தலைப்பு-வடமொழிவல்லாண்மை, மறைமலை : thalaippu_vadamozhi_vallaanmai_maraimalaiilakkuvanar

வடமொழி வல்லாண்மையை முறியடிப்போம்!

  வடக்கே ஆயிரம் மொழிகள் இருந்தாலும் வடமொழி என்னும் சொல் சமசுகிருதத்தையும் தெற்கே ஆயிரம் மொழிகள் நிலவினாலும் தென்மொழி என்பது தமிழையும் தொன்றுதொட்டுக் குறித்து வருகின்றன. தென்மொழியாகிய தமிழ், இன்றைய இந்தியாவின் தெற்குப்பகுதி முழுமையையும், இன்னும் கூடுதலாக, இன்றைய குமரிக்குத் தெற்கே நிலவிய நிலப்பகுதியையும் சேர்த்துத் தன் ஆளுகையில் கொண்டிருந்தது.

தென்மொழி இயற்கையான மொழி. அக்காலத் தமிழரின் அறிவுவளர்ச்சியாலும், சிந்தனை முதிர்ச்சியாலும் இலக்கிய வளமும், இலக்கணச் செப்பமும் கொண்டு சிறந்தமொழி. வடமொழி செயற்கையான மொழி. வடநாட்டில் நிலவிய பிராகிருத மொழிகளின் தாக்கத்தாலும், தென்மொழியாகிய தமிழின் இலக்கண அடிப்படையை ஏற்றுக்கொண்டு தமிழ் எழுத்துகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட செயற்கையான மொழி.

தமிழ்மொழி பேசுதற்கு எளிய மொழி. எழுத்து வழக்கிற்கும் பேச்சுவழக்கிற்கும் இடைவெளி இல்லாத மொழி. வடமொழி பேசுதற்குக் கடினமான மொழி. சடங்குகளையும் வேள்விகளையும் நடத்துவதற்கு ஏனைய பிராகிருத மொழிகளை விலக்கிவைக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட  மொழி.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு வடமொழி எக்காலத்திலும் காரணமாக அமையவில்லை. ஆனால் வடமொழியின் வளர்ச்சிக்குத் தமிழும் தமிழரும் பல சூழல்களில் உதவியாக அமைந்த செய்தியை மறுக்க இயலாது.

புத்த சமயத்தையும் சமணசமயத்தையும் பரப்புதற்குத் தென்னாட்டுக்கு அந்தச் சமயச்சான்றோர் வந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய பாலி, அர்த்தமாகதி, சவுரசேனி போன்ற பிராகிருத மொழிகள் தமிழின் திரிபுக்குக் காரணமாக அமையவில்லை. அவர்கள் தமிழைக் கற்றுத் தமிழில் பல நூல்கள் இயற்றினர்.

  வேதம் பரப்பவந்த வைதிகர் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்ற சூழலில் வடமொழி தமிழைத் திரிபுபடுத்தக் காரணமாயிற்று. அன்றைய தமிழரின் அறியாமையாலும், மூடத்தனத்தாலும் சமசுகிருதம் அரண்மனையிலும், ஆலயங்களிலும் கோலோச்சிப் பழந்தமிழைப் பாழ்படுத்திப் பல மொழிகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. தேவையற்ற சமசுகிருதக் கலப்பு, பழந்தமிழைக் கன்னடமாகவும் தெலுங்காகவும் துளுவாகவும் மலையாளமாகவும் திரிந்துபோகவும், தமிழ்மரபிலிருந்து பிரிந்துபோகவும் வழிவகுத்தது. இங்ஙனம் தன் கிளைமொழிகள் பிரிந்துபோன பின்னரும் தமிழ் தன் தனித்தன்மையையும் செம்மையையும் தூய்மையையும். சற்றும் இழந்துவிடாமல் செறிவும் இனிமையும் மிக்க இலக்கியங்களைத் தொடர்ந்துபெற்றுத் தழைத்து வளர்ந்தது; வளர்ந்துவருகிறது.

மூவேந்தர் ஆட்சியில் தலைமை பெற்றுத் திகழ்ந்த தமிழ் ஒண்டவந்த வடமொழியிடம் அடிமைப்படுத்தப் பட்டது எதனால்? எப்போது? எப்படி?

வேற்றவர் படையெடுப்பால் மூவேந்தர் ஆட்சி சீர்குலைந்த காலத்தில், குறிப்பாகச் சொன்னால் பல்லவர் ஆட்சிக்காலத்தில், பல்லவ மன்னர் பவுத்த, சமண சமயங்களைப் போற்றிவந்த சூழலில், பாலி, பிராகிருத மொழிகள் செல்வாக்குப் பெற்றன. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய ‘மூவர் முதலிகள்’ சைவ சமய எழுச்சிக்குக் களம் கண்டனர். உருவ வழிபாடு செல்வாக்குப் பெற்றதும் கோயில்கள் பெருகத் தொடங்கியதும் இந்தக் காலத்தில்தான். “அருச்சனை பாட்டே ஆகுமாதலால் சொற்றமிழ் பாடுக என இறைவனே தமிழ் வழிபாட்டை விரும்பியதாகத் தேவாரம் உரைத்தாலும் நடைமுறையில் வைதீகர் எழுச்சியும் வடநாட்டிலிருந்து புரோகிதர் வரவும் மிகுந்தது. இந்தக் காலத்தில்தான். வேதங்களின் மேலாண்மையும் வடமொழியின் செல்வாக்கும் அப்போது தொடங்கியது இன்றளவும் நீடித்து வருகிறது என்று கூறினால் மிகையில்லை.

  பல்லவர் காலத்திற்குப் பின்னர் சோழர், பாண்டியர் மீண்டும் எழுச்சி பெற்றாலும் வடமொழி மேலாண்மையும் வைதிகர் செல்வாக்கும் தமிழ்ச் சமூகத்தில் தவிர்க்க இயலாச் சூழல்களாயின. வேள்வியில் மயங்கிய மன்னர்கள் வைதிகர்களுக்கு இறையிலி நிலமாக(வரி செலுத்துவதிலிருந்து விலக்குப் பெற்ற நிலமாக) பிரமதேயங்களையும் சதுர்வேதி மங்கலங்களையும் நன்கொடையாக வழங்குவதில் பேருவகை கொண்டனர்.

  வேதங்களிலும் வேள்விகளிலும் பெருமதிப்பும் ஈடுபாடும் காட்டத் தொடங்கிய பின்னர் சாதிப்பிரிவுகள் தலைதூக்கின. தீட்டு, தோசம் என்னும் மூடநம்பிக்கைகள் வாழ்க்கை நெறிகளாயின. தமிழர்கள் தம் உடன்பிறப்புகளையே ஒதுக்கித்தள்ளிய கொடுமையும் வந்தேறிகளை வழிபாடு செய்து போற்றிய மடமையும் தமிழ்ச்சமூகத்தின் வீழ்ச்சிக்கும், சிதைவுக்கும் வழிவகுத்தன.

சங்கக் காலத்தில் மூவேந்தர் நற்றமிழ் வளர்த்தார்கள்; வடமொழியின் தாக்கம் சிறிதுமில்லை. ஆனால் பல்லவர் காலத்திற்குப் பின்னர் வடமொழியின் வல்லாண்மை மேலோங்கியது. இராசராசன், இராசேந்திரன், பராந்தகன், குலசேகரன் போன்ற பெயர்களைப் பாருங்கள். கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் கேரளர் ஆகினர். கேரளம் முற்றும் முழுதும் வடமொழிக்கு அடிமையாகியது.

மன்னர்கள் தம் வாள் வலியாலும், தோள் வலியாலும் பகைவர்களை வென்றுவந்த காலம் மாறிப் போரில் வெற்றி காண்பதற்குப் பூசாரிகளையும் சிறப்புப் பூசைகளையும் நம்பினர் என்னும் போது நமக்கு நாணமாக உள்ளது.

  அண்மையில் நடந்த தொல்லியல் சங்க மாநாட்டில் முனைவர் விசயவேணுகோபால் குறிப்பிட்டுள்ள செய்தி நம் சிந்தனைக்குரியது.

  பாண்டிய மன்னர்களும் சோழ மன்னர்களும் போர்க்காலங்களில் தம் தரப்பு வெற்றி காண்பதற்குச் சிறப்புப் பூசை செய்யவேண்டும் என்று வடநாட்டு மடத்தலைவர்களைத் தொடர்பு கொண்டுள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 திருவண்ணாமலைக்கு அண்மையில் உள்ள ஆர்ப்பாக்கத்தில் கண்டெடுத்த கல்வெட்டு வழங்கும் செய்தியை அவர் சான்று காட்டியுள்ளார். சிங்களப் படைத் தலைவர்கள் இராமேசுவரத்தைக் கைப்பற்றிச் சோழநாட்டின்மீது படையெடுத்துவந்த வேளையில் எதிரிலி சோழ சம்புவராயர் என்னும் சோழநாட்டு அதிகாரி கவுடதேசத்தில்  இருந்த சைவ மடத்தலைவராகிய உமாபதி தேவர் என்பவரை அணுகிப் பகைவனை வெல்லச் சிறப்புப் பூசை செய்யுமாறு கேட்டுக் கொண்டராம். அவ்வாறே அந்தச் சைவமடத் தலைவரும் 21 நாள்கள் சிறப்புப்பூசை செய்தாராம். இதன் விளைவாகப் போரில் வெற்றி அடைந்த சோழமன்னன் இராசாதிராசன் அவ் வெற்றிக்கு உறுதுணையாகப் பூசை செய்த சைவமடத் தலைவருக்கு ஆர்ப்பாக்கம் என்னும் சிற்றூரைக் கொடையாக வழங்கினான் என அக் கல்வெட்டு கூறுகிறது.

இதுபோன்றே இலங்கையுடனான போரில் தன் படையெடுப்பு வெற்றி காண்பதற்காகக் கோலாகி மடத்தலைவரின் உதவியைப் பாண்டிய மன்னன் வேண்டிப் பெற்றதாக பிரான்மலை மங்கைபாகர் கோயில் கல்வெட்டு கூறுகிறது. கி.பி. பத்தாம் நூற்றாண்டிலும், பதினொன்றாம் நூற்றாண்டிலும் மத்தியப் பிரதேசத்தில் செயற்பட்ட பல மடத் தலைவர்களின் உதவியைத் தமிழ்மன்னர்கள் வேண்டிப் பெற்றதால் அங்கிருந்த பாசுபதம், காளாமுகம், காபாலிகம், மகாவிரதியர் ஆகிய சைவப் பிரிவுகள் அந்தச் சூழலில் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றன.

  இங்கே நம் கவனத்திற்குரிய செய்தி அக் காலத் தமிழ்மன்னர்கள் போருக்குப் பூசை செய்வதற்குத் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் பேசும் பூசாரிகளை நம்பாமல் வடநாட்டில் இருந்த வடமொழியில் பூசை செய்யும் மடத் தலைவர்களை அணுகினார்கள் என்பதே.

தமதுயிரைத் துச்சமாகக் கருதி மன்னனுக்காகவும், நாட்டுக்காகவும் போர்க்களம் புகுந்து சண்டை செய்த வீரர்களின் ஈகத்தைவிட, புரியாத மொழியில் வழிபாடு செய்யும் புரோகிதர்களே தம்மைக் காக்க வல்லார் என்று நம்பிய அக்காலத் தமிழ் மன்னர்களின் அறியாமையை எண்ணி அழுவதா? சிரிப்பதா?

  இன்றைக்கும் இதேநிலைதான்! பாடுபட்டுப் பணத்தைத் தேடிக் கடன்வாங்கி வீடு கட்டிய பின்னர் புரியாத வடமொழியில் ஓமம் செய்தால்தான் இற்றைத் தமிழரும் நிம்மதி அடைகிறார்கள். எனவே, வடமொழி வல்லாண்மையின் உண்மைக் காரணம் பூசாரிகளோ, வடநாட்டவரோ அல்லர். தமிழர்களே! தமிழர்களின் அறியாமையே!

தமிழ் உதடுகளால் உச்சரிக்கக்கூட முடியாத தேசசுவினி, அட்சிதா, ம்யுருத்தஞ்சயா என்றெல்லாம் தம் மக்களுக்குப் பெயர் வைக்கும் தமிழர்களின் மடமை களைந்தெறியப்பட வேண்டும்.

குழந்தையின் பெயர் ‘’வில் ஆரம்பமாகவேண்டும் ‘ஸ்ரீ’யில் ஆரம்பமாகவேண்டும் என்று சோதிடர்கள் கூறும்போது, அவையெல்லாம் தமிழ் எழுத்துகள் இல்லையே என்று எந்தத் தமிழ் மகனாவது கூறுகிறானா?

  தமது மொழியில் பேசுவதும், வழிபடுவதும், வழக்காடுவதும், வணிகத்தொடர்பு கொள்வதும், பாடம் பயில்வதும் தன் பிறப்புரிமை என்று தமிழர்கள் கருதாதவரை வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்நாடு மீள்வது கடினம்.

 இன்று பெருகிவரும் தமிழியக்கத் தன்னார்வ அமைப்புகள் தமிழ் மீண்டும் தன் தலைமையிடத்தைப் பெறுதற்குத் திராவிடர் கழகத்துடன் ஒத்துழைத்துக் களம் காண்பதே வெற்றிக்குரிய வழியாகும்.

தமிழியக்கமும் திராவிட இயக்கமும் இணை இயக்கங்கள் என்பதனை மறந்துவிடக்கூடாது.

‘‘1916 ஆம் ஆண்டு உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்’’ எனும் வள்ளலாரின் பாடலடியில் தேகம் என்னும் வடசொல் நெருடுகின்றதே,  அதற்கு மாற்றாக, யாக்கை எனும் நற்றமிழ்ச் சொல் இடம் பெற்றால் இலக்கணமும் கெடாது, இனிமையும் கூடுமே என்னும் சுவாமி வேதாசலத்தின் சிந்தனை அவரை மறைமலை அடிகள் என மாற்றியது. இருபதாம் நூற்றாண்டில் தமிழியக்கம் எழுச்சி பெற வழிவகுத்தது.

  அடிகளாரின் ஓயா உழைப்பும் அதற்கேற்பத் தந்தை பெரியாரின் திராவிட இயக்கம் தமிழி யக்கத்தைத் தமிழரின் வாழ்வியக்கமாகக் கடைப்பிடித்த நடைமுறைகளுமே தமிழியக்க வெற்றிக்கு வழி வகுத்தன. எனவே, தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ் மறுமலர்ச்சி என்னும் நாணயத்தின் இரு பக்கங்களாகத் தமிழியக்கமும், திராவிட இயக்கமும் விளங்கிவருகின்றன என்னும் உண்மையை மறைத்தலோ மறத்தலோ பெரும்பிழை எனலாம். இன்றைய தமிழியக்க ஆர்வலர் பலர் பெரியாரையும் ,திராவிட இயக்கத்தையும் பழித்தலும், குறைகூறுவதுமே தமிழியக்கக் கோட்பாடு எனக் கருதிச் செயற்படுகின்றனர்.

