நான் கண்ட வ. உ. சி.  1/2

 திருவாளர் வ.உ. சிதம்பரம்(பிள்ளை) அவர்கள் தமிழ் நாட்டுத்தேசபக்தர்களுள் ஒருவர். தேசபக்தர் என்றாலே திரு.பிள்ளை அவர்களைத்தான் குறிக்கும். நாட்டின் மீது அவருக்குள்ள பற்று உள்ளபடியே அளவைக் கடந்தது எனக் கூறலாம். பெரியார் காந்தியடிகளுக்கு முன்பே திரு.பிள்ளை இந்தியாவில் தேசபக்தராக விளங்கியவர். (உ)லோக மான்ய பால கங்காதர திலகர் அவர்களின் அரசியல் மாணவர் ஆவர். காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் தொண்டு செய்திருந்த காலத்திலேயே திரு.பிள்ளை அவர்கள் இந்தியாவில் தேசத்தொண்டு செய்தவர்கள். பலமுறை சிறை சென்றவர்கள். அவர் செய்த குற்ற மெல்லாம், இந்நாட்டின்மீதும் மக்களின்மீதும் அன்பு கொண்ட ஒன்றுதான்.

  இக்காலத்தில் சிறைக்குச் செல்ல விரும்புவோர் பலருக்கு நன்கு தெரியும், முதல் வகுப்பும் முந்திரிப்பருப்பும் அல்வாவும் ஆரஞ்சுப் பழமும் கிடைக்கு மென்று. அந்தக் காலத்தில் அனைவருக்கும் தெரியும் செக்கிழுத்துச் சீரழியவேண்டுமென்பது. கற்கள் உடை படச் செய்யவேண்டும்: இன்றேல் பற்கள் உடைபட்டு விடும். குத்துவதெல்லாம் நெல்லாக இருக்கும்; உண்ப தெல்லாம் களியாக இருக்கும். இக்காலம் சிறைக்குச் சென்றவர்கள் போற்றுதலும் பூமாலையும் பெறுகிற காலம். அக்காலம் துற்றுதலும், துயரமும் பெறுகின்ற காலம். முடிவாகக் கூற வேண்டுமானால், எல்லாச் சாதி யினரும் சிறைக்குச் சென்றவர்களை வெறுத்துச் சமூகத்தில் ஒதுக்கி வைத்த காலமது எனக் கூறலாம். அப்படிப் பட்ட காலத்தில்தான், திரு.பிள்ளை அவர்கள் சிறை: புகுந்தார்கள்; செக்கும் இழுத்தார்கள். களைப்பு மிகுதியினால் குடிக்கத் தண்ணிர் கேட்டுத் தண்ணிர் பெறாமல் சவுக்கடியையே பெற்றார்கள். சில நாட்கள் அல்ல; பல ஆண்டுகள். நாட்டுப் பற்றுக் காரணமாக உயிர் போகும் வேதனையைப் பெற்று வாடிவதங்கி வருந்த உழைத்தவர்கள் திரு.பிள்ளை அவர்கள் ஆவர்.

  படிப்பு இல்லாமல் தேசத்தொண்டு செய்யப்போனவ ரல்லவர் அவர்; அக் காலத்திலேயே கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்கள். தொழிலில்லாமல் தேசத்தொண்டு செய்யப் புறப்பட்டவர் அல்லர் அவர். வழக்குரைஞர் தொழில் செய்து கொண்டிருந்தவர். வருமானமில்லாமையால் தேசபக்திக்காட்டப் புறப்பட்ட  வழக்கறிஞர்களைச் சேர்ந்தவர் அல்லர் அவர்; தொழிலில் நல்ல வருமானத்தைப் பெற்று வந்தனர். புகழுக்கும், பெருமைக்கும் ஆசைப்பட்டுப் பொதுத் தொண்டு செய்யப் புறப்பட்டவர் அல்லர் அவர், எவ்வளவு கத்திப் பேசினாலும் இந்துவும் சுதேசமித்திரனும் ஏழுஎட்டு வரிகூட எழுதா அக்காலத்தில் தேசத்தொண்டு செய்து வந்தவர். அவரது அருஞ்செயலையும், பெருங் குணத்தையும், உள்ளத் துய்மையையும், உழைப்பின் சிறப்பையும் விளக்க இதை விட வேறெதுவும் கூறவேண்டியதில்லை.

  உயர்ந்த அறிவாளிகள் உயிரோடிருக்கும்போது, அவர்களைச் சிறிதும் மதியாமல், அறிவைப் போற்றாமல், செயலை வாழ்த்தாமல், நடத்தையைப் பின்பற்றாமல், வருந்தும்போது ஒருவேளை உணவுக்கும் வழி செய்யாமல், மாண்டபிறகு மணிமண்டபம் கட்டுவதும், காலடிபட்ட மண்ணை எடுத்துக் கண்களில் ஒத்துவதும் ”மாண்டாயோ மன்னவனே” என மாரடித்து அழுவதும்: படம் திறப்பதும், பாக்கள் பாடுவதும், பூமாலை சாற்றிப் போற்றிப் புகழ்வதும் ஆகிய பழக்கத்தைக் கொண்ட இப் பாழாய்ப்போன தமிழ்நாட்டில்தான் திரு. பிள்ளை அவர்களும் பிறந்தார்கள்; அதனாலேயே அவர்களும் இக் கூற்றுக்கு இலக்கானார்கள். இன்னும் ஒருபடி தாண்டி, வாழ்ந்தபோது வைது கொண்டிருந்தவர்கள் மாண்டபிறகு மாறி நாட்டிற்கு அவர் பெயரும், ஊருக்கு அவர் சிலையும் வேண்டுமென, ஊருக்கு முன்னே ஒடோடி ஆலோசனை கூறும் மக்களுள்ள இத்தமிழ் நாட்டிலே திரு.பிள்ளை அவர்கள் பிறரால் வையப்பெறாமலும் வாழ்த்தப் பெறாமலும் வாழ்ந்துவந்தது ஒரு சிறப்பேயாகும். திரு.பிள்ளை அவர்களின் பேச்சு இரத்தக் கொதிப்பையும் நரம்புத் துடிப்பையும் மட்டும் அல்ல, எலும்புகளையும் உருகச் செய்யும். உணர்ச்சி கலந்த அரசியல் ஆவேசப் பேச்சுகள் திரு.பிள்ளை அவர்களோடு மறைந்து ஒழிந்தன.

(தொடரும்)

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்

எனது நண்பர்கள்