வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 4/4 :: இலக்குவனார் திருவள்ளுவன்
வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 4/4
தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி (பிள்ளை)
தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி(பிள்ளை) குறித்த பேரா.சே.சி. கண்ணப்பனார் கட்டுரை 8 ஆவதாக இடம் பெற்றுள்ளது.
150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர் 20 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியிருந்தாலும் வாணாள் முழுவதும் தமிழ் ஆர்வலராகத் திகழ்ந்தார்; தமிழறிஞரான இவர் அறிஞர் போப்பு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்; சமய இலக்கியங்களையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மாக்சு முல்லர் முதலான பன்னாட்டு அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றவர் என இவரின் சிறப்புகளைக் கட்டுரையாளர் தெரிவிக்கிறார்.
இவரின் திருக்குறள் பணிகளை நிறைவாகப் பட்டியலிட்டுக் கட்டுரையாளர் அளித்துள்ளார். அதில் 1918 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் இரண்டாம் மாநாட்டில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி வேண்டித் தீர்மானம் நிறைவேற்றி அதுபோது அறிவியல் சார் திருக்குறளை எடுத்தியம்பினார் எனவும் தெரிவித்துள்ளார்.
இரு பக்கங்களிலேயே முடிந்து விட்ட அறிஞர் சே.எம்.நல்லசாமி(பிள்ளை) பணிகள் மேலும் கூடுதலாகத் தெரிவிக்ப்பட்டிருப்பின் நன்று.
அ.க.நவநீதகிருட்டிணன்
அடுத்து ‘அ.க.நவநீதகிருட்டிணனாரின் தமிழ்த்தொண்டு’ என்னும் நல்லாசிரியர் வை.இராமசாமியின் கட்டுரை இடம் பெற்றுள்ளது.
தொடக்கத்தில் இவரின் கல்விப்பருவத்தையும் இளமைப் பருவத்தையும்பற்றிக் கட்டுரையாளர் விளக்கியுள்ளார்.
நவநீதனாரின் திருக்குறள் காதலை வெளிப்படுத்துவது ‘வள்ளுவர் சொல்லமுதம்’ என்னும் தலைப்பிலான நான்கு தொகுதிகளாகும். முதல் தொகுதியின் முதல் கட்டுரையின் பெயர் வள்ளுவர் தெள்ளமுதம். ஆனால், இதனையே புத்தகத் தலைப்பாகப் பக்கம் 97 இல் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. படிப்போர் இரு வேறு நூல்களாக எண்ணுவர். திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
இந்நூலில் இருந்து பல் வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் நவநீதனாரின் திருக்குறள் புலமையையும் ஈடுபாட்டையும் கட்டுரையாளர் திறம்பட விளக்கியுள்ளார்.
நெல்லைத் திருவள்ளுவர் கழகத்தில் 12 ஆண்டுகள் தலைவராக இருந்தும் நெல்லை அருணகிரி இசைக்கழகம் மூலமும் பிற அமைப்புகள் மூலமும் திருக்குறள்பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளதையும் கட்டுரையாளர் எடுத்தியம்பியுள்ளார். இவ்விரு அமைப்புகளும் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரால் வளர்ச்சியும் புகழும் பெற்றவை என்பது குறிக்கத்தக்கது.
அமைப்புசார் பணிகளாலும் கல்விப்பணிகளாலும் திருக்குறள் சான்றோராகத் திகழ்ந்து வரலாறு படைத்த அ.க.நவநீத கிருட்டிணனாரை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ள கட்டுரையாளர் நல்லாசிரியர் வை.இராமசாமிக்குப் பாராட்டுகள்.
முனைவர் நவராசு செல்லையா
நல்லாசிரியர் க.பன்னீர்செல்வம், முனைவர் நவராசு செல்லையா குறித்து எழுதியுள்ள கட்டுரை பத்தாவதாக இடம் பெற்றுள்ளது.
விளையாட்டுத் துறையில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதிய முனைவர் நவராசு செல்லையாவின் தோற்றம், கல்வி, தொழில், பதிப்புப்பணி, 25 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்த ‘விளையாட்டுக் களஞ்சியம்’ என்னும் திங்கள் இதழ்ப்பணி, விளையாட்டு இசைப்பாடல்கள் வெளியீடு, திரைப்பட உருவாக்கப்பணி, தொலைக்காட்சிப்பணி, வானொலிப்பணி, உடற்கல்வி மாமன்றப் பணி, அவர் படைத்த 126 நூல்கள் விவரம், எனப் பலவற்றையும் கட்டுரையாளர் அளித்துள்ளார்.
குறளுக்குப் புதிய பொருள்
வள்ளுவரின் விளையாட்டுச்சிந்தனைகள்
வள்ளுவர் வணங்கிய கடவுள்
திருக்குறள் புதிய உரை(அறத்துப்பால் மட்டும்)
என்னும் தம் நூல்களில் திருக்குறள் பார்வையில் விளையாட்டியலைத் திறம்பட விளக்கியுள்ளார் என்பதைக் கட்டுரையாளர் நமக்கு விளக்கியுள்ளார். இவற்றின் மூலம் திருக்குறள் ‘உடலியலைப் போற்றும் வாழ்வியல் நூல்’ என்னும் நிலைப்பாட்டை மெய்ப்பித்துளார் என்றும் கட்டுரையாளர் எடுத்துரைக்கிறார்.
விளையாட்டுத்துறையில் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற நவராசு செல்லையா, கதை இலக்கியுங்களிலும் பிற படைப்பிலக்கியங்களிலும் சிறந்திருந்ததுடன் திருக்குறள் நெறியைப் பரப்புவதிலும் சிறந்துள்ளார் என நல்லாசிரியர் க.பன்னீர்செல்வம் நமக்கு நன்கு விளக்கியுள்ளார்.
சாமி பழனியப்பன்
நிறைவாக நூல், கோட்டை சு.முத்துவின சாமி பழனியப்பன் கட்டுரையுடன் முடிகிறது.
எழுத்தாளர், இலக்கிய ஆய்வாளர், நூலாசிரியர், முற்போக்குச் சிந்தனையாளர், பாவேந்தர் பாரதிதாசனின் மாணவர் கவிஞர் சாமி.பழனியப்பன் குறித்த வரலாற்றுப் பதிவுகள் கிடைக் கவில்லை எனக் கட்டுரையாளர் தெரிவிக்கின்றார். எனவே கவிஞர் பழனி பாரதி அவரைப்பற்றி வரலாற்று நூலை எழுதி வெளியிட வேண்டும் என வேண்டுகிறேன்.
15 நூல்களின் ஆசிரியரான கவிஞர் சாமி.பழனியப்பன் 6 நூல்களைத் திருக்குறள் பற்றிய நூல்களாக உருவாக்கியுள்ளார் என்கிறார் கட்டுரையாளர். இந்நூல்களில் உள்ள சிறப்பான வரிகளைக் கவிஞரின் படைப்புகளிலிருந்தே நமக்கு மேற்கோளாகக் கட்டுரையாளர் தந்துள்ளார். மேற்கோள் குறிப்புகள் இருப்பினும் இவரது வரிகள்போல் கட்டுரை அமைந்துள்ளமையால் அடுத்த பதிப்பில் அதனைச் செம்மை செய்ய வேண்டும்.
வாழ்வே குறளுக் குரையானால்
வையகம் தன்னில் துன்பமில்லை
தாழ்வும் இல்லை இறப்புமில்லை
தரணியில் இன்பம் பெறுவோமே!
என்பதே கவிஞர் சாமி.பழனியப்பனின் முழக்கம்.
எழுமை, எழுபிறப்பு, பெய்யெனப் பெய்யும் மழை, தாளை வணங்காத் தலை, முதலான திருக்குறள் அடிகளுக்கும் இடம் பெறும் சொற்களுக்கும் கவிஞர் சாமி பழனியப்பன் தரும் சிறப்பான விளக்கங்களைக் கட்டுரையாளர் நமக்குத் தருகிறார்.
திருக்குறளைப் பழத்தோட்டமாகவும் கலங்கரை விளக்கமாகவும் மலர்ச்சோலையாகவும் கவிஞர் திறம்பட விளக்குவதை நாம் அறியச் செய்கிறார் கட்டுரையாளர்.
காந்தியடிகளின் சத்தியசோதனையில் திருக்குறள் நெறிகள் வலியுறுத்தப்படுவதைக் கவிஞர் வெளிப்படுத்துகிறார்.
இடையிடையே குறிப்பிடப்பட்டுள்ள கவிஞரின் பாடல் வரிகள் மூலம் கவிஞரைப்பற்றிப்புரிந்து கொள்ளச் செய்கிறார் கட்டுரையாளர்.
இவரின் உரை ஒன்றே உலகம் என்னும் உயரிய இலட்சியத்தின்பால் ஈர்த்து, சாதி மத இன மொழி வேறுபாடற்று உலகுதழுவி வாழ வழிகாட்டுவதாக அமைந்துள்ளது எனக் கட்டுரையாளர் கோட்டை சு.முத்து நிறைவாக முடிக்கின்றார்.
இவ்வாறு பதினொருவர்பற்றிய பதின்மர் கட்டுரைகள் அமைகின்றன.
மொழியும் இனமும் வளர வரலாறு தேவை. மொழிப்பற்றும் இனப்பற்றும் நம்மிடம் நிலைத்திருக்க வரலாறு படிக்க வேண்டும். அந்த வகையில் நமக்கு தமிழ்ப்பற்றை ஊட்டும் வகையில் திருக்குறள் படைத்த சான்றோர்கள் வரலாறுகள் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன; அளிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, இந்த நூலை மட்டும் அல்ல இந்நூல் தொகுதிகள் அனைத்தையுமே நாம் வாங்கிப்படிக்க வேண்டும். பிறந்த நாள், திருமண நாள் முதலான சிறப்பு நிகழ்வுகளின் பொழுதும் போட்டிகளுக்குப் பரிசளிக்கும் பொழுதும் திருக்குறள் சான்றோர்கள் பற்றிய நூல்களை அளித்துப் பிறரையும் வரலாறு படைக்கத் தூண்டுதலாக இருக்க வேண்டும்.
முன்னுரையில் பேரா.கு.மோகனராசு குறிப்பிட்டாற்போன்று திருக்குறள் தூயர்களின் வரலாற்று நூல், தூய நூலாக வரலாற்றில் போற்றப்படும். வரலாற்றில் போற்றப்படும் நூல்களை நாம் வாங்குவதும் படிப்பதும் பிறருக்கு வழங்குவதும் நமக்குக் கிடைத்தற்கரிய பேறு அல்லவா? எனவே, அவ்வாய்ப்பினைத் தவறவிட வேண்டா என அவையோரைக் கேட்டுக் கொள்கிறேன். கட்டுரையாளர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளைத் தெரிவிததுக் கொள்கிறேன்.
வரலாற்றில் நிற்பவர்களைப்பற்றிப் படித்து
நாமும் வரலாறாக வாழ்வோம்!
குறள்நெறி போற்றிக் குவலயம் சிறக்கச் செய்வோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
முந்தைய பகுதிகள் காண:
வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4
வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 2/4
வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4
Leave a Reply