(2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! – தொடர்ச்சி)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்

3. உறங்குகின்ற

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக!

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை

(திருவள்ளுவர், திருக்குறள் 672)

உரிய காலத்தில் செய்ய வேண்டியவற்றைக் காலந்தாழ்த்திச் செய்ய முற்படுவது, தனக்குரிய பணிகளைச் செய்யாமல் தட்டிக் கழிப்பது ஆகியவற்றிற்கு விருது தர வேண்டும் என்றால் தமிழ் வளர்ச்சித் துறைக்குத்தான் தர வேண்டும். எனவே, சிறப்பாகத் தமிழ்வளர்ச்சித்துறையைக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் முனைப்பிலுள்ள இத்துறையின் புதிய இயக்குநர் முனைவர் ந.அருள், விழிப்பாக இருந்து விரைந்து பணியாற்றச் செய்ய வேண்டும்.

விழாக்களைப் பொறுத்த வரை, தமிழ் வளர்ச்சித் துறையினர் குடும்ப விழாபோல் கருதிக் கண்ணுங்கருத்துமாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. ஆனால், ஆட்சித் தமிழைப் பொறுத்த வரையில் என்ன செய்ய வேண்டும் என்று அறியாச் சூழலில் செயல்படுவதால், ஏதும் செய்யாமல்தான் இருக்கின்றனர்.

தமிழ் வளர்ச்சி தொடர்பில், ஆட்சித் தமிழ்ச் செயலாக்கம் குறித்து எதுவும் மடல் அனுப்பினால் எந்த நடவடிக்கையும் இருக்காது. நாம் சில முறை நினைவூட்டினால் காலாவதி ஆன மருந்தைத் தருவதுபோல், உரிய நாள் முடிந்த பின்னர் மடல் அனுப்புவார்கள். சான்றுக்கு ஒன்று கூறுகிறேன்.

2013 இல் நூலக ஆணைக் குழு, நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதற்கு விண்ணப்பம் அனுப்புமாறு விளம்பரப்படுத்தி யிருந்தார்கள். ஆனால், விண்ணப்பப்படிவம் முழுமையும் ஆங்கிலத்தில்தான் இருந்தது. அதுவும் சில படிவத்தில் ஆங்கிலத்தில்தான் கட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றும் இருந்தது. கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்தலாம் என்பதை அறியாதவர் உருவாக்கிய படிவமாக இருக்கலாம். இது குறித்துத் தமிழ் வளர்ச்சித் துறைக்குத் தமிழ்க்காப்புக்கழகம் உரிய நடவடிக்கை எடுத்துத்  தமிழ் விண்ணப்பப்படிவங்களை வெளியிடச் செய்யுமாறு வலியுறுத்தியது(மாசி 02, 2044/ பிப்.14, 2013). த.வ.துறை நடவடிக்கை எடுத்தது. எப்பொழுது தெரியுமா? உரிய விண்ணப்பங்களைப் பெற்று நூல்களைத் தெரிவு செய்து ஆணைகள் வழங்கி அந்நூல்களை எல்லாம் பெற்ற பின்னர் தமிழ்க்காப்புக்கழக மடலைத் தக்க நடவடிக்கைக்காக என்று அனுப்பியது(22.07.2013). அலுவலக நடப்புப் பதிவேட்டில் கோப்பினை முடித்ததாகக் காட்டக் கணக்கு காட்டத்தான் இம்மடலே தவிர ஆட்சித்தமிழ்ச்செயலாக்க உணர்விலல்ல என்பது சொல்லாமேல புரியும்.

இதனடிப்படையில் அடுத்த ஆண்டாவது தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு மார்கழி 22, 2044 சனவரி 06. 2013 அன்று மடல் அனுப்பினோம். புதிய விண்ணப்பம் ஆங்கிலத்தில் இருந்தது மட்டுமல்ல, ஆங்கிலத்தில்தான் நிரப்ப வேண்டும் என்றும் இருந்தது. ஆங்கில நூல்களுக்குப் பக்க வரையறை கிடையாது. தமிழ் நூல்களுக்குப் பக்க வரையறை உண்டு. இத்தகைய மொழிப்பாகுபாட்டை நீக்குமாறு வேண்டியும் பயனில்லை.

