(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.20 தொடர்ச்சி)

 தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்

மாணவரியல்

21. எண்ணெழுத் தறிதல்

201.எண்ணெனப் படுவ தெண்ணுநற் கணிதம்.

எண் என்பது கணிதம் ஆகும்.

202.எழுத்தெனப் படுவ திலக்கிய மிலக்கணம்.

எழுத்து என்பது இலக்கியமும் இலக்கணமும் ஆகும்.

203.எண்ணு மெழுத்துங் கண்ணென மொழுப.

எண்ணும் எழுத்தும் நம் இரு கண்கள் போன்று மிக இன்றியமையாதது என்று கூறலாம்.

204.எண்ணறி யார்பொரு ளெய்துத லரிது.

எண் அறியாதவர்கள் பொருள் ஈட்டுவது அரிதான செயல் ஆகும்.

205.எழுத்தறி யார்பிற வெய்துத லரிது.

எழுத்து அறியாதவர்கள் மற்றவற்றை அடைதல் அரிதான செயல் ஆகும்.(மற்றவை- அறம், இன்பம், வீடுபேறு)

206.எண்ணெழுத் தறிந்தா ரெய்துவர் நான்கும்.

எண்ணும் எழுத்தும் அறிந்தவர்கள் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கையும் அடைவார்கள்.

207.எண்ணு மெழுத்து மிடைவிடா தாள்க.

எண்ணையும் எழுத்தையும் இடைவிடாது பயில வேண்டும்.

208.அவைதாய் மொழிகொளி னதைமுன் பறிக.

தாய்மொழியில் உள்ளவற்றை முதலில் கற்க வேண்டும்.

209.பின்பவை மிக்குள பிறமொழி யறிக.

பின்பு இவை அதிகம் உள்ள பிறமொழியினைக் கற்றல் வேண்டும்.

210.அறிவதைக் கசடற வறிந்துகொண் டொழுகுக.

கற்றுக் கொள்வதை முழுமையாகக் கற்றுக்கொண்டு அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்

 

வ.உ.சிதம்பரனார்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum