(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

5/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம் 6/ 69

 

மேலை நோக்கில் தமிழ்க்கவிதை(2001)

முன்னுரை, 31 கட்டுரைகள், முடிவுரை ஆகியவை உள்ளன.

மேலை ‘இலக்கியத்திறனாய்வு: விளக்கமும் வரையறையும்’ என்பது முதல் கட்டுரை.

திறனாய்வின் வகைகள் தொடர்பான அறிஞர்களின் கருத்துகள், திறனாய்வைக் கண்டிக்கும் அறிஞர்களின் கருத்துகள் எனப் பலவற்றையும் இதில் உரைக்கிறார். தமிழில் உள்ள திறனாய்விற்கு ஒப்பான உரையாசிரியர்களின் கருத்துகள் முதலியவற்றையும் நமக்குத் தேவையான செழுமையான திறனாய்வு குறித்தும் கூறியுள்ளார்.

எது கவிதை என இரண்டாம் கட்டுரையில் தெளிவுபடுத்துகிறார்.

பல்வேறு அறிஞர்களின் கவிதை குறித்த வரையறைகளை விளக்கியுள்ளார். தமிழ் உரையாசிரியர்கள் உரை விளக்கங்கள் குறித்தும் தமிழ்ப்பாடல்களை எடுத்துக் காட்டுகளாகக் கூறியும், கவிதையியல் கருத்துகளை விளக்குகிறார்.

மேலும், “எது கவிதை?” என்று வரையறை செய்ய முயலும்போது இடர்ப்பாடு உறுவது திண்ணம். வெற்றி பெற்றகவிதைகள் எவ்வாறுவெற்றி பெற்றனவென்று ஓரளவுக்குக்கூற முடியும்.தோ்வியடைந்த கவிதைகள் ஏன் தோல்வியடைந்தன வென்று ஊகிக்கலாம். ஆனால், உறுதியாக வெற்றி பெறக்கூடிய கவிதை எவ்வாறு இருக்க வேண்டும் என்று அறுதியிட்டுச்சொல்வது யார்க்கும் இயலாததாகும்”  என்கிறார். 

மூன்றாம் கட்டுரை புதுமைத் திறனாய்வு குறித்தது

புதுமைத் திறனாய்வின் தோற்றம், வெவ்வேறு காலங்களில் வளர்ந்த நிலை, புதுமைத் திறனாய்விற்கு எழுந்த எதிர்ப்பு என இது குறித்து  இக்கட்டுரையில் ஆராய்கிறார்.  மேலைப்புதுமைத் திறனாய்வாளர்களின் கருத்துகளையும் அவற்றுக்கு எதிர்ப்பான கருத்துகளையும் திரட்டித் தருகிறார். வாழ்க்கையிலிருந்து கவிதையை அறவே துண்டிக்கச் செய்த முயற்சி புதுமைத்திறனாய்வின் பெருங்குறையாகும் என்கிறார்.

புதுமைத் திறனாய்வு குறித்துப் பேசும் பொழுது தமிழ்த்திறனாய்வு மரபு குறிதத சிந்தனைகள் தவிர்க்க இயலாதவை; ஒரு நூலை உயிருடைய முழுப்பொருளாகக் கருதி நோக்கும் புதுமைத்திறனாய்வாளர்களின் ஆய்வை அறியும் பொழுது தொல்காப்பியரின் நோக்கு என்னும் கோட்பாடு நினைவிற்கு வருவது இயல்பானது என்கிறார். மேலை நாட்டுப் புதுமைத் திறனாய்வாளர்களின் நூல்களை ஆழ்ந்து பயின்று அக்கோட்பாடுகளை அளவுகோல்களாகக் கொண்டு சங்க  இலக்கியங்களையும் இடைக்கால இலக்கியங்களையும் மறு மதிப்பீடுகள் செய்ய வேண்டுகிறார்.

புதுமைத் திறனாய்வில் பொலிவுறும் சங்கப்பாடல்கள் குறித்து நான்காவதாக விளக்குகிறார்.

யாரும் இல்லைத் தானே கள்வன்

எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல்(25),

சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே

எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல்(235),

ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார். திறனாய்வு உரைகள் இப் பாடல்கள் சிறப்பை நமக்கு நன்கு புலப்படுத்துகின்றன. சங்கப்பாடல்கள் சிறப்பிற்கு எடுத்துக் காட்டுகளாக இவற்றைக் கருதலாம்.

சிகாகோ திறனாய்வாளர்கள் குறித்து ஐந்தாவதாகக் கூறுகிறார்.

1952இல் வெளியிடப்பட்ட ‘திறனாய்வாளர்களும் திறனாய்வும்: பழமையும் புதுமையும்’ (Critics and Criticism: Ancient & Modern) என்ற நூலின் ஆசிரியர்கள் சிகாகோ பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்தவர்கள். இவர்களே சிகாகோ திறனாய்வாளர்கள் எனப்படுவர். இக்குழுவுடன்அவரகளது மாணாக்கர்களும் அன்பர்களும் இணைந்துள்ளனர். இவர்கள் வெளியுலகிற்கு மிகுதியும் அறிமுகமானவர்கள் அல்லர். இத்தகையவர்களின் கருத்துகளை நமக்குத் தெளிவாகப் பேரா.ப.ம.நா.விளக்குகிறார்.

முல்லையா? நெய்தலா? என்பது ஆறாவது கட்டுரை.

நப்பூதனார் எழுதிய முல்லைப்பாட்டில் இடம் பெறுவது முல்லை ஒழுக்கமா? நெய்தல் ஒழுக்கமா? என்பது குறித்த அறிஞர்களின் திறனாய்வு குறித்ததே இக்கட்டுரை.

நச்சினார்க்கினியர், மறைமலை அடிகள், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் விடைகாண முயன்று எழுதிய உரைகள் அல்லது விளக்கங்கள் சிறப்பானவை.

முல்லைப்பாட்டின் மூன்று உரைகளிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியவையும் தள்ளக் கூடியவையுமான கருத்துகள் இருப்பினும் அவை மூன்றும் சிகாகோ திறனாய்வாளர்களின் அணுகுமுறைக்குப் பெரும்சான்றுகளாகின்றன என்பதில் ஐயமில்லை என்கிறார் பேரா.ப.ம.நா.

மார்க்குசியத் திறனாய்வு குறித்து ஏழாவது கட்டுரை அளித்துள்ளார்.

அரசியல் உலகில் மார்க்குசியக் கோட்பாட்டின் செல்வாக்கு மங்கி வருகிறது; ஆனால், இலக்கிய உலகில் பிற இலக்கியக் கோட்பாடுகளின் அதிரடித்தாக்குதல்களுக்கு ஆளான போதிலும் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று  இலக்கிய விற்பன்னர்கள் கொண்டு சேர்க்கின்ற புதிய புதிய கருததுகளாலே புதுக்கோலம் புனைந்து உலகளாவிய நிலையில் சிறப்போடு வலம் வந்து கொண்டிருக்கிறது  என விளக்குகிறார்.

மனித இன வரலாற்றில் மன்பதையியல், அரசியல், இலக்கியம் ஆகிய மூன்று துறைகளிலும் மிக அழுத்தமான நிலைத்த தாக்கத்தை ஏற்படுத்திய மார்க்குசின் சிந்தனைக்காக அம் மாமேதைக்கு மனித குலம் என்றென்றும் கடன்பட்டிருக்கிறது என்கிறார்.

பாரதிதாசனும் பொதுவுடைமைத் தத்துவமும் என்பது எட்டாவது கட்டுரை.

“பாரதிதாசனின் பாடுபொருள்கள் மிகப்பல; அததகைய வீச்சு வேறு கவிஞனிடத்தில்காண்பது அரிது. கவிதை எண்ணிக்கையிலும் பொருட் பரப்பிலும்அவரோடு போட்டியிடத்தக்க நிலையிலிருக்கும ஒரே இந்தியக் கவிஞர் தாகூர் ஆவார். காதல்பற்றிக் கவிதை மழை பொழிந்த தாகூரும்கூட குமுகாயத்தின் அடித்தட்டில் இருப்போர்பற்றிப் புரட்சிக் கவிஞர் அளவுக்குப் பாடியிருக்கிறார் என்று சொல்ல முடியாது” என்கிறார்.

பாரதிதாசன் புதுச்சேரி அரசியலில் நுழைந்த பிறகு பொதுவுடைமைக் கட்சியுடன் மோதல் ஏற்பட்டது. அப்பொழுதும் கூடப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர்களைத் தாக்கிப் பேசினாலும் பொதுவுடைமைக் கொள்கையை எந்த இடத்திலும் விடவில்லை. மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் இனப்பற்றும் பொதுவுடைமைக் கொள்கைக்கு முரண்பாடானவை என்பதை அவர் ஏற்றுக் கொள்ள வில்லை. இவ்வாறு தமிழோடு பொதுவுடைமைக் கோட்பாட்டையும் தாங்கியே பாரதிதாசன் நின்றார் என்கிறார்.

பாரதிதாசனின் மார்க்குசியக் கண்ணோட்டத்தில் அணுகும்போது சில உண்மைகள் தெளிவாகின்றன. அவர் தமது கவிதைகளில் பொதுவுடைமைக் கோட்பாட்டைத் தன்மதிப்பு, திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு அழகுறப் பயன்படுத்திக் கொண்டார். தொழிலாளர் மேம்பாடு என்னும் பாடுபொருள் அவரது கவிதைகளில் பலவற்றிற்குப் பெரும் ஆற்றலைச் சேர்த்து அவை மேடை தோறும் முழங்கப்படுவதற்குக் காரணமாயிற்று. தமிழின் சிறப்புப்பற்றி அவர் பேசும் கவிதைகளைப் போலவே தொழில் உயர்வுபற்றிப் பேசும்கவிதைகளும் வெற்றி பெற்றன. அவை அவர்க்கு உலக அரங்கில் மார்க்குசியம் பேசிய பெருங்கவிஞர்களின் அணியில் ஒரு நிலைத்த இடத்தைப் பெற்றுத்தரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது .

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்

 

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 7/ 69