வரலாற்றில் விழிப்பு ! எதிர் காலத்தின் மீட்பு! – காசி விசுவநாதன்
நகரத்தார்களும் – தமிழ்ப் பெருந்தச்சர்களும்
நகரத்தார்கள் பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட அயலார் ஆட்சிக் காலங்களில் தமிழர் பண்பாடு, கலை எனத் தமிழர் வாழ்வியல் கூறுகள் அனைத்தையும் பாதுகாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தினர். தங்கள் குழந்தைகளுக்கும் தமிழின் மேன்மை, தமிழர் செவ்வியல் கலைகளைக் காக்கும் பொறுப்புணர்ச்சி, அதனை வாழையடி வாழையென தமிழ் பொற்கொல்லர்கள், பெருந்தச்சர்கள்(மர வேலைப்பாடுகளுக்கும் சிற்ப வேலைப்பாடுகளுக்கும் திருநெல்வேலி தமிழ் மரபில் வந்த பெருந்தச்சர்கள் எனப்பட்ட ஆச்சாரிகள்- கைவினைஞர்கள்), இவ்வகைக் கலைஞர்களை அவர்தம் குடும்பத்துடன் பெயர்த்திக் கொண்டுவந்து செட்டி நாட்டுப் பகுதியில் குடியமர்த்தி, தாங்கள் சென்ற பருமா, சைகோன், ஈழம், மலேயா போன்ற நாடுகளில் கிடைக்கும் பல்வேறு தேக்கு, தோதகத்தி எனப்படும் மரங்கள் பலவற்றைச் செய்முயற்சி வேலையாகவும், முன் முயற்சியாகவும் அவர்களைப் பழக்கித் தங்களுக்கான, தங்கள் தமிழ் மரபிற்கான வடிவங்களைச் செய்யச் சொல்லி அதனையே நகரத்தார் கட்டிய கோவில்கள், வீடுகளில் செய்தனர். நகரத்தார் மரபு வழி அவர்களுக்குச் செய்யப்பட கலை வேலைப்பாடுகளைப் பிறிதொரு இடத்தில் செய்யாமல் அது நகரத்தார் கலைப் பாணி என்ற ஒரு தனித்துவத்தைக் கொடுத்துத் தங்களுக்கு வாழ்வளித்த நகார்த்தார்களுக்கு இன்றளவும் உலகப்புகழ் பெற்றுத் தந்தவர்கள் தமிழ்ப் பெருந்தச்சர்களே…. என்பது மிகையல்ல. முக்கால உண்மை.
இதனை நான் எனது பாட்டனார் வாயிலாகக் கேட்டுள்ளேன். இன்றும் எங்கள் வீட்டு விருந்தினர்களுக்கும் சொல்லி நன்றி பாராட்டுகின்றேன். எனது குழந்தைகளுக்கும் என் உறவினர்களுக்கும் கூட இதனைத் தெரியப் படுத்தி வரலாற்றில் தமிழ்ப்பெருந்தச்சர்கள் எனப்பட்ட தமிழ் ஆச்சாரி சமூகத்தின் நுட்பத்தை அணு தினமும் மறவாமல் இருக்கின்றேன்.
நகரத்தார்களின் வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்வில் பங்கு கொண்டு, கொடுத்துதவி வாழ்ந்த சமூகங்கள் பல.
அன்று நகரத்தார்கள் சிறுபான்மையாகவே இருந்தாலும் தமிழ்த் தேசியம் என்ற மிகப்பெரும் ஆலமரத்தின், அடி வேராகவே இருந்து, தமிழ் விழுதுகள் தாங்க வாழ்ந்த பெருமை ஒரு உன்னத வரலாறு.
இந்த வீடு எந்த ஒரு ஆங்கிலக் கல்வியாளர்களாலும் வடிவமைத்துக் கட்டப்படவில்லை. எங்கள் ஊர் மர வேலை ஆச்சாரிகள் வடிவமைத்துக் கட்டியதே. ஆண்டுகள் நூறு ஆகிய பின்னும் புதுமை சொல்லும் காண்பவர் உள்ளத்தில்.
தேர் போன்ற தோரண வாயில் கொண்ட தலை வாசல்.
கவிகை போல் முன் விரிந்து காந்தர்வர்கள் – வருகின்ற
விருந்தினருக்கு மாலையணிவிக்கும் மரச் சிற்பங்கள்,
அண்ணாந்து பார்க்க நுட்பமாக இருக்கும் அழகு,
நாட்டிலே கோட்டை இதுவென்ற குமிழ்ப் பூண் தரித்த அழகு,
தேர் கொண்ட தோரண வாயிலை குதிரை பூட்டி நிற்கும் முன்னமைப்பு,
வாரணங்கள் மாலை சூட்ட திருமகள் அமர்ந்த கோலம்,
மீனாட்சி சுந்தரேசுவரர் நின்ற திருமணக் கோலம்,
பாரினில் உண்டோ இதற்கு ஈடு…????!!!!!!!
— நெற்குப்பை காசிவிசுவநாதன்
Leave a Reply