வெள்ளிசை (Karoeke)  தொழில்நுட்ப அணுகுமுறையைப் பயன்படுத்தித்

தமிழ்மொழி இலக்கணம் கற்றல் கற்பித்தல்

 1. ஆய்வுச் சுருக்கம்

இந்த ஆய்வானது, தொடக்கக் கல்வியைக் கற்கும் மாணவர்களின் தமிழ்மொழி இலக்கணக் கற்றல் கற்பித்தலுக்கு உதவி புரியும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக மொழிப் பாடத்தில் இடம்பெறும் இலக்கணம் எனப்படுவது மனனம், புரிதல், எடுத்துக்காட்டு என்ற மூன்று கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைச் சென்றடைய வேண்டும். இக்கூறுகளை ஒருங்கிணைத்துக் கற்பிக்கப்படும் இலக்கண விதிகளே மாணவர்களின் சிந்தையில் பதியும் என்பதே என் கருத்து. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் கற்றல் கற்பித்தல் முறையோடு இதனை நான் ஒப்பிட்டுப் பார்க்கையில், இசை எனப்படுவது எக்காலத்திலும் மாந்தனின் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதறிந்து அந்த இசையை இலக்கண விதிகளைக் கற்பிக்கப் பயன்படுத்த முனைந்தேன். ஆக, வெள்ளிசை (Karoeke) எனும் தொழில்நுட்பத்தின் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டே தமிழ்மொழி இலக்கண விதி கற்றல் கற்பித்தலுக்குக்கான இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

 1. முன்னுரை

இந்த ஆய்வை நான், 1995-ஆம் ஆண்டு கிரிஸ் பிரெவேர் என்பவரால் எழுதப்பட்ட ‘இசையும் கல்வியும்’(‘Music and Learning’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்த மற்றொரு கட்டுரையை வாசித்த பின்னரே இதனைத் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலுக்கும் பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் மேற்கொண்டேன். அக்கட்டுரையின் வழி, பாடத்திட்டத்தில் இசையை எவ்வாறு ஒருங்கிணைக்கலாம், அவ்வாறு ஒருங்கிணைப்பதால் என்னென்ன நன்மைகள் கிட்டும் என்பதனை முழுமையாக அறிந்து கொண்ட நான் இவ்வணுகுமுறையினைப்பற்றிய மேலும் சில விவரங்களைப் பெறக் கண்டேன்.

20-ஆம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய அறிவியல் சமூகத்தினர் மேற்கொண்ட ஆய்வின் மூலம், இசையானது நம் கல்வி, வாழ்வினைப் பெரிதும் பாதிக்கின்றது என்ற கருத்தை வெளியிட்டனர். அக்கருத்தின் அடிப்படையில் இசையைக் கற்றல் கற்பித்தலில் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் :-

 • மகிழ்ச்சிக்கரமான கற்றல் கற்பித்தல் நடவடிக்கை இயங்குகின்றது
 • மூளைச் செயல்பாட்டில் நல்லதொரு மாற்றம் நிகழ்கின்றது
 • கவனம் செறிவு நிகழாது
 • கற்றல் பட்டறிவுகளை(அனுபவங்களை) எளிதாக்குகின்றது
 • நினைவாக்கம் மேம்படுத்தப்படுகின்றது
 • கற்பனை வளத்தை மேம்படுத்தும்

இவ்வாறாகக் கிடைக்கப்பெற்ற நன்மைகளில், நான் அதிகம் கவனம் செலுத்தியது நினைவாக்கம் மேம்படுத்தப்படுகின்றதுஎன்ற கருத்தே ஆகும். இந்தக் கூற்றை உலக மக்களுக்கு வெளியிட்டவர்கள்,  முனைவர் சியோர்சி உலோசனோவு (Dr. Georgi Lozanov )எவெலினா கெதவா (1960) என்பவர்கள் ஆவர். இவர்கள் கூறியதாவது, மாணவர்கள் நாம் கூறும்  முதன்மையான சொற்களையோ, அச்சில் காணப்படும் முதன்மையான பகுதிகளையோ மனனம் செய்வதற்குச் சில வழிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். அவையாவன :-

