(தோழர் தியாகு எழுதுகிறார் 19.3 தொடர்ச்சி)

காலநிலைக் களம்: ஏற்றமும் சறுக்கலும்

கரியிருவளி(Carbon dioxide) முதலான பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவியலர்களும் சூழலியர்களும் வலியுறுத்தத் தொடங்கி பல்லாண்டு கழிந்த பிறகுதான் உலகத் தலைவர்களுக்கு மெல்ல உறைக்கலாயிற்று. 1979இல்தான் சுவிட்சர்லாந்து நாட்டில் செனிவா நகரில் காலநிலை மாற்றம் பற்றிய உலகத் தலைவர்களின் முதல் பெரிய மாநாடு நடைபெற்றது.

அதற்குப் பிறகு காற்று மண்டலத்தில் கரியளவு கிட்டத்தட்ட 25 விழுக்காடு உயர்ந்துள்ளது. 1997ஆம் ஆண்டு சப்பான் நாட்டு கியோட்டா நகரில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வகைமுறை உடன்படிக்கையில் 150க்கு மேற்பட்ட நாடுகள் ஒப்பமிட்டன. வளர்ச்சி பெற்ற நாடுகள் தங்கள் உமிழ்வுகளை 1990ஆம் ஆண்டிலிருந்த அளவுகளின் கீழே 5 விழுக்காடாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த உடன்படிக்கை கோரிற்று. அப்படிக் குறைத்துக் கொள்வதைக் கண்காணிப்பதற்கான சட்டகத்தையும் அது ஏற்படுத்திற்று.

கியோட்டா உடன்படிக்கையின் ஒரு முகன்மைக் குறை: வளரும்பருவ நாடுகளின் கரியுமிழ்வுகளை அது கட்டுப்படுத்தவில்லை. பெருமளவு உமிழ்வுகளுக்குப் பொறுப்பான சீனமும் இந்தியாவும் இந்த நாடுகளில் அடங்கும். 2015 பாரிசு காலநிலை உடன்படிக்கையில்தான் இந்தக் குறை சரிசெய்யப்பட்டது.

பாரிசு உடன்படிக்கையின்படி, சீனம், இந்தியா உட்பட ஒப்பமிட்ட ஒவ்வொரு நாடும் புவியின் நிரலளவு வெப்பநிலையை தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த அளவைவிட 1.5 பாகைக்கு மேல் உயர விடாமல் பார்த்துக் கொள்ளும் நோக்கில் நாட்டளவு இலக்குகள் வகுத்துக் கொள்ள வேண்டும். இந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதிக்குள் கரியுமிழ்வில் கேடற்ற நிலையை எட்டி விட வேண்டும்.

கியோட்டா, பாரிசு உடன்படிக்கைகளைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் இயற்றியுள்ள சட்டத்தின்படி, உறுப்பு நாடுகளின் கூட்டு முயற்சியால் உமிழ்வுகளை 2030ஆம் ஆண்டுக்குள் 1990க்கு மேல் 55 விழுக்காடு என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அந்தந்த நாடுகளிலும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவின் பிடென் ஆட்சியும் இதற்கு உறுதியேற்றுள்ளது.

ஆக, இதற்கு மேல் வேறென்ன வேண்டும்? என்று கேட்கத் தோன்றுகிறதா? உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதன்று. ஏனென்றால் இது புதைபடிவ எரிபொருள் தொழிலில் ஈடுபட்டுள்ள முதலியப் பெருங்குழுமங்களின் கொள்ளை ஈட்டங்களைக் கட்டுப்படுத்துவதாகும்.

இந்தப் பெருங்குழுமங்களுக்குத் தொண்டு செய்யும் அரசுகள், அரசியல் கட்சிகள் எந்த உமிழ்வுக் கட்டுப்பாட்டையும் ஏற்க மாட்டா. 2015 பாரிசு உடன்படிக்கையிலிருந்து 2017இல் அமெரிக்க திரம்பு(Trump) ஆட்சி விலகிக் கொண்டதன் பின்னணி இதுதான். அமெரிக்க ஆலைத் தொழில் மீது இந்தக் கட்டுப்பாடு நியாயமற்ற சுமைகளை ஏற்றுவதாகவே திரம்பு(Trump) காரணம் சொன்னார். இந்த விலகல் 2020 முதல் செயலுக்கு வர வேண்டும்.

பிடென் பதவியேற்ற முதல் நாளே பாரிசு உடன்படிக்கைக்குத் திரும்புவதாக அறிவித்தார். இந்த உடன்படிக்கையின் பங்காளர்களான 192 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இதனை வரவேற்றுள்ளன. அமெரிக்கப் பொருளியலின் பசுங்குடில் வாயு உமிழ்வுகளை 2030க்குள் 2005 அளவைக் காட்டிலும் குறைந்தது 50 விழுக்காடு குறைக்கவும் பிடென் இலக்கு வைத்துள்ளார்.

புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றாக சூரிய விசை, காற்றாலை, கடலலை போன்ற ஆற்றல் வழிகளை நாடும் முயற்சிகளும் நடக்கின்றன.    

மறுபுறம் ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் மண்ணில் புதைந்துள்ள கரிவளத்தை எடுத்துக் கொள்ள மேலை நாடுகளை அழைத்துக் கொண்டிருப்பது கவலைக்குரியது. இந்தியாவில், குறிப்பாக ஈரவளி(Methane) போன்ற நீர்மக் கரிமம் (hydro carbon) தோண்டியெடுக்கப் பெருங்குழுமங்களுக்கு வழி திறந்து விடும் முயற்சிகள் இந்தியாவின் பன்னாட்டு உறுதிப்பாடுகளுக்கு முரணானவை.

மொத்தத்தில் புதைபடிவ எரிபொருள் கட்டுப்பாட்டு முயற்சியில்  சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதையாகவே உள்ளது.

மேலை நாடுகள் தங்கள் மண்ணைத் தோண்டுவதைக் குறைத்துக் கொண்டு ஆப்பிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா முதலிய பகுதிகளில் மண்ணைத் தோண்டக் கிளம்பி விட்டால், காலநிலை மாற்றத்தின் மீதான தாக்கம் இன்னுங்கூட மோசமாகவே இருக்கும்.

காலநிலை மாற்றக் களத்தில் பன்னாட்டு மாநாடுகள், கலந்தாய்வுகள், உடன்படிக்கைகள், குறிக்கோள்கள், இலக்குகள் எல்லாமே தேவைதான். ஆனால் இவை போத மாட்டா. இவற்றை மட்டும் நம்பியிருக்கவும் முடியாது. அனைத்துக்கும் மேலாக ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் விழிப்புடனும் துடிப்புடனும் செயல்படுவது இன்றியமையாதது.

அப்படியானால், புரட்சிக்காக உழைப்பதா? காலநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடுவதா? எது முதன்மை? என்று தாழி அன்பர்கள் கேட்க விரும்பும் வினாவிற்கு விடை காண வேண்டும். காண்போம்.

தரவு : தாழி மடல் .17