அழகார்ந்த செந்தமிழே! வாழ்த்தி வணங்குவமே! – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
அன்னை மொழியே
அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக்
கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த
மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே!
திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே!
எண்தொகையே ! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே!
மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
முடிதாழ வாழ்த்துவமே
மன்னுஞ் சிலம்பே!
மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
முடிதாழ வாழ்த்துவமே
சிந்தா மணிச்சுடரே!
செங்கை செறிவளையே!
தந்த வடமொழிக்கும்
தாயாகி நின்றவளே!
சிந்து மணற்பரப்பில்
சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர்
மூத்த சுமேரியத்தார்
செந்திரு நாவில்
சிரித்த இளங்கன்னீ !
சிந்துங் கலைவடிவே !
சீர்த்த கடற்கோளில்
நந்தாக் கதிரொளியே!
நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர்
வாழ்த்தி வணங்குவமே !
– பாவலரேறு பெருஞ்சித்திரனார்
Leave a Reply