11 ஆண்டு கடந்தும் முழுமை பெறா புதுமயில் தோட்ட வீடமைப்புத் திட்டம்
வீடுகள் எரிந்து 11 ஆண்டுகள் கடந்தும்
முழுமை பெறாத
புதுமயில் (New Peacock)தோட்ட
மக்களின் வீடமைப்புத் திட்டம்
நேர்ச்சிகள்(விபத்துகள்), பேரழிவுகள், எதிர்பாராமல் நேர்பவை, இவற்றால் பாதிக்கப்பட்டு வீடுகள், உடைமைகளை இழந்தவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்தாலும் ஏனைய அமைப்புகளாலும் பல்வேறு உதவிகள், துயரீடுகள் வழங்கப்படுகின்றன.
மலையகத்திலும் பல்வேறு பேரழிவுகள்பேரழிவு, நேர்ச்சிகள் ஏற்படுகின்றன. எனினும் தோட்ட மக்களை துயரீட்டுப்பொருள்கள், உதவிகள் உரிய வகையில் சென்றடைவதில்லை. பேரிடர்கள், நேர்ச்சிகள் ஏற்படுகின்ற சூழல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்குப் பலதரப்பட்ட உதவிகள், துயரீடுகள் கொடுக்கப்படுகின்றன என்பதை மறுப்பதில்லை. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் நிலையாக மீள்வதற்கான வசதிகள் எதுவும் செய்துகொடுப்பதில்லை. வாக்குறுதிகள் தருவார்கள் பிறகு பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டுகொள்வதே இல்லை. அப்படி ஒரு பேரிடர் நடைபெற்றதா? என்று கேட்கும் நிலை காணப்படுகின்றது.
கண்டி மாவட்டம் கம்பளை தேர்தல் தொகுதி உடபளாத்தப்பகுதி அவைக்கு (பிரதேச சபைக்கு) உட்பட்ட புசல்லாவ இரட்டைப்பாதை புதுமயில் தோட்டத்தில் 2005 ஆம் ஆண்டு திடீர் தீப்பற்றுதல் காரணமாக ஏறத்தாழ 20 வீடுகள் கொண்ட குடியிருப்புத் தொகுதி முற்று முழுதாக எரிந்து பாதிப்புக்குள்ளானது. முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மக்கள் படசாலைகளிலும் உறவினர் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன. பின்னர் இவர்களுக்கான இரண்டாம் கட்ட நடவடிக்கையாகத் தோட்டத்தில் 7 நிலவை(perch) காணி வழங்கப்பட்டுத் தோட்ட வீடமைப்பு கூட்டுறவு ஊடாக 180,000 உரூபாய்க் கடன் உதவி வழங்கி வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு 11 வருடங்கள் கடந்தும் இதுவரை வீட்டுக்கட்டுமானப் பணிகள் முறையாக நிறையடையவில்லை. கட்டிய வீடுகள் தரமானதாகவும் இல்லை. அதற்காக பாவிக்கப்பட்ட மூலப்பொருட்கள் தரமானதாகவும் இல்லை. கட்டிய வீடுகள் மழை காரணமாக நனைந்து இடிந்துள்ளதுடன் சில வீடுகளில் சுவர் மாத்திரமே காணப்படுகின்றது. சில வீடுகள் முற்றாக சிதைந்து வீடு இருந்த அடையாளம் மட்டுமே காணப்படுகின்றது. இத்திட்டத்தில் மேலும் வீடுகள் தேவையானோர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அவர்களுக்கும் அந்த நிலைமையே!
இவ்வாறான நிலையில் தற்போது வீடுகள் அமைக்கப்படாமல் மாதாந்தம் இந்த மக்களின் சம்பளத்தில் 680உரூபாய் வீட்டுக்கடன் அறவிடப்படுகின்றது. மேற்படி சிக்கல் குறித்துத்தொடர்புடைய அதிகாரிகள் பலரிடம் மக்கள் எடுத்துச் சொல்லியும் தீர்வுகள் எதுவும் கிட்டவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தீயினால் எரியுண்ட வீடுகளியே தமது சொந்தப் பணத்தில் திருத்தி அமைத்துக்கொண்டு மீள் குடியேறியுள்ளனர். கூரைகளுக்கான தகரங்கள் தோட்ட நிருவாகத்தினால் போடப்ட்டுள்ளது. எனினும் தற்போது அந்த வீடுகளோ மிகவும் அபாயகரமானதாக இருக்கின்றது. எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. ஒரு வீட்டில் 3,4 குடும்பங்களும் வாழ்கின்றனர். இதனால் நாளாந்தம் பல குடும்பச் சிக்கல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். அகவை முதிர்ந்தோர், சிறுவர்கள், நோயாளர்கள், பல சிக்கல்களை நாளாந்தம் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த வீட்டுத்திட்டம் பெருந்தோட்ட மேம்பாட்டு நிதியத்தினால் மேற் கொள்ளப்பட்டதாகத் தெரிய வருகின்றது.
தீயினால் தமது வீட்டையும் சொத்துகளையும் இழந்த இந்த மக்கள் புதிய வீடு கிடைக்கும் என்ற எண்ணத்தில் சொந்தப்பணத்தையும் கடன் வாங்கியும் பெருந்தொகையாகச் செலவு செய்துள்ளனர். இது தவிர மாதாந்தம் 680 உரூபாய் வீட்டுக்கடன் செலுத்தியும் வருகின்றனர். இதனால் இவர்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களின் நிலைமை குறித்து எந்தவொரு அரசியல்வாதியோ தொழிற்சங்கமோ நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று மலையகத்தில் பேரழிவில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஏதோ ஒருவகையில் தற்போது பாதிக்கப்பட்டே உள்ளனர். இவர்களுக்கான மீள் துயரீட்டு உதவிகள் கிடைக்க பகுதி ஊர் அலுவலர்( பிரதேச கிராமசேவகர்) , பகுதிச் செயலகம், சமூகச் சேவைகள் அதிகாரி, பேரழிவு முகாமைத்துவ அதிகாரிகள், தோட்ட நிருவாகிகள், அரசியல்வாதிகள், தோட்டத் தொழிற்சங்கங்கள், அரச அமைப்புகள் பொது அமைபுகள், ; நலன் விரும்பிகள், அறிஞர்கள் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்!]
பா.திருஞானம் 0777375053
அருமையான கட்டுரை. நன்று [காண்க : AP Inter 1st Year Results 2017 So ]