(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.11. தொடர்ச்சி)

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

 

மெய்யறம்

மாணவரியல்

12. புலால் விலக்கல்

  1. புலால்புழு வரித்தபுண் ணலால்வே றியாதோ?

புலால் என்பது புழுவால் அரிக்கப்பட்ட புண் ஆகும்.

  1. புண்ணைத் தொடாதவர் புலாலையுட் கொள்வதென்?

புண்ணைத் தொட விரும்பாதவர் புலாலை எப்படி உண்கிறார்?

  1. அதுவலி தருமெனின் யானையஃ துண்டதோ?

அது வலிமையைத் தரும் எனில் வலிமை உடைய யானை அதை சாப்பிடுகிறதா? சாப்பிடுவதில்லை.

  1. அரிவலி பெரிதெனி னதுநமக் காமோ?

சிங்கம் வலிமை உடையது என்றால் அந்த வலிமையினால் நமக்கென்ன பயன்? ஒரு பயனும் இல்லை.

  1. அன்றியும் வலியோ வறிவோ சிறந்தது?

அது மட்டுமில்லாமல் வலிமை, அறிவு இவற்றில் எது சிறந்தது?அறிவுதான் சிறந்தது.

  1. வலியோ டறிவினை மக்களூன் ற்ராதுகொல்?

புலால் வலிமையும் தராது. அறிவையும் தராது.

  1. மக்களூ னுணாது மறிமுத லுண்பதென்?

மனித மாமிசம் உண்ணாது ஆடு முதலியவற்றை ஏன் உண்கிறார்கள்?

  1. பொறியறி விலார்க்கு மறிமுதற் றாழ்ந்தவோ?

ஐம்பொறிகளின் மூலம் பெறக்கூடிய அறிவு அற்றவர்களைவிட ஆடு முதலியவை தாழ்ந்தவை அல்ல.

  1. அவைகொன் றுண்பார்க் கருளுண் டாமோ?

அவற்றக் கொன்று உண்பவர்களுக்கு இறையருள் கிட்டாது.

  1. அருளிலா ரருண்மயப் பொருணிலை யடைவரோ?

பிற உயிர்களிடத்து அன்பு செலுத்தாதவர், அன்பு மயமான இறைநிலையை அடைய மாட்டார்.

வ.உ.சிதம்பரனார்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum