வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 35 (2.05) – இன்பந் துய்த்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 34 (2.04) – தொடர்ச்சி)
மெய்யறம்
இல்வாழ்வியல்
35. இன்பந் துய்த்தல்
341. துணையோ டின்பந் துய்த்தலே சுவர்க்கம்.
வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து இன்பம் அனுபவிப்பதே உண்மையான நிரந்தரமான இன்பமாகும்.
- துய்க்கு முறையெலாந் தொல்லகப் பொருள்சொலும்.
இன்பம் அனுபவிக்கும் முறைகளை பழமையான அகப் பொருள் நூல்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
- முறையறி யாதுறல் குறையறி வுயிர்செயல்.
இன்பம் அனுபவிக்கும் முறைகளை அறியாது செயல்படுவது அறிவற்ற செயலாகும்.
- தன்றுணைக் கின்பந் தரத்தரத் தனக்கதாம்.
தனது துணைக்கு இன்பம் கொடுக்கக் கொடுக்கத்தான் தனக்கு இன்பம் கிடைக்கும்
- தானின் புறவெணிற் றனக்கதெய் தாதே.
தான் மட்டும் இன்புற நினைத்தால் தனக்கு இன்பம் கிடைக்காது.
- ஊட லுணர்தல் புணர்த லதன்வகை.
ஊடலும் அதனை உணர்ந்து நீக்குதலும் புணர்தலும் இன்பங்களாகும்.
- ஊட னிமித்த முடனுட னாக்குக.
ஊடலின் காரணத்தை அறிந்து அதனை உடனுக்குடன் நீக்குதல் வேண்டும்.
- இரந்தும் புணர்ந்து முணர்ந்திடச் செய்க.
வாழ்க்கைத்துணையை வேண்டியும் புணர்ந்தும் இன்பம் அனுபவிக்கச் செய்தல் வேண்டும்.
- இருந்திரங் கத்துணை பிரிந்திடல் நீக்குக.
வாழ்க்கைத்துணை மனம் வருந்துமாறு பிரிந்து செல்லுவதைத் தவிர்க்க வேண்டும்.
- துணையழத் துறந்துமெய் யிணைதலன் பிலாவறம்.
வாழ்க்கைத்துணை மனம் வருந்தத் துறவறம் மேற்கொள்வது அன்பிலாத செயலாகும்.
– வ.உ.சிதம்பரனார்
Leave a Reply