thalaippu_inidheilakkiyam02

9

நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர் : navaliyur-ka.-somasuntharapulavar

தமிழன்னையைப் போற்றுவோம்!

 

 

செந்தமிழ்ச் செல்வியைத் தாமரையாட்டியைத் தென்பொதியச்

சந்தனச் சோலையில் ஏழிசை கூவுந் தனிக்குயிலைச்

சிந்தையிற் பூத்துச் செந்நாவிற் பழுத்துச் செவியினிலே

வந்து கனியும் பனுவற் பிராட்டியை வாழ்த்துதுமே!

  தங்கத்தாத்தா என அழைக்கப்பெறும் யாழ்ப்பாணத்து நவாலியூர் க.சோமசுந்தரப்புலவர் அவர்களின் பாடல்.

  “தமிழன்னையே! என்றும் அறிவுச் செல்வமும் இளமையும் மிக்க செந்தமிழ்ச்செல்வி நீ! அனைத்துக் கலைகளும் உடையவள் ஆதலால் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் நீயே! தென் பொதிகையில் நறுமணம் மிக்க சந்தனக்காட்டில் ஏழிசை கூவும் குயிலும் நீயே! புலவர் பெருமக்களின் சிந்தனையில் மலர்ந்து, அவர்கள் செம்மையான நாவில் செழுந்தமிழாய்ப் பழுத்து, இனிமை தரும் நூல்களாகக் கனிந்து செவியில் இன்பம் பயப்பவள் நீ! ஆதலின் உன்னை வாழ்த்துவோம்!”

  தமிழிலக்கியம் பல பனுவல்களை (இலக்கியங்களை) உடைமையால் பனுவல் பிராட்டி என்கிறார்.(ஆட்டி – பெண்பால் விகுதி).

  இளமை நலனும் இலக்கிய வளமும் கலைச்சிறப்பும் இசைமணமும் நிறைந்த தமிழின் செம்மைத் தன்மையை நவாலியூர் க.சோமசுந்தரப்புலவர் உணர்த்துகிறார்.

  குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவே ஏழு சுரங்களாகும். இவற்றின் அடிப்படையில் ஏழிசை என்றனர். ஆனால், பிற்காலத்தில் சட்சம், ரிசபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிசாதம் என ஆரியப் பெயரிட்டு அழைப்பதும் இவ்வடிப்படையில் ச, ரி, க,ம,ப,த,நி எனக் குறிப்பதும் தவறாகும்.

  தமிழன்னையைப் போற்றும் நாம் தமிழிசையையே போற்றுவோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்