45. இந்து மதம் எல்லாரையும் அரவணைக்கிறது. – நீதியர் நாகரத்தினா 46. “இந்தியா சனாதனத்தின்படி தான் இயங்குகிறது” – ஆளுநர் இரவி 47. கோயிலுக்குத் தூய்மையாக வரவேண்டும் என்று கூறுவது தவறா? – இவை பொய்யான வாதங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 42-44 – தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 45-47
- ?. 45. இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதனால்தான் இந்தியா எல்லாரையும் அரவணைக்கிறது. அதனால்தான் நாமெல்லாம் ஒற்றுமையாக வாழ முடிகிறது’ என்று நீதியர் நாகரத்தினா கூறியுள்ளாரே!
- ஒரு காலத்தில் இந்து மதம் தோன்றாமல் இந்நிலப்பரப்பு தமிழ்த் துணைக்கண்டமாக இருந்தது. அப்பொழுது நிலத்திற்கேற்ற கடவுள் வழிபாடு இருந்தது. இருப்பினும் வேறுபாடு காட்டாமல் ஒள்றுமையாக வாழ்ந்தனர். வழி வழியாக இவ்வுணர்வு இருந்தயால்தான் மாணிக்கவாசகர்,
“ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இலார்க்கு ஆயிரம், திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ” .என்றார். (தெள்ளேணம் என்பது கை கொட்டிப் பாடிக்கொண்டே ஆடும் ஆட்டம்) இன்றும் இந்த நிலை தொடர்வதால்தான் இந்து மதத்தில் பலருக்குச் சகிப்புத் தன்மை உள்ளது. அவர்கள் எல்லாக் கடவுளர் கோயில்களுக்கும் செல்கின்றனர். ஆனால் இதில் பிளவை ஏற்படுத்தியதுதான் சனாதனம். அந்தப்பிளவும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதனால் ஒற்றுமைக் குலைவு நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.
- “? 46. இந்தியா சனாதனத்தின்படி தான் இயங்குகிறது” என்பது ஆளுநர் இரவியின் மற்றொரு கூற்று. சரிதானா?
- அவர் மட்டுமல்லர்; மேலும் இவ்வாறு பலர் சொல்லிக் கொண்டு திரிகின்றனர்.
“அவளைத் தொட்டதனால் ஆளுநர்தான் தன் கைகளைப் பினாயில் போட்டுக் கழுவ வேண்டும். அசிங்கம் பிடித்த கேவலமான பிறவிகள். படிப்பறிவில்லாத கேவலமான பிறவிகள். படிப்பறிவில்லாத கேவலமான பொது அறிவில்லாத பொறுக்கிகளே பெரும்பாலும் ஊடகத்தில் வேலைக்கு வருகிறார்கள்.” – நடிகர் எசுவிசேகர் பகிர்ந்து பரப்பிய செய்தி
இவ்வாறு பெண்களை இழிவு படுத்தும் சனாதனவாதிகள் இருப்பதால் இவ்வாறு கூறுகிறார் போலும். ஆனால், இந்திய அரசியல் யாப்பே சனாதனத்திற்கு எதிராகத்தான் இருக்கிறது. எனவேதான் தீண்டாமைக்கு எதிராக அரசு யாப்பு உள்ளது. அதற்கேற்பச் சட்டங்களும் உள்ளன. எனவே, இந்தியா சனாதனத்திற்கு எதிராக இயங்குகிறது என்பதே சரியாகும்.
- ? 47. கோயிலுக்குத் தூய்மையாக வரவேண்டும் என்று கூறுவது தவறா?
- எல்லா இடத்திற்கும் தூய்மையுடன் செல்வதே நன்று. வழிபாட்டிடம் என்றால் கட்டாயத் தூய்மை சரியானதே. ஆனால், ஒரு சாரார் நுழைவதற்கு எக்கருத்தும் தெரிவிக்காமல், மற்றொரு சாராரை, அவர்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு அல்ல, அவ்வாறு நுழைய இசைவு கேட்பதற்கே அவர்கள் குளித்து விட்டுக் கேட்க வேண்டும் என்பது கொடுமையல்லவா?
கூதிரம்பாக்கத்தைச் சேர்ந்த தாழ்த்தப் பட்டவர்கள், ஊர்க் கோவிலுக்குள் நுழைவதற்கு தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் செயேந்திரர் அதற்கு உதவ வேண்டுமென்றும் வேண்டினர். அதற்கு, அவர், குளித்து, சுத்தமாகிவிட்டு கோவிலுக்குள் நுழையும் அனுமதியைக் கோர வேண்டுமெனக் கூறினார். இவர்கள் குளிக்கவில்லை என்பதை இவர் கண்டாரா? கோவில் கட்டுமானத்திற்குத் தங்கள் மூதாதையர்களும் பங்களித்துள்ளனர் என்பதால் கோவிலில் நுழைவதற்குத் தங்கு தடையற்ற உரிமை உடையவர்கள். அவர்களை நீங்கள் குளிக்காதவர்கள், தூய்மையற்றவர்கள் என்பது அவர்களை இழிவுபடுத்துவது அல்லவா? இத்தகைய இழிவு படுத்தும் சனாதனம் நீடிக்கத்தான் வேண்டுமா? சனாதனவாதிகளுக்கு முதன்மை அளிக்கத்தான் வேண்டுமா?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 74-75
Leave a Reply