(ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன-புலவர் வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி)

வேற்றுமொழிச் சொற்கள் பல தமிழில் வந்து கலந்து தமிழைக் களங்கப்படுத்துகின்றன. ஏன்? தமிழை அழிக்கின்றன என்றாலும் மிகையன்று.

சில தமிழ் எழுத்தாளர் தமிழில் கலைச்சொற்கள் இல்லையென்று கூறி வேற்றுமொழிச்  சொற்களைத் தம் படைப்புகளில் அப்படியே எடுத்தாள்கின்றனர். சில புதுமை எழுத்தாளர் மக்களுக்குப் புரியும்படி மக்கள் மொழியில் எழுதவேண்டுமென்று சொல்லி கொச்சைத் தமிழில் எழுதுகின்றனர். இத்தகையோரெல்லாம் தமிழை அழிப்பவர் என்பது எம் கருத்து. மணிப்பவளநடை, பேச்சுத்தமிழ்நடை, கொச்சைநடை ஆகியன தமிழை வளர்ப்பதற்கன்று. செந்தமிழ் நடையே சிறந்தது.  அதுவே தமிழ்வளர்ச்சிக்கு உதவுவது.

இன்றைய புதுமை எழுத்தாளர் பலர், தம் மனம் போனபடி வேற்றுமொழிச் சொற்களைக் கலந்தே எழுதுகின்றனர். இவர் தமிழ்மொழியின் இயல்பறியாதவரே. தமிழ் “உயர்தனிச் செம்மொழி” என்பதை அறியாதவராவர். அன்றி, வேண்டுமென்றே தமிழ்க் கொலை செய்பராவர்.

அறிவியல்கலை, பிற புதுமைக்கலைகளைப் புலப்படுத்த தமிழில் சொற்கள் இல்லையெனின், தமிழில் கலைச்சொற்களை ஆக்கிக் கொள்ளல் வேண்டும். தெரியாவிடின், திறமையுள்ள அறிஞரைக் கேட்டறிதல்வேண்டும். தமிழறிவும், தமிழ்ப்பற்றும் உள்ளவராயின், அவ்வாறு செய்வர்.

தமிழ் உலகளாவப் பரவ வேண்டும், பரவச் செய்ய வேண்டும் என்பன தமிழர் கடமைகளாகும். ஆனால், இன்று தமிழ்ப்பல்கலைக்கழகம் அவற்றிற்காவன செய்தல் வேண்டும். தமிழ்க் கலைச்சொல்லாக்கம் செய்தும், பிறமொழிகளிலுள்ள தமிழ்ப்பண்பாட்டுக்கொத்த இலக்கியங்களைத் தமிழில் பெயர்த்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் பிறமொழிச் சொற்களை அப்படியே எடுத்தாளக் கூடாது, தமிழாக்கியே தமிழில் சேர்த்தல் வேண்டும்.

வேற்றுமொழிச்சொல் ஒன்று தமிழில் கலந்தால் அப்பொருள் தரும் தமிழ்ச்சொல் வழக்கொழியும். இங்ஙனம் வேற்றுமொழிச் சொற்களைச் சேர்த்துக் கொண்டே போனால் நாளடைவில் தமிழ் அழிய வேண்டிய நிலையே ஏற்படும்.

தொல்காப்பியர் காலத்தில் வடமொழிச் (சமற்கிருத) சொற்கள் மிகுதியாகக் கலக்கத் தொடங்கியதறிந்து,

          “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

           எழுத்தொடு புணர்ந்த சொல்லாக் கும்மே

என்று தடையிட்டார். ஆனால், அதுவும் தமிழுக்கு ஆக்கம் தருவதன்று. எழுத்தை மட்டுமே நீக்கித் தமிழெழுத்தில் எழுதச் சொன்னாரேயன்றித் தமிழ்ச் சொல்லாக்கச் சொல்லவில்லை.

காட்டு:

     பங்கஜம் என்பதைப் பங்கயம் என்றும்,

     அஸ்தம்  – அத்தம்

     பிரஹாரம் – பிரகாரம்

     விஷயம்  – விடயம்

நஷ்டம் – நட்டம் என்றும் எழுதலாம் என்பது காப்பியர் கருத்து. அங்ஙனம் எழுதுவதால், தமிழ் அழியுமே அன்றி, வளராது. ஆகையால்,

           “வேற்று மொழிச்சொல்லை வண்டமி ழாக்கி

            எடுத்தா ளுவதே இன்றமிழ் வளர்க்கும்

எனக் கொள்வதே பொருத்தமாகும்.

எனவே, தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இரண்டு அறிஞர் குழுக்கள் அமைக்க வேண்டுகின்றோம்.

         (க) கலைச்சொல்லாக்கக் குழு

         (உ) மொழிபெயர்ப்புக் குழு

இக்குழுக்களில் ஐந்து உறுப்பினர் மேனி அமர்த்தல் வேண்டும்.

ஒவ்வொன்றிலும் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர் ஒருவரும், தமிழ்ப்புலவர் தேர்வில் முதல்வகுப்பில்  முதன்மையாகத் தேறியவர் ஒருவரும், தமிழ்ப்புலமையுள்ள ஆங்கிலப் பேராசிரியர் ஒருவரும், தமிழ்ப்புலமையும் வடமொழிப் புலமையும் பெற்ற ஒருவரும், தமிழ், உருது, இந்தி, பார்சி, அரபி மொழிகளில் புலமையுள்ள ஒருவரும் இடம்பெறல் வேண்டும்.

இக்குழுக்களில் இடம்பெறுவோர், சிறப்பாக, தமிழ்ப்பற்றும், தூய தமிழறிவும் உடையவராயிருத்தல் வேண்டும். ஆராய்ந்து தெரிவு செய்தல் இன்றியமையாதது. நாள்தோறும் கண்டுபிடிக்கப்படும் அறிவியல், நுண்கலையியல், பிற கலைகள் சார்ந்த சொற்களையெல்லாம் கலைச்சொல்லாக்கக் குழு அன்றன்றே தமிழாக்கம் செய்து கலைச்சொல்லாக்க   இதழில்   வெளியிட்டு,   அனைவரும் அவற்றைப் பயன்படுத்தியே தம் படைப்புகளை எழுதுதல் வேண்டும் என்றும் அறிவித்தல் வேண்டும்.

வேற்றுமொழிகளிலுள்ள நல்ல இலக்கியங்களை, சமயச் சார்பற்றவற்றை, தமிழ் நாகரிகம், பண்பாட்டுக்கு ஆக்கம் தருவனவற்றை, தூய  தமிழில்  பெயர்த்தல்  மொழிபெயர்ப்புக் குழுவின் கடமையாகக் கொள்ளல் வேண்டும். இவ்விரு குழுக்களையும் தமிழ்ப்பல்கலைக்கழகம் உடன் அமைத்தல் வேண்டும். அவைதாம் தமிழ்வளர உதவும்; இதுகாறும் அமைக்காமலிருந்தால் உடன் ஆவன செய்க.

கலைச்சொற்கள் வழக்கில் வந்தபின் மாற்றுவது எளிதன்று. முன்னரே தமிழாக்கம் செய்து அரசிதழில் வெளியிட்டுவிட்டால் மக்கள் கையாள எளிதில் வாய்ப்பாகும். தடுமாற்றம் இராது. கலைச் சொல்லாக்கம், மொழிபெயர்ப்புகளை உடனுக்குடன் வெளியிடத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒரு கிழமையிதழ் (weekly) நடத்தல் வேண்டும். எம் கருத்தை ஆய்ந்து ஆவன செய்யக் கோருகிறோம்.