anna06

அண்ணா–ஓர் வரலாற்று அற்புதம்

 

“உருவுகண்[டு] எள்ளாமை வேண்டும்

உருள்பெரும்தேர்க்[கு]

அச்[சு]ஆணி அன்னார் உடைத்து”என்னும்

பெரும்பொருள் மருவுதிருக் குறள்இது -அண்ணா

ஒருவருக்கே பொருந்துகின்ற பெரும்குறள்

 

காஞ்சி போன தமிழ்நாட்டில்

கழனி போல வளம்கொழிக்கக்

காஞ்சி தந்தசீர் கார்முகில்

கூரறிஞர்; பேரறிஞர் அண்ணா

 

தேஞ்சி போன தமிழ்நாட்டைச்

சீரமைத்துச் சிறப்பேற்றக்

காஞ்சி தந்தசீர் திருத்தவாதி

களம்கண்ட அரசியல்வாதி

 

பொடியினைப் போடும் மூக்கு

பொடிவைத்துப் பேசும்அவர் நாக்கு – அதில்

இழையோடும் நகைச்சுவைப் போக்கு

அதிலும் அவர்க்கே அதிக வாக்கு

அவரிடம் எவ்வளவு நாகரிகப் போக்கு!

அவருக்குப்பின் அதற்குப் பிடித்தது சீக்கு

பேச்சினில் இருக்காது தாக்கு

தாக்குஎதையும் தாங்கும் – அவர்தம்

தாங்குதமிழ் இதயமோ தேக்கு

ஆடம் பரத்திற்கு அண்ணா

எழுதும் தீர்ப்போ தூக்கு பின்ஏன்

அவருக்குப் பெருகாது செல்வாக்கு?

 

ஆண்டுவரும் அன்னைத் தமிழே!

மீண்டும்ஓர் அண்ணாவை உருவாக்கு

உன்னால் முடியாததும் உண்டோ?

அண்ணாவைப் போலவே  – உயர்வாய்

எம்மையும் நீயே உருவாக்கு

 

இன்னாத செய்தார்க்கும் – என்றும்

இனியவே செய்த மனிதநேயம் –  மனிதம்

மண்ணாய் மக்கிப் போன மண்ணுலகில்

அண்ணா ஒர்வரலாற்று அற்புதம்

 

அண்ணா

கொள்ளை யடித்தார்

மக்களின் இதயங்களை!

கோடிக் கணக்கில் சேர்த்தார்

கட்சியில் தொண்டர்களை!

கோமானாய்க் கொடிகட்டிப் பறந்தார்

கொஞ்சுதமிழ்ப் பேச்சிலே!

கோட்டையிலே குடியிருந்தார் – தமிழ்

நாட்டைக் காத்திடவே!

குடிகுடிஎனக் குடித்தார் – வள்ளுவர்

கொடுத்த முப்பாலை!

படிதாண்டிப் போனார் – ஏழையின்

குடிசைக்கு உள்ளே!

கொடிய வறுமைப் பேயினை

அடித்து விரட்டவே!

 

தோற்றாலும் தோற்காத உள்ளம் – அவரைத்

தேடிவந்து சூழும்புகழ் வெள்ளம்!

உள்ளத்தில் இல்லைஓர் பள்ளம் – அவர்தம்

உள்ளத்தைத் தொட்டதில்லை கள்ளம்!

 

நூலகம் சென்று படிப்பார் – அதில்

ஆழ்ந்து தம்மையே மறப்பார் – மக்கள்

அறிவுக் கண்ணைத் திறப்பார் – எங்கும்

அறிவை ஊட்டி அவரும் சிறப்பார்!

 

பற்றாரும் பற்றுபடி

பற்றும் பைந்தமிழில்

கற்றார் கல்லார்முன்

கற்ற செலச்சொல்வார் – உறவு

அற்றாரும்படி சுற்றும்படி – சுவை

முற்றும்படி – மனம்

ஒற்றும்படி – துயர்

வற்றும்படி – பொழிவார்

நற்றமிழ் மழைதனை-

 

செந்தமிழில் சிந்தைகவர்

இலக்கியங்கள் செய்வார்!

விந்தைபுரி நந்தமிழை

உயிர்எனவே கொள்வார்!

வந்தவரைச் சொந்தமென

முந்திவந்து ஏற்பார்!

தந்தை பெரி யாரே

வந்திவரைப் புகழ்வார்!

 

ஓங்குதமிழ் என்றாலும்

ஆங்கிலமே என்றாலும்

அண்ணாவை வெல்வற்கு

அண்ணா வுக்குஒப்பு

அண்ணாவே தான்என்றும்!

 

அடுக்கு மொழிகளை அவர்

தொடுத்துஉரை நிகழ்த்தினால்,

மடுத்துமனம் மயங்கும்

விடுத்துஇடையில் – அடி

எடுத்து நடந்தால் – மனம்

தடுத்து நிறுத்தும் – செவி

“மடுக்க” எனஅறி வுறுத்தும்!

 

தலைப்பெதனைக் கொடுத்தாலும்

தப்பாது பொழிவார்

களைப்பேதும் முளைக்காமல்

கனிமொழிகள் மொழிவார்

உழைப்பினையே உறவென்று

ஊன்றிநிலை உயர்வார்

மலைப்பேதும் கொள்ளாமல்

மலைமேலே நிற்பார்

 

பொறுமைக்கோர் புகலிடம்

அறிவுக்கோர் வாழிடம்

சிறுமைக் குணங்கள்

செல்லாது அவரிடம்

அருமைமிகு நாக்கோ

தமிழ்த்தாயின் வழித்தடம்

பெருமைகள் இத்தனையும்

பூமிதனில் யாரிடம்?

 

எதிர்கட் சிகளை எதிரிக் கட்சியாய்

என்றும்அவர் எண்ணிய தில்லை

அதிர்வேட்டுச் சொற்களை அவர்

என்றும் ஆண்டதும் இல்லை

புதிர்போட்டுப் பேசினாலும் – தமிழ்ப்

புலமை அங்கே பளபளக்கும்

சதிர்ஆடும் நாநலத்தால் – அன்று

சட்டமன்றம் கலகலக்கும்

 

தம்மரியாதை பேணும்

பெரியாரியல் அங்கம்

சிந்தனைச் சீரரங்கம்

பகுத்தறிவுச் சுரங்கம்

பண்பாட்டு அரசியலில்

ஓயாத சிங்கம்

எந்நாளும் எளிமையிலே

சொக்கத் தங்கம்

அண்ணா இலாமண்ணில்

உறக்கத்திற்குப் பங்கம்

 

உடைமை என்றுஉலகில்

கடமை அன்றி வேறெதுவும்

கிடையாது; எததையும்

அடையாது அவர்மனம்

 

புண்ணாக்கும் சொல்அம்பை

அண்ணாமேல் எய்தாலும்

கண்ணாகக் கண்ணியத்தை

உண்மையாய்க் காத்திடுவார்

 

இட்டுக் கட்டி எவர்

எதனைச் சொன்னாலும்,

தட்டுக் கெட்ட சொல்லைத்

தேன்போலக் கொட்டினாலும்,

முட்டுக் கட்டை போட்டு- பல

இக்கட்டைச் செய்தாலும்,

கட்டுப் பாட்டை அவர்

கட்டிக் காத்திடுவார்

எட்டுத் திக்கும் எட்டும்

புகழ்சேர்த் திடுவார்

 

அண்ணாஓர் பல்கலைக் கழகம்-  அங்கு

அரசியல் வாதிகள் அனைவரும்

பாடங்கள் படித்திட வேண்டும் பல

பட்டங்கள் பெற்றிட வேண்டும்

 

அண்ணாஓர் மேம்பாலம்

நெருக்கடிகள் நேராமல்

தவிர்த்திடும் நேர்த்திக்கு

அண்ணாஓர் மேம்பாலம்

 

சென்னையில் உள்ள

அண்ணா சாலை – அது

சுறுசுறுப்பாய் இயங்க வைக்கும்

விரும்புகின்ற இடம்சேர்க்கும்

 

அண்ணா வைப்படி

அவரைக் கடைப்பிடி

முன்நிற்கும் வெற்றிப்படி

அதுவும்உன் விருப்பப்படி

 

– பேராசிரியர் வெ. அரங்கராசன்

ve.arangarasan04