தலைப்பு-வாக்குமறந்த அரசியலாளர் :thalaippu_vaakumarantha_arasiyalaar

வாக்கு மறந்த அரசியலாளர்களும் பிறரும்!

 

  அரசியலாளர்களுக்கும் பிறருக்கும்  உள்ள இலக்கணமே வாக்கு  மறப்பதுதானே! இதைச் சொல்ல வேண்டுமா? என்கிறீர்களா? நான் அந்த வாக்கினைக் கூறவில்லை. ஆனால் இந்த ‘வாக்கு’ மறப்பதும் இன்றைய மக்களின் இலக்கணம்தான்; எனினும் கூறித்தான்  ஆக வேண்டியுள்ளது.

  தேர்தல் முறைக்கு முன்னோடிகள் தமிழர்கள்தாமே!  பரமபரை முறை இல்லாமல் வாக்களித்து நம் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கும்  மக்களாட்சி முறைக்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள்தாமே! ஆனால், இப்போது நடந்து முடிந்த தேர்தலில் அனைவரும் ‘வாக்கு’ என்ற சொல்லையே மறந்துவிட்டனர் போலும்!  யாரும் வாக்கு அளிக்குமாறு வேண்டவில்லை. ‘ஓட்டு போடுங்கள்’, ‘வோட்டு போடுங்கள்’, ‘ஓட்டு போடத் தறாதீர்கள்’, ‘வோட்டு போடத்தவறாதீர்கள்’, ‘ஓட்டுரிமையைப் பயன்படுத்துங்கள்!’ ‘வோட்டுரிமையைப் பயன்படுத்துங்கள்!’. ‘ஓட்டளிப்பது நம் பிறப்புரிமை.’ ‘ஓட்டு போடுவதால் என்ன பயன்?’ என அரசியலாளர்களும் படைப்பாளர்களும் ஊடகத்தினரும், இப்படித்தான் வாக்கு மறந்து பேசினர்; வேண்டினர். அரசின் விளம்பரங்களும் வாக்கு மறந்த நிலையில் ‘ஓட்டு/ ஓட்டு/ ஓட்டு’ என்றுதான் கூறின.

  ஓட்டு வீடுதான் நமக்குத் தெரிந்ததாக இருந்தது. இன்றைக்கு ‘ஓட்டு’ என்றால் பணமோ பொருளோ பெற்றோ பெறாமலோ  நம் சார்பளாரைத் தேர்ந்தெடுக்க  நாம் பயன்படுத்தும் வாக்கினைக் குறிக்கிறது.

  ‘வாக்கு’ என்னும் ஒரு சொல் மறக்கப்படும் பொழுது, வாக்குரிமை, வாக்காளர், நல்வாக்கு, அருள்வாக்கு, செல்வாக்கு, வாக்கு மீறல், வாக்கு தவறாமை, வாக்களிப்பு,  முதலான பிற சொற்களும் கால வெள்ளத்தில் அழிந்து போகும். சொல் என்பது எழுத்துகளின் கூட்டமோ ஒலிகளின் கூட்டமோ மட்டுமல்ல. சொல் வரலாற்றை உணர்த்தும், நாகரிகத்தை  வெளிப்படுத்தும், பண்பாட்டை விளக்கும் பொருள் பொதிந்த குறியீடாகவும் விளங்குகிறது. எனவே, ஒரு சொல்தானே என நாம் எந்தச் சொல்லையும் கைவிடக்கூடாது. அப்படி நாம் எண்ணற்ற சொற்களைப் பயன்படுத்தாமல்  போனதால்தான் அந்த இடங்களில் எல்லாம் பிற சொற்கள்  நுழைந்து அமர்ந்து கொண்டுவிட்டன.

இன்றைக்கு உறவுப்பெயர்கள், மரம், செடி, கொடி, பூக்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வதி வகைகள்,  உடலுறுப்புகள், எண்கள் எனப் பலவகையிலும் நாம் தமிழ்ச்சொற்களைத் தொலைத்துக் கொண்டுள்ளோம். எனவே, ‘வாக்கு’ என்ற சொல்லை மறந்ததுமூலம் நாம் உணர வேண்டியது, இதுபோல்தான் நாம் தமிழ்ச்சொற்களைக் கைவிட்டுப் பிறசொற்களுக்கு இடம் கொடுத்துத் தமிழின் சிறப்பை அழித்து வருகின்றோம் என்பதை. உலக மொழியாகப் பரந்து சிறந்து விளங்க வேண்டிய தமிழை நாம் மிகச் சுருங்கிய பகுதிக்குள் அடைத்து வைத்ததே  தமிழ்ச்சொற்களின் பயன்பாட்டை இழக்கச்செய்துதான் என்பதை நாம் உணரவேண்டும்.  இப்போது வாக்கு மறந்ததுபோல் இல்லாமல் எப்பொழுதும் நம் நாக்கு தமி்ழை மறக்காமல் இருக்கச் செய்வோம்!

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே—அதைத்

தொழுது படித்திடடி பாப்பா

என்னும் புரட்சிக்கவிஞர் பாரதியாரின் வேண்டுகோளைப் புறக்கணிக்கின்றோம்.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்

என மாக்கவி பாரதியார்  கூறியும் தமிழோசையை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கிறோம்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.  (திருவள்ளுவர், திருக்குறள் 198)

 ஆதலின் பெரும்பயன்இல்லா அயற்சொற்களைக் களைந்து

தமிழ்ச்சொற்களையே சொல்லுவோம்!

தமிழ்ச்சொற்களையே எழுதுவோம்!

தமிழராகத் தலைநிமிர்ந்துவாழ்வோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்