(உ,உயர்தனிச் செம்மொழி)

  ௩. தமிழ்  எழுத்துச் சீர்திருத்தம்?

முன்னுரை

உலக மொழிகளுள் முதன்மையானதும், பண்பட்டதும் தமிழ்மொழி ஒன்றே. எழுத்துகள் செப்பமாயமைந்தது; மென்மை, வன்மை, இடைமை ஒலிகளையுடைய எளிய இனிய மொழி; ஒரு சொற்கு ஒரு பலுக்கல் உடையது; ஒரு சொல்லில் உள்ள எல்லா எழுத்துகளும், ஒலிக்கும் இயல்புடையது. எழுத்து மாற்றம் வீரமாமுனிவரால் செய்யப் பெற்றபின், பெரியார் வழி பற்றி, தற்போது தமிழக அரசு ஓரளவு எழுத்துச் சீர்திருத்தம் செய்துளது. இதற்குமேல் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்றாலும் தற்காலத் தேவை கருதி நிலையான சீர்திருத்தம் வேண்டற்பாலதே.

பிறர் கருத்து

எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பலரும் பலவகையான திருத்தங்களைத் தந்தம் மனத்தில் தோன்றியவாறு தெரிவித்துள்ளனர். அவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து இனி என்றுமே மாற்றம் வேண்டாத வகையில் செய்யப்பெறல் இன்றியமையாததாகும். ஏனெனில், அடிக்கடி எழுத்துமாற்றம் செய்வது மொழிவளர்ச்சிக்கு இடையூறாக அமைவதுடன், இக்காலத்திற்கு முந்தியகால இலக்கிய இலக்கணம் பயில்பவர்க்குக் குழப்பத்தையும் உண்டாக்கும். எனவே, நிலையான எழுத்துச் சீர்திருத்தமே வேண்டும்.

எம்கருத்து

உயிர் எழுத்துகள் 12. மெய்கள் 18.  உயிர்மெய் 216. ஆய்தம் 1. தமிழில் மொத்த எழுத்துகள் 247 என்பர். ஆனால், தொல்காப்பியம்   

           “எழுத்தெனப்படுப

           அகர முதல னகர இறுவாய்  முப்பஃதென்ப

           சார்ந்து வரல்மரபின் மூன்றலங் கடையே.” என்கிறது.

ஆங்கில மொழியில் உயிரெழுத்துகளும், மெய்யெழுத்துகளும் மட்டுமே உண்டு; உயிர்மெய் எழுத்துகளில்லை. தமிழில் உயிர்மெய் எழுத்துகளை நாம் ஆக்கியுள்ளோம். உயிர்மெய் எழுத்துகளில் பல பயன்படாதவை. அவற்றை நீக்கின் மொத்த எழுத்துகளின் எண்ணிக்கை பெரிதும் குறையும்.

பழைய கால எழுத்துமுறை ஓலையில் எழுத்தாணியால் எழுதுவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பெற்றது. அதன்பின் தாளில் தூவலால் அவ்வாறே எழுதி வந்தோம். அச்சுப்பொறி வந்தபிறகும், அம்முறையே பின்பற்றப் பெற்று வந்தது. தட்டச்சுப் பொறி வந்தபின்னர், இடர்ப்பாடு எழுந்தது. அதனைப் போக்கப் பலரும் பலமுறைகளைக் கூறுகின்றனர்.

தமிழக அரசு பெரியார் கூறிய முறைப்படி ‘ஐ’இ ‘ ஒள’  தவிர்த்து ஏனைய எழுத்துகளை மாற்றியமைத்து நடைமுறைப்படுத்தி வருகிறது.  பகுத்தறிவுக்கும், ஆய்வுக்கும், மொழிமரபிற்கும் ஏற்றவகையில்  எழுத்துச் சீர்திருத்தம் இருத்தல் வேண்டும்.

