(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 43(2.13) – தொடர்ச்சி)

மெய்யறம்

இல்வாழ்வியல்

44. மறவி யொழித்தல்

  1. மறவிதன் கடமையை மனத்திலுன் னாமை.

மறவி என்பது தன் கடமையைப் பற்றி மனத்தினில் எண்ணாது இருத்தல் ஆகும்.

  1. மறவியூக் கத்தின் மறுதலை யாகும்.

மறவி ஊக்கத்தின் எதிர் நிலை ஆகும். அதாவது உயர்வு பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமை ஆகும்.

  1. மறவி பலவகை யிறவையு நல்கும்.

மறவி பல குற்றங்களை தரும் இயல்பு உடையது ஆகும்.

  1. மறவியை யடுத்தவர் மாண்பெலா மிழப்பர்.

மறவி என்ற குறையை உடையவர்கள் அவர்களது சிறப்புகளை எல்லாம் இழந்துவிடுவார்கள்.

  1. மறவியை விடுத்தவர் மாநிலத் துயர்வர்.

மறவி என்ற குறையை நீக்கியவர்கள் மக்களிடையே உயர்ந்த நிலையை அடைவார்கள்.

  1. மறவியை விடற்கு மனத்தினன் குள்ளுக;

மறவி என்ற குறையை விடுவதற்கு, விட வேண்டும் என்று மனத்தினில் ஆழமாக எண்ணுதல்;

  1. காலையு மாலையுங் கடவுளைத் தொழுக;

மேலும் காலையும் மாலையும் கடவுளை வணங்குதல்;

  1. மாணுயர் நூல்சில மனனஞ் செய்க;

மேலும் மிகச் சிறந்த நூல்களை மனப்பாடம் செய்தல்;

  1. விடிந்தபின் செய்பவை விடியுமு னுள்ளுக;

மேலும் ஒரு நாளில் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து அன்று காலையிலேயே எண்ணுதல்;

  1. பகலிற் செய்தவை யிரவினன் காய்க.

மேலும் ஒரு நாளில் செய்த செயல்கள் குறித்து அன்று இரவில் நன்றக ஆராய்தல்.

– அறிஞர்,  செம்மல் வ.உ.சிதம்பரனார்