 1. மாணவர்களைக் கண்களை மூடி ஓரிடத்தில் அமரச் செய்ய வேண்டும்.
 2. நீங்கள் படிக்கும் வாசிப்புப் பகுதியையோ கூறும் ஏதேனும் சொற்களைக் கேட்பதற்கு முன் அவர்கள் ஓரிரு நிமிடங்களுக்கு இசையைச் செவிமடுக்கப்போவதாக அவர்களிடம் கூற வேண்டும்.
 3. இசை ஒளிப்பரப்பப்பட்ட ஓரிரு நிமிடங்களுக்குப் பின், நீங்கள் கூறவரும் செய்திகளையோ வாசிப்புப் பகுதியையோ ஒளிப்பரப்பப்பட்ட இசையின் ஒலியின் அளவிற்குச் சமமாக உங்களின் குரலின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, மாணவர்களுக்குச் சேரவேண்டிய வாசிப்புப் பகுதியை வாசிக்க வேண்டும்.
 4. இப்படியே மாணவர்களிடம் கூறிய சொற்கள் முடிவடைந்த பின்னர், ஓரிரு நிமிடங்களுக்கு இசையைச் செவிமடுக்கச் செய்துவிட்டு மெதுவாக இசையில் ஒலியைக் குறைக்க வேண்டும்.
 1. வெள்ளிசை (karoeke) அணுகுமுறை – விளக்கம்

வெள்ளிசை (Karoeke) எனப்படுவது சப்பான் நாட்டினர் அறிமுகப்படுத்திய ஒரு வகை மனமகிழ் நடவடிக்கையாகும். இதன் முறைப்படி, பாடலின் மெட்டினை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் வரிகள் எழுத்துவடிவமாக படவில்லையில் (slide) திரையிட்டு ஒருங்கிணைக்கப்படும். இதன் பொருட்டு, வாசகர்கள் இசையினைச் செவிமடுத்த வண்ணம் படவில்லையில் (slide) திரையிடப்படும் பாடல் வரிகளைப் பார்த்துப் பாடுவார்கள்.

இந்த வெள்ளிசை (Karoeke) முறையை நான் பலமுறை இணையம் வாயிலாகப் பெற்று பாடல்களைப் பாடி, நாளடைவில் அந்தப் பாடல் வரிகள் என் நினைவில் நின்றதையும் உணர்ந்தேன்.

பொதுவாகச், சிறு குழந்தை முதற்கொண்டு இப் பொழுது வெளியாகும் திரையிசைப் பாடல்களை எளிதில் மனனம் செய்து கொண்டு பாடுவதை நாம் அவ்வப்போது நம் வீடுகளிலும் அல்லது அக்கம் பக்கத்திலும் கண்டதுண்டு. முன்னரே இசை தொடர்பாகப் பல பின்புல வாசிப்புகளை மேற்கொண்ட நான், இதனை ஏன் தமிழ்மொழி அதிலும் குறிப்பிட்டு இலக்கண விதிகளைக் கற்பிக்கப் பயன்படுத்தக்கூடாது என்று சிந்திக்க முனைந்ததன் விளைவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு மாணவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய, மெட்டின் மூலம் வெள்ளிசை (Karoeke) உருவாக்கி அதில் பாடல் வரிகளுக்குப் மாற்றாக இலக்கண விதி விளக்கத்தையும் எடுத்துக்காட்டுகளையும் இணைத்து அவர்களின் புரிந்துணர்வை அதிகரிக்கவும் விதிகளை நினைவில் நிறுத்தவும் இவ்வணுகுமுறை நிச்சயம் துணைநிற்கும் என்பது என் கருத்து.

காட்டு 1

 மேற்கண்ட எண் இலக்கணம் தொடக்கப்பள்ளி மாணவர்களின் பாடத்திட்டதில் வரையறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகத், தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் கண்டிப்பாக இதனை அறிந்து நினைவில் வைத்திருப்பது இன்றியமையாதது. அவ்வகையில் மேற்கண்ட எண் இலக்கண விதியின் விளக்கத்தையும் எடுத்துக்காட்டுகளையும் ‘ம்ம்ம்ம்…சொந்தக் குரலில் பாட’ என்றொளிக்கும் திரையிசைப் பாடல் மெட்டில் வெள்ளிசை (Karoeke) உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

 1. மாணவர்களின் அடைவுநிலை

எண் இலக்கண விதி கற்பித்தலின் முடிவில், மாணவர்களின் புரிதலைச் சோதிக்க நான் எண் இலக்கணம் தொடர்பான கேள்விகளை வழங்கிச் சோதித்தேன். மாணவர்களின் அடைவுநிலையும் ஈடுப்பாடும் குறிப்பெடுக்கப்பட்டது. அதன்பின் அதே கேள்விகள் கொண்டு வெள்ளிசை(Karoeke) அணுகுமுறையின் மூலம் எண் இலக்கண விதிகளைப் பற்றிய விளக்கத்தையும் எடுத்துக்காட்டையும் நான் அறிமுகம் செய்தேன். மீண்டும் மாணவர்களின் அடைவுநிலையும் ஈடுப்பாடும் குறிப்பெடுக்கப்பட்டது.

எண் மாணவர்கள் அணுகுமுறைக்கு முன் அணுகுமுறைக்குப் பின்
ஈடுபாடு புள்ளிகள் ஈடுபாடு புள்ளிகள்
1. முகியரசன் குறைவு 7/10 அதிகம் 10/10
2. முகேந்திரன் குறைவு 5/10 அதிகம் 10/10
3. எல்வின் குறைவு 4/10 அதிகம் 10/10
4. பேரின்பா குறைவு 5/10 அதிகம் 10/10
5. உலோசிணி குறைவு 4/10 அதிகம்  9/10

அட்டவணை 1 : மாணவர்களின் அடைவுநிலை

 1. முடிவுரை

சுருங்கக்கூறின், ஆசிரியர்கள் இனியும் பண்டைய வழிமுறைகளைக் கொண்டு கற்றல் கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொள்வது இக்காலத்திற்குப் பொருந்தாத ஒன்று என எனக்கு எண்ணம் உள்ளது. பிரம்பைப் பிடித்துக்கொண்டு சுண்ணாம்புக் கட்டிகளை வைத்துக் கரும்பலகையில் கிறுக்கல்கள் போட்டு மட்டுமே பாடம் புகட்டும் சூழ்நிலைகள் கடந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

மாணவர்களுக்குக்கான ஈடுபாட்டை வழியத் திணிப்பதை விடுத்து அவர்களின் ஆர்வத்தை ஆய்ந்து அதனூடே கற்றல் கற்பித்தல் மேற்கொள்ளுவதே இந்நாளின் திறமை. துரித வளர்ச்சியில் பீடு நடைப் போட்டுகொண்டிருக்கும் கணினி   உகத்தோடு மூத்த மொழியின் இலக்கணத்தைக் கற்பிக்க முனையும் இந்த வெள்ளிசை அணுகுமுறையானது முற்றிலும் நன்மைவாய்ந்தது என்பது மட்டும் வெள்ளிடைமலை.

 1. மேற்கோள் நூல்கள்

சரசுவதி கண்ணன், சிவபாக்கியம் பாலையப்பன். தமிழ்மொழி பாடநூல் ஆண்டு 1, பன்முகக் கல்விநூல் வணிகம்(Multi Educational Book Enterprise), 2016

   Brewer, Chris. Music and Learning: Seven Ways to Use Music in the Classroom.

   Tequesta, Florida: LifeSounds, 1995.

Anderson, Ole, Marsh and Dr.Arthur Harvey. Learn with the Classics: Using Music

    To Study Smart at Any Age, LND Harvey, San Francisco, California : 1999.

Berard, Guy, M.D. Hearing Equals Behaviour, New Canaan, Connecticut : Keats

    Publishing, 1993.

 

புவனேசுவரி கணேசன்

தங்காக்கு தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி,

மலேசியக் கல்வி அமைச்சு

 sharmini_puva18@yahoo.com