  மறைமலையடிகளின் தனித்தமிழியக்கம் பெரியாரின் துணையின்றிப் போயிருந்தால் அறிஞர்தம் இயக்கமாகவே விளங்கி, மக்களின் பின்பற்றுதலின்றிப் போயிருக்கும். ஆனால் தன்மதிப்பு (சுயமரியாதை) கொண்டு தலைநிமிர்ந்து வாழப் பிறமொழி அதுவும் வடமொழியின் வல்லாண்மையை வேரறுக்கவேண்டும் என்று பெரியார் அறிவுறுத்தி யதாலேயே இராமையா அன்பழகனாகவும், நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும், சின்னராசு சிற்றரசு ஆகவும் தனித்தமிழில் பெயர் மாற்றம் செய்தனர். இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் தனித்தமிழில் பெயர் மாற்றம் செய்யத் தூண்டுகோலாக விளங்கிய திராவிட இயக்கம் 1967 இல் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஆட்சிக்கலைச் சொற்களைத் தமிழாக்கி நாட்டில் தமிழ்மணம் கமழச் செய்ததை மறக்க முடியுமா? திராவிட இயக்கத்தின் துணையின்றித் தமிழியக்கம் வேரூன்றியதாகக் கூறுவது வரலாற்றை மறைக்கமுயலும் சூழ்ச்சி என்றே கூறவேண்டும்.

தமிழின் தனித்தன்மையையும், சொல்வளத்தையும், பொருள்நுட்பத்தையும் முன்னிலைப்படுத்தித் தனித்தமிழியக்கம் அறிஞர்களால் முன்னிறுத்தப்பட்டது. தமிழனின் தன்மதிப்பையும், சாதி வேறுபாடு அகற்றும் சமநோக்கையும், அனைவரையும் தமிழின் பெயரால் ஒன்றுபடுத்தும் உயர்நோக்கையும் பெரியாரியக்கம் வலியுறுத்தியது.

  தமக்கு ‘வணக்கம்’ தெரிவித்த பா.வே.மாணிக்க நாயகர் அவர்களைப் பார்த்து, தமிழ்த்தாத்தா உ.வே.சா. ‘‘என்ன நாயக்கர்வாள், நீங்களும் இந்த சு.ம.க்கள் மாதிரி வணக்கம் என்கிறீர்களே? நமஃச்காரம் என்று சொல்லக்கூடாதா?’’ என மனம் வருந்தினார் என்பது வரலாறு. சு.ம.,காரர்கள் புகுத்திய வணக்கம் சாதி, சமய வேறுபாடுகளைத் தகர்த்தெறியவில்லையா?

உயர்சாதி இந்து தன்னொத்தவனைக் காணும்போது ‘‘நமஃச்காரம்’’ என்பதும் பிற்பட்டவர்கள் உயர்சாதியினரைக் காணும்போது ‘‘கும்பிடறேனுங்க சாமி’’ என்பதும், இசுலாமியர்கள் சலாம் சொல்வதும், கிறித்தவர்கள் ஃச்தோத்திரம் சொல்லிக்கொள்வதும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வழமைகளாக இருந்தன. பெரியார் அறிமுகப்படுத்திய வணக்கம் இத்தனை சாதி சமய வேறுபாடுகளையும் தூக்கி எறிந்த சமநீதிச் சூறாவளியாக விளங்கியது. ‘‘நமஃச்காரம், சலாம், ஃச்தோத்திரம்’’ மறைந்தன. தமிழன் தமிழால் ஒன்றுபட்டான். இதுதான் பெரியார் செய்த பெரும்புரட்சி.

  தமிழியக்கம் என்பது வெறும் மொழித் தூய்மைவாதம் அல்ல; தமிழன் தன்மதிப்புப் பெறும் வகையில் தன் மொழியின் முதன்மையை உணர்ந்து பிறமொழித் தளைகளிலிருந்து விடுதலை பெறுவதே என்பதைப் பெரியாரின் அணுகுமுறை தெளிவுறுத்தியது.

வழிபாடு செய்வதற்குப் புரியாத வடமொழியின் துணை எதற்கு? தாய்மொழியில் வழிபாடு செய்தால் இறைவனுக்குப் புரியாதா என்று இறையன்பர்கள் சிந்திக்கவேண்டும். கடவுள் நம்பிக்கை தமிழ் மரபைப் பொறுத்தவரை வேள்விச் சடங்குகள் அல்ல. தமிழ் மொழியில் வணங்கிக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவதேயாகும். எனவே சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லவேண்டும் என்றார் மாணிக்கவாசகர். ஆனால் நடப்பதென்ன?

  கோயில்களில் தம் தாய்மொழியில் வழிபாடு செய்யும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளதே! புரியாத மொழியில் வழிபாடு நடப்பதால் எவ்வளவு பெரும்பிழைகள் நேருகின்றன? சிவன் கோவில்களில் திருமுழுக்காட்டு (அபிசேகம்) நடக்கும் போதெல்லாம் ‘ரீருத்திரம்’ என்பதே ஓதப்படுகிறது. யசுர்வேதத்தின் பகுதியாக அமைந்துள்ள இந்த ‘ரீருத்திரம்’ இறைவனை எவ்வாறு அழைக்கிறது தெரியுமா?

நமோ ஃசிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ 3.1:7

வாளேந்தி வருபவர்களாகவும், பிறர் பொருளைக் கவரவென இரவில் சஞ்சரிப்பவர்களாகவும், அதற்கெனக் கொன்று அலைபவர்களின் தலைவனே! போற்றி! போற்றி! [3.1:7]

நம: உஃச்ணீ ஃசிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ 3.1:8

தலையிலொரு துண்டுகட்டி, மலைவாசிபோல் முகம் மறைத்து
வயல்களிலும் வீடுகளிலும் திருடுபவர் தலைவனே! போற்றி! போற்றி! [3.1:8]

  (நமகம்: மூன்றாவது அனுவாகம்)

  இறைவனைக் கொலைகாரனாகவும் திருடனாகவும் குறிப்பிடும் மந்திரங்கள் திருமுழுக்காட்டின் போதெல்லாம் நிகழ்த்தப்படுவது அடியார்களுக்குத் தெரியுமா?

  இந்த வடமொழியை விலக்கித் தமிழில் அமைந்த தேவாரம், திருவாசகத்தில் பாடினால் பொருள்புரியுமல்லவா?அந்த உரிமைக்கு ஏன் போராடக்கூடாது?

  நம் கோயில்களில் நம் மொழியில் வழிபட உரிமை இல்லையா? என்றாவது அடியார்கள் சிந்தித்தார்களா?

அரசியல்தளத்தில் சமய அடிப்படைவாதிகள் வடமொழியைத் திணித்துப் பிறமொழிகளை அடிமைப்படுத்த முயல்வதை முறியடிக்க நாம் நம் வரம்புக்குள்ளிருந்தே வழிகாணமுடியும்.

   குழந்தைகளுக்குப் பெயர்வைப்பதானாலும் வீட்டு வழிபாடுகளிலும் கோயில்வழிபாடுகளிலும் தமிழை முன்னிறுத்துவோம்.வெற்றி காண்போம்!

 ஒரு நூற்றாண்டுக்காலமாக வடமொழியின் வல்லாண்மையை எதிர்த்துப் போராடிவரும் திராவிடர் கழகத்தின் தலைமையில் தமிழியக்கத் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து செயற்பட்டால் உறுதியாக நாம் வெற்றி காண்போம்!

 

maraimalai Ilakkuvanar01

 முனைவர் மறைமலை இலக்குவனார்

விடுதலை: ஆகத்து 06, 2016

http://viduthalai.in/e-paper/127301.html

முத்திரை-விடுதலை : logo_viduthalai_muthirai