வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15). மடி யொழித்தல்
[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14) – தொடர்ச்சி]
மெய்யறம்
இல்வாழ்வியல்
45. மடி யொழித்தல்
- மடிதஞ் செயல்களின் மந்த முறுதல்.
மடி என்பது செயல்களைச் செய்வதில் ஏற்படும் சோம்பல் ஆகும்.
- மடிமெய்ம் முயற்சியின் மறுதலை ஆகும்.
மடி என்பது உடல் முயற்சியின் எதிர் நிலை ஆகும். அதாவது உடல் உழைப்பில் சுறுசுறுப்பற்ற தன்மை ஆகும்.
- மடிதமை யொன்னார்க் கடிமைப் படுத்தும்.
மடி ஒருவனை அவனது பகைவர்களுக்கு அடிமையாக மற்றிவிடும் இயல்பு உடையது.
- மடியினை யுடையவர் குடியொடு கெடுவர்.
மடியுடையவன் தன் குடும்பத்தோடு அழியும் நிலை ஏற்படும்.
- மடியினை விடுத்தவர் படியெலாங் கொள்வர்.
மடியினை நீக்கியவர்கள் உலகை வெல்லுவர்.
- மடியினை விடற்கு மனத்தினன் குள்ளுக;
மடி என்ற குறையை விடுவதற்கு, விட வேண்டும் என்று மனத்தினில் ஆழமாக எண்ணுதல்;
- காலைமெய்ப் பயிற்சி சோலைநீர்க் குளிகொளல்;
மேலும் காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்தல், பின்னர் குளிர்ந்த நீரில் குளித்தல்;
- இளம்பக லுணவரை யிராவுண வரைகொளல்;
மேலும் காலை உணவும் இரவு உணவும் பாதி வயிறு நிரம்பும்படி உண்ணுதல்;
- இரவினல் யாமத் தென்று முறங்குக;
மேலும் நள்ளிரவில் நான்கு மணி நேரம் கண்டிப்பாக உறங்குதல்;
- பயனுள சிலசொற் பார்த்துப் பேசுக. மேலும் பயனுள்ள சொற்களைக் கவனத்துடன் பேசுதல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
– அறிஞர், செம்மல் வ.உ.சிதம்பரனார்
Leave a Reply