 முதலமைச்சர் தனிப்பிரிவில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தித் தமிழை ஒதுக்கி வைப்பது குறித்து முறையிட்டும் பயனில்லை. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழ்ப்பாடத்திட்டத்தில் இரு தாள்களாக இருந்த முறையை மாற்றி, ஒரு தாளாகக் குறைத்தமை, திருக்குறளை நீக்கியமை, மாெழி வாழ்த்தை அகற்றியமை போன்ற நேர்வுகளிலும் தமிழ் வளர்ச்சித் துறைக்குத் தெரிவித்த பொழுது  கொள்கை முடிவு என அமைதியாக இருந்து விட்டனர். (இவை குறித்துப் பள்ளிக்கல்வித்துறை தொடர்பானவற்றைத் தெரிவிக்கும் பொழுது பார்ப்போம்.)

பொதுவாகத் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு என்ன கருத்து அனுப்பினாலும் கொள்கை முடிவு என இரட்டைச் சொற்களில் முற்றுப்புள்ளி வைக்கும் பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இது தவறான போக்கு ஆகும். “பல கொள்கை முடிவுகள் அதிகாரிகளின் கருத்துருக்களின் அடிப்படையில்தான் உருவாகின்றன. கொள்கை முடிவு என்றால், புதிய விருதுகள் அறிவிப்பும் புதிய திட்டங்கள் அறிவிப்பும் எங்ஙனம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எனவே, கொள்கை முடிவு எனத் தட்டிக் கழிக்காமல் இது குறித்து ஆராய்ந்து தக்க முடிவு எடுக்குமாறு”  வேண்டினோம். பயனில்லை.

தமிழ் வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு முறையும் செம்மையாக இல்லை. ஆய்வுக்குரிய அலுவலகத்தினர் வினாப்படிவத்தை நிறைவு செய்து தந்தால் அதைப்பார்த்துத் தட்டச்சர் அறிக்கையைத் தட்டச்சுத் தந்திடுவார். இதுதான் ஆய்வறிக்கை. நிறைவு செய்த வினாப்படிவத்தைக் கடைநிலை ஊழியர் கூட வாங்கித் தரலாம். இதுபோன்ற புள்ளிவிவர அடிப்படையிலான ஆய்வறிக்கையால் என்ன பயன்? எனவே, இதையெல்லாம் ஆய்வாகவே கருத இயலாது.

பிறரைப் பொறுத்தவரை தமிழ்வளர்ச்சித் துறை சொன்னாலும் வழிகாட்டினாலும் செய்ய ஆயத்தமாகவே உள்ளனர். ஆனால், சொல்வார் யாருமில்லை. சான்றாகப் பல கூறலாம். எனினும் சில கூற விரும்புகிறேன்.

மதுரையில் சித்திரைப் பொருட்காட்சியில் காணுமிடமெங்கும் ஆங்கிலமே இருந்த பொழுது வேண்டுகோள் விடுத்துத் தமிழில் எழுத வழிகாட்டியதும் முழுமையாய்த் தமிழாக மாறியது; கடைப் பெயர்ப்பலகைகளைத் தமிழில் எழுத வேண்டுகோள் விடுத்ததுடன் நில்லாது, உரிய தமிழ்ச்சொற்களைத் தெரிவித்ததும் வழிகாட்டியதும் பெயர்ப்பலகைகள் யாவும் தமிழால் நிறைந்தது; அலுவலகங்களில் பிழையின்றியும் செம்மையாயும் தமிழில் எழுத வழிகாட்டியதும் அதனைப் பின்பற்றி ஆட்சித் தமிழை உளப்பூர்வமாக நிறைவேற்றியது; எனச் சொல்லிக் கொண்டு போகலாம்.

