வீண் பூசல்களுக்கு வழிவகுக்கும்  தினமணி

இன்றைய தினமணி (20/11/20) நாளேட்டின் நடுப்பக்கத்தில் “மனுவுக்கு ஏன் இந்த எதிர்மனு” என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரை வெளிவந்துள்ளது. கட்டுரையாளர் தமக்குத் தேவையான தரவுகளை மட்டும் தொகுத்துரைத்து உண்மைக்கு மாறான படிமத்தை வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் மனுவின் மீது தேவையற்ற வெறுப்பு ‘உமிழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.ஆனால் ஏன் இந்த வெறுப்பு என்பதனைச் சிந்திக்கத் தவறிவிட்டார்.

தத்துவத்துறை வித்தகரும் தமிழிலும் சமற்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் புலமையுடையவரும் வீரத்துறவி விவேகானந்தரைத் தம் இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்துப் பெருமைப்படுத்தியவருமாகிய மனோன்மணியம் சுந்தரம் (பிள்ளை) இந்த வெறுப்புக்குரிய காரணத்தைக் குறிப்பிடுகிறார்.

“வள்ளுவர் செய் திருக்குறளை மருவற நன்குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மனுவாதி? ஒருகுலத்துக்கு ஒருநீதி?” எனத் தம் நாடகநூலாகிய மனோண்மணியத்தின் பாயிரத்தில் கூறியுள்ளார்.

மனு சாத்திரத்தை வடமொழியிலேயே படித்த மனோன்மணியம் சுந்தரம்(பிள்ளை), மனுவுக்கும் குறளுக்கும் உள்ள வேறுபாட்டை அறுதியிட்டுரைக்கிறார். பிறப்பின் அடிப்படையில் மனுநூல், மனிதர்களைப் பாகுபடுத்துகிறது. திருக்குறள் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என மனித இனத்தை ஒருமைப்படுத்துகிறது. திருக்குறளின் முன் மனுநூல் கதிரவன் முன் மின்மினி எனச் சொல்லவேண்டியதில்லை. குறளின் பெண்வழிச்சேறல் அதிகாரத்தில் உள்ள குறள்களைத் தவறாகப் பொருள் கற்பித்துக்கொண்டு குறளைப் பழித்துரைக்கிறார். இந்த அதிகாரம் மனைவியரைப் பழிப்பதல்ல, ஆணாதிக்கவெளிப்பாடும் அல்ல என அறிஞர் மு.வ.தெளிவுறுத்தியுள்ளதை அவரது “திருவள்ளுவர் அல்லது வாழ்க்கைவிளக்கம்” என்னும் நூலைப் படித்தால் தெளிவாகும். எத்துணையோ பேரரசுகள் பெண்களின்மீது மையல் கொண்ட அரசர்களால் சீரழிந்த நிகழ்வுகளை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அத்தகைய அரசர்களுக்கான இடித்துரையே “பெண்வழிச்சேறல்” ஆகும்.

தினமணிக் கட்டுரையாளர் குறள்பாக்களைத் தயக்கமின்றி வழங்கியுள்ளார். ஏனெனில் அவை நயத்தக்க நாகரிகம் படைத்தவை. ஆனால் மனுநூலின் ஒன்பதாவது அத்தியாயத்தில் பதினேழு முதல் இருபத்தொன்று வரையிலான சூத்திரங்களைப் பொதுவெளியில் . வெளியிடமுடியாது. படிக்கவும் கேட்கவும் கூச்சம் தரக் கூடிய அந்தக் கருத்துகள் மனுவுக்கு உரியவை. இத்தகைய பெண்ணினப் பழிப்புரைக்காகவே அந்த நூலைத் தடை செய்யவேண்டும் என்னும் முழக்கம் எழுந்தது.

மனு நூல் செய்த குற்றம்தான் என்ன? மனித இனத்தைப் பிறப்பின் அடிப்படையில் கூறுபடுத்துவது ஒரு குற்றம்; அந்தக் குலத்தில் (வருணத்தில்) ஒரு வருணத்தை மிக உயர்ந்ததாகவும் மற்ற மூன்று வருணங்களையும் தாழ்ந்தவையாகவும் பாகுபடுத்திப் பிறப்பின் அடிப்படையில் உயர்வு-தாழ்வு கற்பிப்பது மற்றொரு குற்றம்; மிக உயர்ந்த வருணமாகிய பிராமணருக்குக் கட்டுப்பட்டு ஏனைய வருணத்தவர் ஏவல் செய்து வாழவேண்டும் எனச் சட்டம் இயற்றியது மிகப் பெருங்குற்றம்.. எல்லா நாடுகளிலும் அடிமைகள் இருந்தார்கள்; அந்த அடிமைகளுக்கும் விடிவு பிறந்து அவர்கள் ஆட்சியாளர்களாகவும் மாறியதை வரலாறு எடுத்துரைக்கவில்லையா? இங்கே மனித இனத்தின் பெரும்பகுதியைச் சூத்திரன் என்று முத்திரை குத்தி அதனை ஆண்டவனின் கட்டளையாகக் கூறும் மனுநூலின் மீது வெறுப்பு உமிழ்வது தவறா?

இந்தத் திட்டமிட்ட பாகுபாட்டைத்தான் பாரதியார் எதிர்த்தார்,

சூத்திரனுக்கு ஒரு நீதி-தண்டச்

சோறு உண்ணும் பார்ப்புக்கு  வேறொரு நீதி

 சாத்திரம் ஏதும் உரைப்பின்-அது

சாத்திரம் அன்று சதி என்று கண்டோம்”

என்று பாரதியார் உணர்வுக் கொந்தளிப்போடு மனு சாத்திரத்தைக் கடிந்துரைத்தார். தம்மை ஒரு சாதிச் சிமிழுக்குள் அடைத்துக்கொண்டு நடுநிலை தவறி எழுதும் தினமணிக் கட்டுரையாளரின் போக்கு பிழையானது. பிறப்பின் அடிப்படையில் தம்மை உயர்வாக நிலைநிறுத்திக் கொண்டு ஏனையோரைச் சுரண்டும் வைதிகர்களின் அணுகுமுறையைப் பாரதியார் எதிர்த்தார்.

“பேராசைக்காரனடா பார்ப்பான்

பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான்

என வெளிப்படையாகவே பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த பாரதியார் மனுநூலை ‘சதி’ என்று குறிப்பிடுவது இயல்பானதே.

மூன்று (%) விழுக்காட்டினர் தொண்ணூற்றேழு (%) விழுக்காட்டினரை அடிமைப் படுத்திச் சுரண்டி வாழ்வதை முறையானதாகக் கருதும் தினமணிக் கட்டுரையாளர்க்கு மனுநூலின்மீது பாசமும் பரிவும் இருக்கலாம்.ஆனால் இந்த வன்கொடுமையை எதிர்க்கும் பாரதியாரிடமும் சுந்தரம் பிள்ளையிடமும் அத்தகைய போக்கினைக் கட்டுரையாளர் எதிர்பார்த்தல் மிகப் பெருந்தவறு.

“மனுப் பிரசாபதியினால் எந்த வருணத்தாருக்கு எந்தத் தருமம் விதிக்கப்பட்டதோ அது முழுதும் வேதத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. அவர் எல்லா வேதத்தின் பொருளையும் நன்றாக அறிந்தவரல்லவா?”-

(7-இரண்டாவது அத்தியாயம்)

என்று மனுநூல் சொல்வதைப் பார்க்கும்போது இது வேதத்தின் பிழிவு என்பது புலப்படுகிறது. மனித இனத்தில் பேதங்களுக்கு வித்தூன்றியவை வேதங்களே எனவும் தெரிகிறது.

“பெண்களின் பெயர்கள் இனிமையாக இருக்கவேண்டும். கரடுமுரடான வார்த்தைகள் வேண்டா; எளிதில் அர்த்தம் புரிகிறபடி இருக்கட்டும்.வாழ்த்துச் சொற்களைப் போல் அவை நெடிலில் முடியட்டும்”

என்னும் மனுவின் கருத்தைப் பெருமிதத்துடன் கட்டுரையாளர் மேற்கோள் காட்டுகிறார்.

“பிராமணனுக்கு மங்களத்தையும் சத்திரியனுக்கு பலத்தையும் வைசியனுக்கு பொருளையும் சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டியது.” (31-இரண்டாவது அத்தியாயம்) என்று மனு கூறியுள்ளதை அவர் மறைத்துவிடுகிறார். 97% மக்களைத் தாழ்வானவர்களாகக் காட்டும் மனுநூலின் மீது வெறுப்பைக் காட்டாமல் தலைமேல்  வைத்துக் கொண்டாடுவார்களா?

மனுநூல் ஒரு சட்டம் என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். எத்தகைய சட்டம்? யாருக்கான சட்டம்? தத்துவப் பேரறிஞர் ஆல்பர்ட்டு சுவைச்சர் விடையளிக்கிறார்.

“மனுநூல் ஓர் அரசியற் சாசனம்; பிராமணர்களுக்காக் பிராமணர்களால் பிராமணர்களே ஆளும் அரசாங்கத்திற்குரிய அரசியற் சாசனம்”

மனுநூலைத் திறனாய்வு செய்த ஆங்கிலநூல்கள் ஆயிரம் காட்டலாம். அவை யாவும் தேவையில்லை. மனித இனத்தின் பெரும்பகுதியைச் சூத்திரர் என இன இழிவுபடுத்தி அவர்களை அடிமைப்படுத்தியாள்வதற்குரிய சட்டதிட்டத்தைக் கூறும் இந்த நூல் மனித இன வரலாற்றில் ஒரு களங்கமாகத் திகழ்கிறது. இதன் குறைபாடுகளை மறைத்துப் பூசிமெழுகும் வேலையைத் தினமணி தொடங்கியிருப்பது தேவையற்ற வேலை. தாயாய்ப் பிள்ளையாய் வாழும் தமிழரிடையே வேறுபாடுகளைத் தூண்டும் தினமணியின் பணி வீண் பூசல்களுக்கு வழிவகுத்துவிடும். காலங்காலமாக நிகழ்த்தப்பட்டுவந்த இனஇழிவு பெரியாரின் இடைவிடாத பணியால் அகற்றப்பட்டுச் சமூகநீதி மலர்ந்து அமைதிப்பாதையில் பயணம் செய்துவரும் வேளையில் பழைய துன்பங்களை நினைவூட்டி மீண்டும் ஓர் அமைதியின்மையை உருவாக்கும் பணி வேண்டா.

மறைமலை இலக்குவனார்