இனிதே இலக்கியம் 3 விண்போல் பொதுவான கடவுள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 96, ஆவணி 27, 2046 / செப். 13, 2015 தொடர்ச்சி)
3
முத்தே பவளமே மொய்த்த பசும் பொன் சுடரே
சித்தே என் உள்ளத் தெளிவே பராபரமே.
கண்ணே கருத்தே என்கற்பகமே கண்நிறைந்த
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே.
எக்கடவுளரை வணங்குவோரும் போற்றி வழிபட உதவும் தமிழ்ப்பாடல்களுள் தாயுமானவரின் இப்பாடலும் ஒன்று. தாயுமானவர் திருப்பாடலில் உள்ள ‘பராபரக்கண்ணி’ என்னும் தலைப்பில் இடம் பெற்ற பாடல் இது.
விலைமதிப்பற்ற முத்தாகவும் பவளமாகவும் பொன்னொளியாகவும் உள்ளத்தின் தெளிவாகவும் இருக்கின்ற எல்லாவற்றிலும் மேலான பரம்பொருளே! நற்பார்வையை நல்கும் கண்ணாகவும் பிறரை ஈர்க்கக்கூடிய கருத்தாகவும் கேட்டன வழங்கும் கற்பக மரமாகவும் கண்ணுள் நிறைந்த விண்ணாகவும் களிப்பு தரும் வியப்பாகவும் காட்சி தரும் பரம்பொருளே! உன் அருள்வேண்டிப் போற்றுகின்றேன்! அருள்தருவாயாக!
இப்பாடல் மூலம் கிடைத்தற்கரிய பொருளாகவும் விரிந்த விண்ணாகவும் விந்தையாகவும் எல்லாம் அருள்பவனாகவும் கடவுள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றார் தாயுமானவர். விண் அனைவருக்கும் பொது என்பதுபோல் கடவுளும் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை உணர்த்துகின்றார்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply