(வள்ளுவர் சொல்லமுதம் 13 : அ. க. நவநீத கிருட்டிணன் : கூ. அறிவும் ஒமுக்கமும்- தொடர்ச்சி)

வள்ளுவர் சொல்லமுதம்

நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை.

நன்றி கொன்ற மகனுக்குக் கழுவாயே இல்லை. அத்துணைப் பெரிய கொடிய பாவம் நன்றி மறத்தல் என்று வள்ளுவர் வன்மையாகக் கூறுவார்.

 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய் ந்நன்றி கொன்ற மகற்கு”

என்பது அவர்தம் மறைமொழி. ஒருவன் செய்த நன்றி ஒன்றனை நினைந்தபோது, அவன் கொன்றாலன்ன இன்னலைப் பின்னொருகால் கொடுப்பினும் அது மறந்துபோம். அந் நன்றி உணர்ச்சி நடுவுநிலைமையினின்று பிறழுமாறு செய்தலும் உண்டு. அவ்வாறு பிறழுதல் கூடாது என்பதை வலிவுறுத்தவே செய்ந்நன்றியறிதலை அடுத்து நடுவு நிலைமையை நவில்கின்றார் வள்ளுவர். பகைவர், அயலார், நண்பர் என்னும் முத்திறத்தவரிடத்தும் ஒப்ப நடக்கும் இயல்பே நடுவுநிலைமை எனலாகும்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி

என்பது வள்ளுவர் சொல்லமுதம். முன்னே சமனாக கின்று பின் தன் கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் இயல்புடையது துலாக்கோல். அதனைப்போன்று காய்தல் உவத்தல் அகற்றி ஒன்றனை ஆய்தலே அறிவுடையார் செயலாகும். அத்தகைய நடுவுநிலைமை சான்றோர்க்கு அணியெனப் போற்றும் ஆற்றல் சான்றது. – சொல்லின் கண் கோடுதல் இல்லாத நல்லியல்பே நடுவுநிலைமையாகும். அவ் வியல்பு, உட்கோட்டம் இன்மையை உறுதியாகப் பெறுவதால் அமைவதாகும் என்பர் திருவள்ளுவர். வாணிகம் செய்வார் எளிதில்  நடுவுநிலைமையினின்று நழுவுதற்குப் பல வாய்ப்புகள் ஏற்படுவது இயல்புபோலும். ஆதலின் இப் பகுதியில் சிறப்பாக வணிகரைக் குறிப்பிடுவது உணரற்பாலது. கொள்வதும் மிகை கொள்ளாமல் கொடுப்பதும் குறை கொடாமல் ஒப்ப நாடிச் செய்யும் திட்பம் வணிகர்க்கு இன்றியமையாத பண்பாகும். நெடுநுகத்துப் பகல் போல நடுவு நின்ற நன்னெஞ்சினேராய்ச் செய்யும் வாணிகமே வளர்ச்சியுறும் என்பது வள்ளுவர் உள்ளம். ஆகவே,

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்’

என்று சிறந்த வணிகமுறையை விளக்கியருளினார். அடக்கம் ஒழுக்கத்தின் உச்சநிலையாகும். ஆதலின் அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு காத்தல் வேண்டும். உயிர்கட்கு அதனின் மிக்க செல்வம் இல்லை என்று உரைத்தருளுவார். மறுமையில் தேவருள் ஒருவனாக வாழ்விக்க அடக்கமே சிறந்த அறமாகும். அறநெறியினின்று பிறழாது அடங்கினவனது உயர்ச்சி மலையினும் மாணப் பெரிதாகும். ஐந்து உறுப்புகளையும் தனது ஓட்டுள்ளே அடக்கிக் கொள்ளும் ஆமையைப்போல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் நல்வழியில் செலுத்தும் ஆற்றல்மிக்க அடக்கம் உடையவனாதல் வேண்டும். அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பிலும் அரணாகும் சிறப்புடையது. . இத்தகைய அடக்கமுடையாரைச் சிலர் அறிவிலர் என்று எண்ணிக் கடக்கக் கருதுவர். அங்ஙனம் கருதினார் தம் கருத்து நிறைவேறாது வருத்தமுறுவர். உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்கனையர் அடக்கமுடையார். அதனை அறியாது அவரை எதிர்ப்பார் அழிவது உறுதியாகும். செயலாற்றும் வகையைத் தெரிவிக்க வந்த வள்ளுவர் அடக்கமுடன் ஆற்றும் செயற்குக் கொக்கின் செயலேயே ஒப்பிடுகிறார்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து

என்பது அவர்தம் அரியமொழி. ஒழுக்கத்தை உயிரெனப் பேணும் உயர்ந்தோர் பிறன் மனையாளை விரும்பார். அச்செயல் பெரும் பேதைமையெனக் கருதுவர். தம்மைச் சிறிதும் ஐயுறாதார் மனையாள்பால் தீவினைசெய்து ஒழுகும் தீயர் உயிருடையராயினும் இறந்தவரே. அவர் எத்துணைப் பெருமை உடையராயினும் அவரது பெருமையால் சிறிதும் பயனில்லை. வானவர் தலைவனாகிய இந்திரனும் இவ் இழிசெயலால் தீராத பழியன்றோ எய்தினான்? “அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி” என்று வள்ளுவரும் அவனது இழிசெயலைப் பழித்து நிறுத்தினரன்றோ !

பிறன்மனை விழைவதால் வரும் பெருங்கேட்டை நாலடியார் நன்கு விளக்கும்.

புக்க இடத் தச்சம் போதரும்போ தச்சம்

துய்க்கும் இடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்

எக்காலும் அச்சம் தருமால் எவன் கொலோ

உட்கான் பிறன் இல் புகல்

என்பது அந் நாலடியார்ப் பாடல். இங்ஙனம் எக் காலும் அச்சம் விளைக்கும் இழிசெயலைப் புரிவார்க்கு, எஞ்ஞான்றும் பழி ஒழியாது நிற்கும் என்பர். பகையும் பாவமும் அச்சமும் குடிப்பழியும் என்றும் அவரை விட்டு அகலா. ஆதலின் பிறன் மனையாளை மனத்திலும் கருதாத மாண்பு பேராண்மை என்று போற்றத் தகும். இது சான்றோர்க்கு ஆன்றமைந்த அறமும் அரிய ஒழுக்கமும் ஆகும் என்பர் தெய்வப்புலவர். பொறுத்தற்கு அரிய கொடுஞ்செயல் புரிந்தாரையும் பொறுப்பது சிறப்புடை ஒழுக்கமாகும். “பொறுமை கடலினும் பெரிது” என்பது பொன் போன்ற பழமொழி. நிலம் பொறுமை உடையார்க்கு உவமையாகச் சொல்லப்பெறுவது. தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் பாங்குடையது நிலமன்றோ. அதுபோலத் தம்மை இகழ்வாரைப் பொறுப்பது தலை சிறந்த அறமாகும். அறிவின்மையால் மிகை செய்த மக்களைப் பொறுத்தல் வல்லமையுள் சிறந்த வல்லமையாக மதிக்கப்படும். பிறர், தமக்குச் செய்த தீங்கைப் பொறுத்தாரை, உயர்ந்தோர் பொன்போல் பொதிந்து போற்றுவர். அதனைப் பொறாது ஒறுத்தாரை ஒரு பொருளாகவே உள்ளத்தில் கொள்ளார். ஒறுத்தார்க்கு உண்டாவது ஒருநாளை இன்பமே. பொறுத்தார்க்கோ உலகம் அழியும் அளவும் அவர் புகழ் நின்று நிலவுவதாகும். அவர்கள் இல்லறத்தவராயினும் துறந்தார்போலத் தூய்மை உடையவர் ஆவர். உண்ணாது நோற்கும் அத் துறந்தாரினும் பொறுமை யுடையார் சிறந்தவர் என்பது தெய்வப் புலவர் கருத்து.

மக்களுக்குரிய ஒழுக்க நெறிகளுள் அழுக்காறு கொள்ளாத இயல்பும் ஒன்றாகும். பிறர் ஆக்கம் கண்ட விடத்துப் பொறாமைப்படுதலே அழுக்காறு எனப்படும். பொறாமை உடையவனிடத்துத் திருமகள் தங்க விரும்பாள். மூத்தவள் தங்க ஏற்ற இடமெனக் காட்டித் தான் அகல்வாள். இதனேயே தமிழ் மூதாட்டியார், “ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு” என்று சுருங்க உரைத்தார். இவ் அழுக்காற்றைப் பாவி என்றே பழித்துப் பேசுவார் வள்ளுவர். இப்பாவி, தன்னை உடையானே இம்மையில் செல்வத்தைக் கெடுத்து, மறுமையில் நரகத்துள் செலுத்திவிடும்.

அழுக்காறு எனவொரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்”

என்பது வள்ளுவர் வாக்கு.

பிறருடைய பெரும்பொருளைக் கண்டு பொறாமை கொள்ளுதலேயன்றி அதனைக் கவர்ந்துகொள்ளக் கருதுதலும் குற்றம் ஆகும். இதனை வெஃகாமை என்ற அதிகாரத்தால் விளக்குவர். ஒருவன் பிறனுக்குரிய பொருளை அறனின்றிக் கவர்ந்துகொள்ள விரும்புமாயின் அத்தீய நினைவே அவன் குடியைக் கெடுக்கும்; பல குற்றங்களையும் அவனுக்குக் கொடுக்கும். நல்லறிவாளர் வறுமையால் அல்லலுறினும் அவ் வறுமையினை ஒழிக்கப் பிறர் பொருளைக் கவர விரும்பார். அங்ஙனம் விரும்புவராயின் நூல்கள் பல கற்ற அவர்தம் நுண்ணறிவு என்ன பயனைத் தரும் என்று கேட்பார் வள்ளுவர். பிறன் பொருளை வெளவக் கருதின், அக் கருத்தே ஒருவற்கு உயிர் இறுதியைப் பயக்கும் என்பர். பிறர் பொருளைக் கவர்வதால் வரும் ஆக்கத்தை விரும்பாது ஒழிக. என்று வேண்டுவர். ஒருவன் கைப்பொருள் சுருங்காதிருக்கவேண்டின் பிறன் கைப்பொருளைக் கவர விரும்புதலாகாது என்று அறவுரை கூறுவர். புறங்கூறுதல் தீய ஒழுக்கங்களுள் ஒன்றாகும். காணுத இடத்துப் பிறரை இகழ்ந்து பேசுதலே புறங் கூறல் எனப்படும். அறம் என்ற சொல்லைக்கூடச் சொல்லாது, பொல்லாத செயல்களை ஒருவன் செய்யு மாயினும் பிறனைப் புறங்கூறான் என்று போற்றப் பட்டால் போதுமானது என்று ஓதுவார் நம் பொய்யில் புலவர். ஒருவனைக் காணாதவழி இகழ்ந்து பேசிக் கண்டவழி அவனோடு பொய்யாக மகிழ்ந்து உரையாடுதல் எண்ணற்ற பாவங்களைப் பண்ணுதலினும் தீமையாகும். அவ்விதம் புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்வதினும் சாதல் நன்று. புறங்கூறும் பொல்லாத மக்களின் உடற்பாரத்தையும் இந்த உலகம் பொறுக்கின்றது என்ன வியப்பு 1 என்று புறங்கூற்றின் கொடுமையைத் திறம்பெற விளக்குவார்.

நல்லொழுக்கம் உடையார் பயனற்ற சொற்களைப் பாரித்து உரையார். அங்ஙனம் உரைப்பா ராயின் அவர் நீதியிலர் என்பதை அறியலாம். தீய சொற்களைப் பேசுவதும் தீய செயல்களைப் புரிவதும் ஒழுக்கம் உடையார் ஒருநாளும் இயற்றார், அவற்றைத் தீயினும் கொடிய என்று அஞ்சுவர். தீயாரைக் காண்பதும் தீதென அகல்வர். தீயார் சொல்லைக் கேட்கவும் அஞ்சுவர். தீயார் குணங்கள் உரைக்கவும் நாணுவர். தீங்கினர் சேய்மையில் வரக்காணின், கண்ணில் தெரியாத தூரத்தே நீங்குவதே நல்ல நெறியென்று நினைந்து விரைந்து அகல்வர். அன்னார் மறந்தும் பிறன் கேடு சூழார்.

பிறர்க்கு உதவும் அறவுள்ளம் ஒழுக்கத்தின் ஒரு கூறாகும். இதனை ஒப்புரவு என்று குறிப்பர் வள்ளுவர். வானகத்தும் வையகத்தும் ஒப்புரவுபோல உயர்ந்ததொரு செயல் வேறில்லை. தமது கடமையை உணர்ந்த உயர்ந்தோர் தம் செல்வம் குறைந்த காலத்தும் ஒப்புரவு செய்தற்கு உள்ளம் தளரார். நல்லகுடிப் பிறந்தார் நல்கூர்ந்தாரானாலும் இல்லை என்று சொல்ல உள்ளம் நாணுவர். உறுபுனல் தந்து உலகு ஊட்டிய ஆறு, வெள்ளப் பெருக்கற்றுச் செல்லுவார் அடி சுடும் வெப்ப நாளிலும் ஊற்றுப்பெருக்கால் நன்னீரை ஊட்டுமன்றோ! ஆதலின் தம்மால் இயன்றதைப் பிறர்க்கு உதவுதல் ஏற்ற அறமாகும். அங்ஙனம் ஒப்புரவு செய்வதால் பொருட்கேடு வரும் என்று புகன்றாலும் அக்கேட்டை, ஒருவன் தன்னை விற்றாயினும் பெறுதல் தகுதியே என்று அவ் ஒழுக்கத்தை வள்ளுவர் நன்கு வலியுறுத்துவார்.

உலகில் புகழ் நிலவுமாறு வாழ்வதே உயர்ந்த ஒழுக்கமுடையார்க்கு உரிய செயல் ஆகும். புகழ் இல்லாத மக்களின் உடம்பைச் சுமந்த நிலம் விளையுள் குன்றி வளத்தை இழக்கும். புகழைப் பெறுதற்கு ஈதல் அறமே ஏற்ற துணையாகும். இரப்பவர்க்குக் கொடுப்பவரையே புகழ் நாடி வந்தடையும். ஆதலின்,

ஈதல் இசைபட வாழ்தல் அது வல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு” என்று வள்ளுவர் அறிவுரை வழங்குவார்.

கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. அவர் ஒழுக்கமற்றவராயின், அச் சிறப்பை இழப்பது உறுதி. அறிவும் ஒழுக்கமும் ஒருங்கு நிறைந்த சான்றோரையே உலகம் போற்றும். அவர் வாய்ச்சொல்லையே அருண்மொழியாகத் தலைக்கொண்டு போற்றும்.

(தொடரும்)

வள்ளுவர் சொல்லமுதம்

வித்துவான் அ. க. நவநீத கிருட்டிணன்