கருத்துக் கதிர் 1/2052: அமைச்சுத்துறைப் பெயரில் தமிழ் வளர்ச்சி சேர்க்கப்பட வேண்டும்.

 

தமிழக அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சர், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்பப்பண்பாடு, தொல்லியல் துறை முதலியவற்றைப் பார்க்கிறார். ஆனால் அமைச்சுப் பெயரில் தமிழ் எந்த வகையிலும் இடம் பெற வில்லை. முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதிதான் தமிழ் வளர்ச்சிக்கெனத் தனி அமைச்சுத்துறையைத் தோற்றுவித்தவர். எனினும் அதிகாரமில்லாத் துறையால் அமைச்சருக்கு உரிய மதிப்பு கிடைக்கவில்லை எனப் பிற துறையையும் அதனுடன் இணைத்தார். ஆனால், அமைச்சுப்பெயரில் தமிழ் வளர்ச்சி இடம் பெற்றிருக்கும். சான்றாகத் தமிழ் வளர்ச்சித்துறையுடன் அறநிலையத்துறை இணைந்த பொழுது தமிழ் வளர்ச்சி அறநிலையத்துறை என அழைக்கப்பெற்றது.  பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்த பொழுது தமிழ் வளர்ச்சி எடுக்கப்பட்டது. தமிழ்க்காப்புக்கழகம் மூலம் முறையிட்ட பின்னர் அமைச்சுத்துறையில் தமிழ் ஆட்சி மொழி இடம் பெற்றது. மீண்டும் அடுத்த அதிமுக அரசு அமைந்த பொழுதும் தமிழ் விடுபட்டது. அப்பொழுது முறையிட்ட பின்பும் தமிழ் வளர்ச்சி சேர்க்கப்பட்டது. தமிழுக்கு எதிரான யாரோ ஒரு புல்லுருவி அதிகார மட்டத்தில் உள்ளதால் இந்த நிலை. இப்பொழுதும் மு.க.தாலின் அமைச்சரவை அமைத்துள்ள பொழுது அமைச்சுத்துறையின் பெயரில் தமிழ் இல்லை. உரியவரை அடையாளம் கண்டு முதல்வர் களை யெடுக்க வேண்டும்.  தமிழ் வளர்ச்சித்துறை பண்பாட்டுத்துறை முதலியனவற்றிற்கான அமைச்சர் தொழிலக ஆட்சித்தமிழ் அமைச்சர் அல்லது தொழிலக – தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை அமைச்சர் என்பனபோல் ஏதேனும் வகையில் பெயரிலேயே தமிழ் ஆட்சிமொழிக்குமான அமைச்சர் என்பது புரியும் வகையில் பெயர் சூட்டப்பட வேண்டும். விரைந்து செயலாற்றும் முதல்வர் மு.க.தாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்.

000

கருத்துக் கதிர் 2/2052: இணையப் பயன்பாட்டைச் செம்மையாக்க வேண்டும்.

அரசின் இணையப் பயன்பாட்டினால் மக்களுக்கு விரைவில் குறைகள் தீரவும் தேவைகள் நிறைவேறவும் தகவல்கள் அறியவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், எப்பொழுதுமே இணையப் பயன்பாடுகள் எத்துறையிலும் சீராக இருப்பதில்லை. அது குறித்து எத்துறையினரும் கவலைப்படுவதில்லை. முதலில் இணைய வசதியை ஏற்பாடு செய்துவிட்டு அதன்பின்னர் அது சரியாகச் செயல்படுகிறதா என்று பார்ப்பதில்லை. அல்லது ஆங்கிலத்தில் ஓரளவு பயன்பாடு இருக்கும். அதைக் கருத்தில் கொண்டு முழுமையும் சிறப்பாக இருப்பதாக எண்ணிக் கொள்வர் அல்லது தமிழ்ப் பயன்பாடு குறித்துக் கவலைப்படுவதில்லை.

சான்றுக்கு இரண்டைப் பார்ப்போம். வருவாய்த்துறையிலும் உள்ளாட்சித்துறையிலும் இணைய வழியாகச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  ஆனால் தமிழ்ப்பகுதி வேலை செய்யாது. முதலைமச்சர் தனிப்பிரிவிலும் இதுதான் நிலை. தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டால் ஆங்கிலப் பகுதியில் விண்ணப்பிக்கக் கூறுவார்கள்.  வருவாய்த்துறையில்  சான்றிதழுக்காக விண்ணப்பித்தால் இணையத்தில் பதிந்து கொள்வர். ஆனால், விண்ணப்பதாரர் கைகளில் விண்ணப்பங்களைக் கொடுத்து விட்டு ஊர் நல அலுவலர் நிலையிலிருந்து ஒவ்வொரு நிலையாகச் சென்று உரிய சான்றிதழ்களை வாங்கி வருமாறு அலைய விடுவர். இறுதியில் வட்டாட்சியர் அலுவலகத்திலும் அலைந்து காணிக்கையைச் செலுத்திய பின்னர் இணையத்தில் சான்றிதழ் கிடைக்கும். இணையப்பயன்பாடு இருக்கும் பொழுது பொதுமக்கள் ஏன் ஒவ்வொரு நிலையிலும் அலைய வேண்டும். ஆங்காங்கே படி அளப்பதற்காக இந்த நடைமுறையா? இதனைப் புதிய அரசு உடனே மாற்ற வேண்டும். மக்கள் குறைகளைக் களைவதில் விரைவு காட்டுவதால் இத்தகைய போக்கு  அதற்கு இடையூறாக இருக்கும் என்பதை உணர்ந்து முழு இணையப்பயன்பாட்டைக் கொணர வேண்டும். இணையம் வழியாகவே மக்கள் உரிய விண்ணப்பம் அளித்து இணைய வழியாகவே சான்றிதழைப் பெறும் வகையில் செம்மையாக்க வேண்டும். இதனால் தொடர்பான ஊழல்கள் குறையும். மக்களுக்கு நன்மையும் ஏற்படும். ஆவன செய்ய உரிய அரசு அலுவலர்களை வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

000

கருத்துக் கதிர் 3 /2052: இணைய வழித் தகவல்கள் உடனுக்குடன் மாற்றவோ சேர்க்கவோப்படவேண்டும்.

இணைய வழித் தகவல்களும் அற்றைப்படுத்தப்படாமல் பழைய தகவல்களே இருக்கும். அல்லது ஆங்கிலத்தில் ஒன்றாகவும் தமிழில் மற்றொன்றாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாகப் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றபின்பு தகவலைத்தேடினால் தமிழில் முந்தைய முதல்வர் பெயரையும் முந்தை அமைச்சரவையினர் பெயரையுமே பார்க்க முடிந்தது. ஆங்கிலத்தில் உரிய விவரங்களைப்பதியும் பொழுது தமிழ் மீது புறக்கணிப்பைக் காட்டுவதேன்? இன்றைக்குப் பார்த்த பொழுது தமிழில் முதல்வர் பெயர் மட்டும் மாற்றப்பட்டுச்சரியாக இருந்தது.  அமைச்சரவையைச் சொடுக்கினால், ஆங்கிலப்பகுதிக்குச் சென்று ஆங்கிலத்தில் அமைச்சரவையினரைக் காட்டுகின்றது. அதனைத் தமிழில் வெளியிடுவதில் என்ன சிச்கல்?  தமிழில் விவரங்களைப் பதிவேற்றம் செய்யத் தெரியாதவர்களாக இருப்பின் உடனடியாக அவர்களைப் பொறுப்புகளிலிருந்து தூக்கி எறிய வேண்டும்.  உடனுக்குடன் தமிழில் விவரங்களைத் தர வேண்டும். இதுபோல் மாவட்ட இணையப் பக்கங்களைப் பார்த்தால் அங்கே தமிழுக்கு இடமில்லை. புதிய முதல்வர் பொறுப்பேற்றாலும் முந்தைய முதல்வர் பெயரே காட்சிதரும். முறையிட்ட பின்பே மாற்றுவார்கள். இந்தத் தொல்லை வேண்டா என்பதற்காக இப்பொழுது மாவட்டப் பக்கங்களில் முதல்வர் பெயரையே எடுத்து விட்டார்கள். எல்லாத் துறைகளிலும் தலைவர் முதலான விவரங்கள மாறினாலும் பழைய விவரங்களே வாரக்கணக்கில் இருக்கும். இவ்வாறு இல்லாமல் எல்லா நிலைகளிலும் தமிழில் விவரங்கள் அவ்வப்பொழுது உடனுக்குடன் பதிவு செய்யப்பட வேண்டும். உறங்கிக் கொண்டிருக்கும் தமிழ் வளர்ச்சித்துறை இணையங்களில் தமிழ் முழுமையாகப் பயன்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

000

கருத்துக் கதிர் 4/2052 : பேரவைத்துணைத்தலைவர் பதவியை அதிமுகவிற்கு வழங்கலாம்.

மு.க.தாலின் மேற்கொண்ட திட்டமிடல், செயலாக்கம் முதலியற்றால் தி.மு.க. வலிமையாகப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பீடத்தில் ஏறி இருக்கிறது. இருப்பினும் முதல்வர் கட்சிசார்பற்ற செயல்பாடுகளையே விரும்புகிறார். கட்சித்தலைவராக இல்லாமல் முதல்வராகச் செயல்பட முனைப்பு காட்டுகிறார். அதனால் இக்கருத்தை அவர் முன் வைக்கின்றோம். பேரவைத்துணைத்தலைவர் பதவியைப் பேராயக்கட்சிக்கு வழங்கினால்  கூட்டணிக்கு வலு சேர்க்கும் என்றாலும் அக்கட்சி எதிர்க்கட்சிதான். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் வேண்டினால் பேரவைத் துணைத்தலைவர் பதவியை அக்கட்சிக்கு வழங்கலாம். இதனால் அக்கட்சியிலும் ஒருவர் பேரவைத் துணைத்தலைவராகவும் மற்றொருவர் பேரவை எதிர்க்கட்சித்தலைவராகவும் திகழ்ந்து கட்சியின் உட் குழப்பம் தீரலாம். அரசின் செயல்பாடுகளுக்கு எதிரிக்கட்சிபோல் செயல்படாமல் அரசுடன் ஒத்துழைத்து தமிழகம் வெற்றி நடைபோட அக்கட்சியும் உதவலாம். தேர்தலின் பொழுது போட்டிமனப்பான்மைகளை வைத்துக்கொண்டு இப்பொழுது ஒற்றுமைப் போக்கைக் கடைப்பிடிக்கலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

000