வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 9.மனத்தை யாளுதல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 8 தொடர்ச்சி)
9
9. மனத்தை யாளுதல்
- மனமுத் தொழில்செயு மாபெருஞ் சத்தி.
ஆக்குதல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களையும் செய்யவல்ல மிகப்பெரிய சக்தி மனம் ஆகும்.
- நினைக்குந் தொழிலை நிதமுஞ் செய்வது.
மனம் எப்பொழுதும் எண்ண அலைகளில் மூழ்கி இருக்கும் இயல்பினை உடையது.
- அறனு மறனு மறிதிற னிலாதது.
மனம் புண்ணிய பாவங்களைப் பிரித்து அறியும் திறனற்றது.
- அதனெறி விடுப்பி னழிவுடன் கொணரும்.
மனத்தை அதன் வழியில் செல்லவிட்டால் உடனடியாக அழிவை ஏற்படுத்தும்.
- அதனெறி விடாஅ தாளுத றங்கடன்.
மனத்தை அதன் வழியில் செல்லவிடாமல் அதனை ஆளுதல் நம் கடமை ஆகும்.
- தானதிற் பிரிந்து சந்தத நிற்க.
ஒருவன் தன் மனத்திலிருந்து எப்பொழுதும் பிரிந்து நிற்றல் வேண்டும்.
- எதையது நினைத்ததோ வதையுடன் காண்க.
மனம் எதை நினைக்கிறது என்பதை உடனடியாகக் கண்டறிய வேண்டும்.
- மறமெனில் விலக்குக வறமெனிற் செலுத்துக.
மனம் நினைப்பது தீயது என்றால் மனத்தை உடனடியாக அதிலிருந்து விலக்க வேண்டும். மனம் நினைப்பது நல்லது என்றால் அதில் மனத்தைத் தொடர்ந்து செலுத்த வேண்டும்.
- பயனில வெண்ணிற் பயனதிற் றிருப்புக.
மனம் நினைப்பது பயனற்றது என்றால் உடனடியாக பயனுள்ளவற்றில் மனத்தைத் திருப்ப வேண்டும்.
- ஒன்றெணும் பொழுதுமற் றொன்றெண விடற்க.
ஒன்றை நினைக்கும் பொழுது மனம் மற்றொன்றை நினைக்க விடுதல் கூடாது.
வ.உ.சிதம்பரனார்
Leave a Reply