றன. திராவிடம் என்பது ஆரியத்தை எதிர்ப்பதற்கான குறியீடே. ஆவ்வாறிருக்க இவர்கள், திராவிடம் என்னும் பெயரில் கட்சிகளை நடத்திக் கொண்டு, பகுத்தறிவிற்கு ஏற்காத, இழிவு தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டுப் பொதுமக்களையும் இவற்றில் ஈடுபடுத்துவது முறைதானா? இறை நம்பிக்கை இருப்பின் வழிபாடு அல்லது கூட்டு வழிபாடு நடத்தலாம். ஆனால், இழி செயல்களில் இறங்கும் நம்பிக்கை கொள்வதும் அத்தகைய மூட நம்பிக்கைகளில் மக்களை ஆழ்த்துவதும் வரலாற்றில் இழிவாகப் பதியப்படும் என்பதை உணரவில்லையே!
அ.தி.மு.க.தான் இவற்றில் பெரும்பங்கு வகித்தாலும் தி.மு.க.வினரும் மறைமுகமாக மூடநம்பிக்கைகளை வளர்த்து வருகின்றனர். தே.தி.மு.க. அதிமுகவிற்கு அடுத்த நிலையில் உள்ளது.
மூட நம்பிக்கைகள் என்பன இவை மட்டுமல்ல. ஆங்கிலத்தின் மூதும் இந்தியின் மீதும் உள்ள மோகங்களும் மூடநம்பிக்கைகள்தாம். இந்த மூட நம்பிக்கைகளால் தமிழ்வழிக்கல்வியை மூடி வருகின்றனர். ஆங்கிலவழிக்கல்வியைப் பெருக்கி வருகின்றனர். மத்திய அரசின் கல்விக்கூடங்கள் அல்லது மத்திய அரசின் இணைவு பெற்ற கல்விக்கூடங்களை வளர்ப்பதன் மூலம் இந்தியைுயம் சமற்கிருதத்தையும் திணிக்கும் வேலைகளுக்கு உடன் பட்டு வருகின்றனர். எனவே, மொழி பற்றிய மூட நம்பிக்கைகளில் இருந்தும் விலகி என்றும் தமிழ்வழிக்கல்வியே தமிழ்நாட்டில் நிலைத்திருக்கப் பாடுபட வேண்டும்.
மதுப்பழக்கமும் ஒரு வகை மூடநம்பிக்கையே! குடிப்பவர் உயிருக்கு அழிவு தரும், அவர் குடும்பத்தினரின் நலனுக்குக் கேடுதரும் உற்சாகப்பானம் என்னும் மூடநம்பிக்கையால் ஏற்பட்டுள்ள மதுப்பழக்கத்தை ஒழிக்கவும் அரசு முயல வேண்டும்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வீரமாகப் பேசிவிட்டாலே அவர்களுக்கு விடிவு கிடைத்துவிடும் என்பதும் இனப்படுகொலைாயாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதும் மூடநம்பிக்கைகளே! அயலகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துவிட்டு நம் நாட்டில் அவர்களை அடிமைகளாக நடத்துவது அறிவார்ந்த செயலாகுமா? தமிழர்நலனுக்கு எதிரான ஆட்சி மத்தியில் இருக்கும்பொழுது சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டதாலேயே ஈழம் பிறந்துவிடும் என்பது பெரிய மூடநம்பிக்கை அல்லவா? எனவே, அடுத்து ஆட்சி அமைப்போர் தமிழகச் சட்டமன்றத்தில் ஈழம் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் பரப்புரைக்குழுக்கள் அமைக்க வேண்டும். பிற மாநிலங்களின் மக்கள் சார்பாளர்களிடமும் அறிஞர்களிடமும் கலையுலகததினருடனும் கலந்து பேசி அவர்களிடம் தமிழ்ஈழம் சார்பான முடிவை உருவாக்க வேண்டும். உலக நாடுகளுக்கும் இக்குழுக்களை அனுப்பி அந்தந்த நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சரத் பெருமக்களையும் ஐ.நா. வின் பல்வேறு குழுக்களின் உறுப்பினர்களையும் சந்தித்து இனப்படு கொலையாளர்களுக்குத் ததண்டனை கிடைக்கவும், தமிழ்ஈழக் கொடி பாரெங்கும் பறக்கும் வகையில்,தமிழ் ஈழ மக்கள் தன்னுரிமையுடன் வாழ வகை செய்ய வேண்டும்!
குறிப்பிட்ட சமயத்தினர், அல்லது சாதியினர் அல்லது அமைப்பினர் யாவருமே குற்றவாளிகள் என்னும் மூடநம்பிக்கையும் ஒழிக்கப்பட வேண்டும். நீதித்துறையினர், காவல்துறையினர், ஆட்சியாளர்கள் முதலானவர்களிடம் இந்த மூட நம்பிக்கை உள்ளதால் விடுதலை செய்யப்படவேண்டிய பலர் சிறையில் வாழ்வைக் கழித்துக்கொண்டுள்ளனர். 14 ஆண்டுகளுக்குமேல் சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.
கட்சித்தலைவர்களிடம் உள்ள மற்றொரு மூடநம்பிக்கை மத்தியப்புலனாய்வுத்துறை(சி.பி.ஐ.) என்பது நடுநிலையான அமைப்பு என்பதாகும். எதற்கெடுத்தாலும் இதன்(சி.பி.ஐ.) உசாவல் தேவை என அவர்கள் கோரிக்கை விடுப்பதிலிருந்தே இந்த மூட நம்பிக்கையில் ஆழ்ந்திருப்பது நன்கு தெளிவாகும். இராசீவு கொலையில் அவ்வமைப்பு(சி.பி.ஐ) ஒருதலையாக நடந்துகொண்டு அப்பாவிகளைத் தண்டிக்க வைத்ததை அறிந்த பின்னரும் இந்த மூடநம்பிக்கை அவர்களிடம் உள்ளதுதான் வியப்பாக உள்ளது? அது சரி! பகுத்தறிவு உறங்கும் பொழுது மூட நம்பிக்கை உலா வரத்தானே செய்யும்!
ம.பு.துறை(சி.பி.ஐ.) யின் யாருக்கேனும் தண்டனை கிடைக்கச்செய்து, அதைப் பெருமையாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்னும் தவறான பெருமைசார்ந்த புலனாய்வால் இதுவரை தண்டிக்கப்படடவர்கள் வழக்குகளில் மறு உசாவல் தேவை. குறிப்பாக, இராசீவு கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள அப்பாவிகள் விடுதலை பெறும் வகையில் இதன் உண்மையை வெளிப்படுத்தியுள்ள தியாகராசன் முதலானவர்கள் அளித்த வாக்குமூலம்போன்ற கருத்துகளின் அடிப்படையில் மறு உசாவல் தேவை. அவ்வுசாவல் முடியும் வரை, இவ்வழக்கில் தண்டிக்கப்பெற்ற அனைவரையும் பிணை விடுப்பில் விடுதலை செய்ய வேண்டும். ம.பு.து.(சி.பி.ஐ.) வானில் இருந்து குதித்த தெய்வ அமைப்பாகக் கருதப்படும் மூட நம்பிக்கையை அனைவரும் விட்டொழிக்க வேண்டும்.
இவைபோல் தவறான கருதுகோள்கள் அடிப்படையில் நிலவும் மூடநம்பிக்கைகளில் இருந்து ஆள்வோர் விடுபட வேண்டும்.
எனவேதான், கூறுகிறோம்
யார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டுங்கள் என்று!
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 422)
– இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 172, தை 23, 2048 / பிப்பிரவரி 05, 2017
Leave a Reply