கையெழுத்துக்குப் பொருத்தமான சீர்திருத்தம், தட்டச்சுக்குப் பொருந்திய சீர்திருத்தம் என இருவகைப்படுத்துவது நன்று. ஏனெனில், தட்டச்சுப் பொறிக்கான எழுத்துகளால் தூவல் கொண்டு எழுதுவது வேகத்தடை உண்டாக்கும். அச்சுப் பொறிக்கும், கையெழுத்துக்கும் ஒரே வகை எழுத்துகளாய் அமைவதே சாலும்.

தமிழ்ச் சொற்களுக்கு வடமொழி எழுத்தொலிகள் தேவையில்லை. ஆகையால் தொல்காப்பியர்,

          ‘வடசொல் கிளவி வடவெழுத் தொரீஇ,

           எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே’ என்றார்.

, , , , க்ஷ” எழுத்துகளையோ, அவ்வெழுத்துகளின் ஒலிகளையோ, தமிழ்ச் சொற்களுடன் சேர்க்க வேண்டிய தேவையில்லைமொழித்தூய்மை கெடும். ஏனெனின், தமிழ் உயர்தனிச் செம்மொழியல்லாவா? வடமொழி எழுத்தொலிகள் உள்ள சொற்கள் தமிழாகா.

பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் விருப்பத்தை நிறைவு செய்ய மாண்பமை ம.கோ.இரா. அவர்கள் ஆட்சியின்  கீழ் நடைபெறும் தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தத்தை எல்லாப் பணிமனைகளிலும் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளமை பாராட்டிற்குரிய ஒன்றாகும்.

,ஒள என்னும் உயிரெழுத்துகளைப் போலியாக அய், அவ் எனப் பெரியார் சொன்னபடி மாற்றவில்லையே என்று குறை   கூறுகின்றனர்  சில  தமிழ்ப் பேராசிரியர்கள்.  ஆனால்,

பெரியார் சொன்னாரேயன்றி, இவர்களைப் போன்று ஒட்டாரம் செய்யவில்லை.  பெரியார் நடத்திய நாளிதழுக்குப் பெயர் விடுதலை என்றுதான் எழுதினார். இப்பொழுதும் அப்படியேதான் உள்ளது. இவர்கள் சொல்லுகிறபடி விடுதலய் என்று எழுதவில்லை.  பெரியார் பகுத்தறிவாளர் அல்லவாஇவர்தம் கூற்றுப்படி மையம் – மய்யம், மலை-மலய், தலைமை-தலய்மய், முனைவர் – முனய்வர், தந்தை-தந்தய் என வேறுபாட்டிற்கு உள்ளாகின்ற முறையில் எழுதவில்லை. மற்றும் பல இடமஞ்சி விடப்பட்டன.  வேறு சிலர்மேலும் பல எழுத்துச் சீர்திருத்தங்கள் தேவை என வலியுறுத்தி வருகின்றனர்.  வீரமாமுனிவர் போன்று பெயர் பெற எண்ணுகின்றனர் போலும்!

          காலை வெட்டிக் கோலையூன்ற வேண்டும்!

          கொம்பை வெட்டி கொக்கியை மாட்ட வேண்டும்!

          வளைவை வெட்டி வாலை நீட்ட வேண்டும்!

          சுழியை வெட்டிச் சூலத்தைப் பூட்ட வேண்டும!;

என்றும், ஆங்கிலம் போன்று உயிர்மெய்யெழுத்தின்றி உயிரையும், மெய்யையும் தனித்தனியே எழுதுதல் நன்றென்றும் கூறுகின்றனர்.  இங்ஙனம் பல… இவர்கள்  செய்யும் எழுத்துச்சீர்திருத்தம் மக்களைக்  குழப்பத்தில் ஆழ்த்துவதுடன் தமிழின் மீது வெறுப்பையும் உண்டாக்கும்.

இன்று தமிழ்நாட்டில் தமிழின் நிலை எவ்வாறுளது? எனச் சிறிது சிந்திப்போம்.

தமிழர் பலர்க்குத் தமிழ் என்று பலுக்கவே (உச்சரிக்க) தெரியவில்லை.  தமில் என்று சிலரும், தமிள் என்றும் சிலரும் செப்புகின்றனர்.  அன்றியும், தமிழ்நாட்டில் உள்ள தமிழருள் நூற்றுக்குப்  பத்துப்பேர்தாம்தமிழ்  படிக்கவும்   எழுதவும்

தெரிந்தவராக இருக்கின்றனர். சிலர்க்குத் தமிழில் கையொப்ப மிடத்தான் தெரியும். எழுதப்படிக்கத் தெரிந்தவருள்ளும் பிழையின்றிச் சொற்கள் கலவாமல் எழுதுபவர் – பேசுபவர் ஒருவர் கூட இரார்.  அவருள்ளும் பிறமொழிச் சொற்கள் கலவால் எழுதுபவர் – பேசுபவர் ஒருவர் கூட இரார்.

இந்நிலையில் இவர்கள் எழுத்துச் சீர்திருத்தம் கருதிய பயன் தருமா? மாறாக, பலருள்ளும் தமிழின் மீது அருவெறுப்பையே தோற்றுவிக்கும்.

தமிழ் மக்கள், நூறு விழுக்காட்டிற்கு தமிழை நன்கு படிக்கவும் எழுதவும் கற்ற பின்னரே, இவர்கள் எழுத்துச் சீர்திருத்தம் தகும். இன்றைய நிலையில் இது தமிழ்மக்களை மால்  கொள்ளச் செய்து அரைகுறையினரை அல்லலுக்கு உள்ளாக்கி விடும்.  மேலும், இவ்எழுத்துச் சீர்திருத்தம் தேவைதானா? என்பதையும் ஆராய வேண்டும்.  பெரியாரவர்கள் விரும்பியபடி தமிழக அரசு ஆவன செய்து அய் போலியைத் தட்டச்சுக்கு மட்டில் பயன்படுத்தி வருகிறது.  மேற்கொண்டு எந்த எழுத்துச் சீர்திருத்தமும் இற்றைச் சூழலில் தமிழுக்குத் தேவையில்லை. 

இவர்கள் செய்ய விரும்பும் சீர்திருத்தம் தமிழ்மக்களைத் தமிழ்  படிக்கவியலாமல்  செய்துவிடும்.   இவர்கள்   தமிழ்ப் பேராசிரியர்கள்; முனைவர் பட்டம் பெற்றவர்கள்.  ஒருவர்தமிழ் வளர்ச்சி இயக்குநராயிருந்தவர்.  தமிழ்ப்பற்றும், தமிழிலேயே எழுதும் பேசும் திறனும் உடையவர், இன்று தமிழ்நாட்டில் மிகச்சிலரே உளர்.  அவர்களையெல்லாம் அரசு

அறிந்து சிறப்பிக்காதது பெருங்குறையாகும்.  போலியாக நடக்கின்றவர் பாராட்டும் பயனும் பெறுகின்றனர்.  தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ்ப்பற்றுள்ள தமிழறிஞர்களையே பல துறைகளிலும் சேர்த்துத்  தமிழ்  வளர்க்குமாறும்எழுத்துக்  குழப்பஞ்செய்யும் சீர்திருத்தக்காரர்கள் கூற்றுக்குச் செவிமடுக்காதிருக்குமாறும் தமிழின் சார்பில், தமிழக அரசைப் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

தமிழ்ப்பற்றர் அனைவரும் ஒன்றுபட்டுத் தமிழுக்கு ஊறு செய்பவர் எவராயினும், எதிர்த்து முறியடிக்க வேண்டுமென்றும், ஏனோ தானோ வென்று இருந்துவிடாதீர்கள்! என்றும் எச்சரிக்கின்றோம்.