விருதாளர்களைப் போற்றுவதுதானே சிறப்பித்தலாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
விருதாளர்களைப் போற்றுவதுதானே சிறப்பித்தலாகும்!
புதிய அரசின் முதல் விழா, திருவள்ளுவர் திருநாளாகவும் அறிஞர்களையும் ஆன்றோர்களையும் விருதுகள் அளித்துப் போற்றும் விழாவாகவும் நடைபெற்றது மகிழ்ச்சிக்குரியது.
இன்று (தை 02, 2048 / சனவரி 15, 2017) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழ்வளர்ச்சித்துறையின் திருவள்ளுவர் திருநாள் – விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. செய்தித்துறையினர் கட்டுக்கோப்பான முறையில் நடத்தினர். காவல்துறையினரும் கெடுபிடித் தொந்தரவு இன்றி, அமைதியான சூழலை உருவாக்கியிருந்தனர். அரங்கத்தில் இடமின்றித் திருப்பி அனுப்பவேண்டிய சூழல் வரும்வரை அனைவரையும் உள்ளே அனுப்பிக்கொண்டுதானிருந்தனர். அரங்கத்தில் சிறப்பிக்கப்படுநரின் குடும்பத்தினர் ஒளிப்படம் எடுக்கும்பொழுதுதான் வழக்கம்போல் துரத்திவிட்டனர்.
தனிப்பட்ட முறையில் ஒளிப்படங்கள் எடுக்கக்கூடாது என்றால் எப்படி ஒளிப்படங்களைப் பெறுவதாம்! ஒளிப்படக்கலைஞர் விருதாளர்களிடமும் நலிந்த தமிழறிஞர்கள் ஐம்பதின்மரிடமும் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு கட்டணத்தைத் தெரிவிப்பாராம். அவர் சொல்லும் முறையில் கட்டணத்தை வழங்கியபின்னர் ஒளிப்படங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பெறுமாம். பங்கேற்பாளர்களுக்கான ஒளிப்படங்களை விழா ஏற்பாட்டாளர்கள் தங்கள் பொறுப்பில் பெற்று அனுப்பி வைப்பதுதானே அவர்களைச் சிறப்பிப்பதாகும்.
இனி வரும் விழாக்களில் விழா நடத்தும் துறையினரே தங்கள் செலவில் ஒளிப்படங்களை உரியவர்களுக்கு அனுப்ப வேண்டும். அல்லது அவர்கள் தத்தம் பொறுப்பில் ஒளிப்படங்கள் எடுக்க இசைவு தர வேண்டும்.
ஆட்சித்தலைமையும் கட்சித் தலைமையும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்பதற்கு உ.பி.மாநிலத்தில் தந்தை மகன் கருத்துமாறுபாடும் கட்சிப்பிளவும் எடுத்துக்காட்டாகக் கூறப்படும். ஆனால், இரண்டும் ஒருவரிடமே இன்மையால் கட்சிக்கொடிகள், கட்சித் தோரணங்கள் முதலான ஆரவாரம் இன்றி இயல்பாக இருந்தது. இயல்பாகவே முதல்வர் பன்னீர்செல்வம் எளிமையானவர் என்பதால், இச்சூழல் எளிமைக்கு எளிமை சேர்த்து அழகூட்டியது.
தமிழறிஞர்கள் சிறப்பிக்கப்பெறும் விழா என்பதால், தவறாகப் பேசிவிடுவோமோ என்ற அச்சத்தில் பெரியார் விருதாளர் பண்ருட்டி இராமச்சந்திரன் நீங்கலான – வரவேற்புரை யாற்றிய தலைமைச்செயலர் முதற்கொண்டு அமைச்சர் பெருமக்கள் – அனைவரும் பேசாமல் எழுதிவந்து வாசித்தனர். அரசியல் மேடைகளில் ஆர்ப்பரிக்கின்ற அமைச்சர்கள் இங்கே வாசித்ததுபோல், பாடியும் கதைசொல்லியும் அவையைக் கவர்ந்த முதல்வர் பன்னீர்செல்வமும் கண்களை நிமிர்த்தாமல் வாசித்தார். இனி, இவர்கள் வரும் விழாக்களில் உரையாற்றிச் சிறப்பினைச் சேர்க்க வேண்டும்.
சிறப்பாக விழா நடைபெற்றாலும் விருதாளர்கள் தக்க முறையில் சிறப்பிக்கப்பெறவில்லை. தக்கமுறையில் தங்க வைத்தும் ஊர்திகள் அனுப்பி அழைத்தும் விழா முடிந்ததும் அனுப்பி வைத்தும் தமிழ்வளர்ச்சி இயக்ககத்தினர் விருந்தோம்பலில் குறை வைக்கவில்லை. அப்படி என்றால் என்ன குறைபாடு என்கின்றீர்களா?
அறிஞர்களுக்கும் ஆன்றோர்களுக்கும் பொன்னாடை அணிவித்து, விருது அளித்து, உரூபாய் நூறாயிரத்திற்கான காசோலை வழங்கியதுடன், அவரவர்க்குரிய தகுதியுரையையும் அப்படியே வழங்கி விட்டனர். பொதுவாகத் தகுதியுரை வாசித்து விருதாளர்களைப் பெருமைப்படுத்தித்தான் விருது வழங்குவதே முறையாகும். ஆனால், விழா அரங்கத்தைச் செய்தித்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தமையால், மேடை ஒழுங்கில் மட்டுமே கருத்து செலுத்தினர். தகுதியுரையை வாசித்து வழங்காமல் எல்லார்க்கும் தொகுப்பாளரைக்கொண்டு ஆற்றிய தமிழ்ப்பணிக்காக விருது வழங்கப்படுவதாக அறிவிக்கச் செய்தனர். விருதாளர்களுக்கும் விருதாளர்களின் குடும்பத்தினருக்கும் மட்டுமல்லாமல் வந்திருந்த தமிழன்பர்களுக்கும் இது வருத்தமளிப்பதாக இருந்தது. தங்களைப்பற்றிய சிறப்பினைக்கூறி அதற்குஅவையோர் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்பொழுது விருது வாங்குவதுதானே விருதாளர்களுக்கு உண்மையான உவகையாக இருக்கும்!
எந்தச் சிறப்புகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன என அறியும் பொருட்டு, “இவருக்கு எதற்காக வழங்கப்பட்டது” என ஒவ்வொருவர் குறித்த விருது அறிவிப்பின்பொழுதும் அவையோர் அடுத்தவரிடம் கேட்டது, “இவருக்குப்போய் எதற்காகக் கொடுத்தார்கள்” என்ற தொனிபோல் மாறிவிட்டது.
செயலத்துறையைப் பொருத்தவரை, தமிழ்வளர்ச்சித்துறையும் செய்தித்துறையும் இணைந்த திணைக்களம்தான். தமிழ்வளர்ச்சித் துறையுடன் இணைந்து விழாவைச் சிறப்புற நடத்த வேண்டுமே தவிர, தமிழ்வளர்ச்சித் துறையைப் புறக்கணிக்கக்கூடாது. தமிழ்வளர்ச்சி இயக்குநரே சுவரோரமாக, வாயிலருகே நின்று கொண்டிருந்தார். இதுவரை இல்லாத வகையில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் ஐம்பதின்மருக்குத் திங்கள்தோறுமான பொருளுதவி ஆணைகள் வழங்கப்பெற்றன. அவர்கள் தமிழ்வளர்ச்சி இயக்குநரைத்தான் அறிவார்கள். அவரை விழாவில் புறக்கணித்துள்ளார்களே எனப் பலரும் வருத்தப்பட்டார்கள்.
தமிழ்வளர்ச்சித்துறையினருடன் இணைந்து நடத்தியிருந்தால். விருதாளர்களுக்கான தகுதியுரை வாசிக்கப்பெற்று விருதாளர்கள் பெருமைப்படுத்தப்பட்டிருப்பர். தகுதியுரையை வாசிக்கும் வகையில் தமிழ்வளர்ச்சி இயக்குநருக்கும் பிற அலுவலர்களுக்கும் பங்களிப்பு இருந்திருக்கும்.
ஆனால், அவ்வாறு தகுதியுரை வாசிப்பதே முறை எனத் தமிழ்வளர்ச்சித்துறையினர் மன்றாடியும் மறுக்கப்பட்டதாக அறிய வந்தோம். துறையமைச்சரிடமோ முதல்வரிடமோ செயலர் தெரிவித்திருந்தால், அவர்களே தகுதியுரை வாசிக்கப்பெற்று விருது வழங்கலே முறை என்று சொல்லியிருப்பர். ஆனால், முடிவு எடுத்தவர்கள் தங்கள் அளவில் தவறான முடிவெடுத்து விழாவிற்குக் களங்கம் சேர்த்து விட்டனர்.
போனது போகட்டும்! இனியாவது விருது வழங்கும்பொழுது விருதாளர்களுக்கான தகுதியுரைகளை வாசித்துப் பெருமைபடுத்தி விருதுகளை வழங்க வேண்டும் என்பதில் கருத்து செலுத்தட்டும்! தமிழ்வளர்ச்சித்துறையைக் கிள்ளளுக்கீரையாக எண்ணாமல் மதிப்பதன் மூலம் தமிழறிஞர்களையும் மதிக்கட்டும்!
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். (திருவள்ளுவர், திருக்குறள் 528)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 169, தை 02, 2048 / சனவரி15, 2017
Leave a Reply