மதுரையில் மாவட்ட ஆட்சியகம் முன்புதான் திருவள்ளுவர் சிலை இருக்கிறது. ஆனால், சுற்றிலும் சுவெராட்டிகள் ஒட்டப்பட்டும் கைகளில் கட்சிக்கொடிகளை மாட்டி விட்டும் தலையில் கொடித்தோரணங்களைக் கட்டியும் மறைத்து வைத்திருந்தனர். அதனைத் தூய்மை செய்த பின்னரே மக்களுக்குத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை தெரிந்தது. தினமலரில் தமிழ்வளர்ச்சி அதிகாரியே ஒட்டப்பட்ட சுவரொட்டிகளைப் பிய்த்துத் தூய்மை செய்து கொண்டிருந்தார் என்ற செய்தியைப் பார்த்ததும் தமிழன்பர்களுக்கு அதனைத் தூய்மையாகவே வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு வந்தது. மாலை அணிவிக்க அமைச்சர் வருகிறார், செயலர் வருகிறார் என்று சொல்லித் தொடக்கத்தில் புலவர் சிலைகளைத் துப்புரவாகவும் தூய்மையாகவும் ஆக்கியதும் பின்னர், தொடர்ந்து வேண்டியதற்கிணங்க, எப்பொழுதும் தமிழ்ப்புலவர் சிலைகள் தூய்மையாக்கியதை வாலாயப்பணியாக மதுரை மாநகராட்சி மேற்கொண்டதையும் மறக்க முடியாது. இதன் தொடர்ச்சியாக ஒன்று. மதுரையில் தொல்காப்பியர் சிலை எங்குள்ளது என்று யாருக்கும் தெரியாமல் இருந்த பொழுது  மதுரை பழைய நீதிமன்றக் கட்டிடம் அருகே மரக்கிளைகள் மூடி மறைத்திருந்தது. அதனைக் கண்டறிந்து அச்செய்தியை ‘தமிழக அரசியல்’ இதழில் செய்தியாக வெளியிட்டு அதனடிப்படையில் வேண்டிய பொழுது வழக்கம்போல் தமிழ் வளர்ச்சித்துறையினர் பாராமுகமாகக் கேளாக் காதினராகத்தான் இருந்தனர். மதுரை ஆட்சியருக்கும் மாநகராட்சி ஆணையருக்கும் மடல் அனுப்பியதை உலகத்தமிழ்ச்சங்கப் பொறுப்பு அதிகாரி முனைவர் பசும்பொன்னிற்குத் தெரிவித்ததும் தானே மறைத்துள்ள கிளைகளை அகற்றிக் காணும் வகையில் தொல்காப்பியர் சிலையை வெளிப்படுத்தினார். பின்னர் மாநகராட்சியினரும்  வாலாயப்பணியாக மேற்கொண்டு இன்று வரை தொல்காப்பியர் சிலை நன்னிலையில் உள்ளது.

அப்படியானால் இவைதான் தமிழ்வளர்ச்சிப்பணிகளா என அத்துறையினர் கேட்கலாம். அலுவலக நேரங்களில் ஆட்சித்தமிழ்ச் செயலாக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்றி, அதன் தொடர்ச்சியாகத் தமிழ் எங்கும் இருக்கவும் தமிழ்ப்புலவர்கள் மதிக்கப்படவும் செயலாற்றுவதும் முதன்மைப்பணிதான்.

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினர் விழிப்பாக இருந்தனர் என்றால், ஆங்கிலத்தை அகற்றுவது எளிதாக இருக்கும். ஆனால், ஊடகங்களில் நாம் காணும் அறிக்கைகள், ஆணைகள், சுற்றறிக்கைகள், முத்திரைகள் யாவும் ஆங்கிலமாகத்தானே உள்ளன. அண்மையில் சென்னை மாவட்ட ஆட்சியர் மாறுதல் ஆணை ஆங்கிலத்தில்தானே பிறப்பிக்கப்பட்டது. தலைப்பில் உள்ள படங்களில் அடையாள அட்டை, அதில் இடப்பட்ட முத்திரை என யாவுமே ஆங்கிலத்தில் உள்ளதைக் காணலாம். இவற்றை யெல்லாம் பார்க்கும் பொழுது உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இவற்றிற்கு முற்றுப்புள்ளி இடப்பட்டிருக்கும் அல்லவா? என்ன செய்ய வேண்டும், எவ்வாறு செய்ய வேண்டும் என்ற உணர்வும் இன்றி வழிவகையும் அறியாமல் இருக்கும் தமிழ்வளர்ச்சித்துறையைத் தட்டி எழுப்ப வேண்டுமல்லவா? இத் துறை உறங்கும் வரை தமிழன்னையும் உறக்கத்தில் தானே இருக்கும்.

  • இலக்குவனார் திருவள்ளுவன்

தொடரும் கட்டுரை : 4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக!