யாவரும் வாக்களிப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
யாவரும் வாக்களிப்பீர்!
தேர்தல் நாள்: பங்குனி 24, 2052 / ஏப்பிரல் 06, 2021
மக்களாட்சியில் நமக்கு வழங்கப்பட்ட சிறந்த ஆயுதம் வாக்குரிமை. இனி, ஐந்தாண்டுகளுக்கு நம்மை ஆள்வதற்குரிய சட்ட மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நம் வாக்குரிமையை ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும். ஒருமுறை தவறு செய்தால் இந்த ஐந்தாண்டு மட்டுமல்ல, அதன் பாதிப்பு தொடர் ஆண்டுகளிலும் நமக்கு ஊறு செய்யும்.
எனவே, நாம் நாளை தவறாமல் வாக்குப்பதிவகங்களுக்குச் சென்று நமக்குரிய வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௪ – 504)
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.(திருவள்ளுவர், திருக்குறள் ௫கஎ – 517)
என்னும் திருக்குறள்களுக்கிணங்க நாம், நம் தொகுதிக்குரிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
என்ற போதிலும், எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும், யார் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறிப் பயனில்லை. ஏனெனில், வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தாங்கள் விரும்பும் கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க எப்பொழுதுமே முன் நிற்பார்கள். பிறர், அவர்களிலும் புதிய வாக்காளர்களில் பெரும்பான்மையர் புதியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.
நாம் அறிவுரை கூறுவதற்கு இது நேரமுமில்லை. தேர்தல் விதிகளுக்கு மாறானதுமாகும். எனவே, தகுதியானவர்கள் எனக் கருதுபவர்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். ஒருவேளை தெரிவு தவறாக இருந்தாலும் பரவாயில்லை. வாக்குரிமையைத் தவறாமல் பயன்படுத்துங்கள்.
நாளை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், புதுச்சேரி, கேரளாவிலும் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்திலும் அசாமிலும் சில கட்டவாக்குப்பதிவுகள் முடிந்த பின்னர் அடுத்தக் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. பொதுத்தேர்தல் நடைபெறும் அனைத்துப் பகுதி வாக்காளர்களுக்கும் குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல்போல் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கும் நாம் விடுக்கும் வேண்டுகோள்
பயன்படுத்துவோம்! பயன்படுத்துவோம்!
வாக்குரிமையைப் பயன்படுத்துவோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
Leave a Reply