நாலடி இன்பம்– 1 வானவில் அறிவியல்!

சங்கஇலக்கிய நூல்களிலும் அதற்குப் பிற்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு எனப் பெறும் நீதி நூல்களிலும் நூலாசிரியர்களால் கடவுள் வாழ்த்து பாடப் பெறவில்லை. அவற்றுக்குப் பின்னர்த் தோன்றிய புலவர்கள்தாம் கடவுள்வாழ்த்துப் பாடல்களைப் பாடிச் சேர்த்துள்ளனர்.

‘அபியுத்தர்’ அல்லது பதுமனார் இக்கடவுள் வாழ்த்துச் செய்யுளை இயற்றிச் சேர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

வான் இடு வில்லின் வரவு அறியா வாய்மையால்,

கால் நிலம் தோயாக் கடவுளை யாம் நிலம்

சென்னி உற வணங்கிச் சேர்தும்- ‘எம்உள்ளத்து

முன்னியவை முடிக!’ என்று.

பொருள்: வான்முகிலால் தோன்றும் வானவில்லின் தோற்றம், மறைவு குறித்து நம்மால் தெளிவாகத் தெரிந்துகொள்ள இயலவில்லை. எனவே, திருவடிகள் நிலத்தில் பதியாத கோலம் கொண்ட கடவுளை யாம் தரையில் தலைமுடிபடியும் வகையில் தொழுது உள்ளத்தில் எண்ணியவற்றை நிறைவேற்றுமாறு வேண்டுவோம்.

சொல் விளக்கம்: வான்=வான் முகிலில்; இடு=இடப்பட்ட; வில்லின்= வானவில்லினது; வரவு=தோன்றுவதை;அறியா=தெரிய இயலாத; வாய்மையால்= உண்மையினால்; கால்=திருவடிகள்; நிலம்=பூவுலகில்; தோயா=படியாத;கடவுளை=முதற்கடவுளை; யாம்=நாம்; நிலம்=பூமியில்; சென்னி=தலை, உச்சி; உற=பொருந்த; வணங்கி=பணிந்து;எம்=எம்முடைய; உள்ளத்து=உள்ளத்தில்; முன்னியவை=எண்ணியவற்றை; முடிக என்று=நிறைவேற்ற வேண்டும் என்றுநினைத்து; சேர்தும்= அடைவோம்.

வரவு அறியா, வாய்மை என்பது உண்டாவதன் தோற்றம் அறிய முடியாத உண்மையால் எனக் குறிக்கிறது. சிறிதுநேரமே இருக்கும் வானவில்லைப்பற்றியே அறிந்து கொள்ள இயலாத நாமா உலகின் தன்மையைப் புரிந்து கொள்ளப்போகிறோம் என்கிறது பாடல்.

திடீர்த் தோற்றம், மறைவு உடைய வானவில் என்னும் இயற்கை அறிவியல் இங்கே உவமையாகக் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணி நூலிலும் “வானிடு சிலையின் தோன்றி,” என்று தேவர்க்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

எப்பொழுது தோன்றும் எனச் சொல்ல முடியாத வானவில் போன்று வாழ்வில் துன்பங்கள் எப்பொழுது தோன்றும், உடம்பு எப்பொழுது அழியும் என அறிய இயலாது. நிலையில்லா உடம்பு அழிவதற்குள் நல்ல செயல்கள் நிறைவேறக்கடவுளைத் தொழவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மகிழம்பூ’ திரைப்படத்தில் கவிஞர் மாயவநாதன்

“இருப்பதை எல்லாம் கொடுக்கிற மனிதர்க்கு நிலைக்கிற புகழ் இருக்கும்” என்கிறார். இவ்வாறு பிறர்க்கென நற்செயல்கள் செய்ய வேண்டும்.

நிலையில்லா உலகில் நினைத்தன நிறைவேற நிலைத்த கடவுளை வணங்குவோம் எனப் பாடல் கூறுகிறது.

இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் 31.08.2019

(நாளை மறுநாள் தொடரும்)