இன்றைய நாள் இனிய நாள் – இளையவன் செயா (மா.கந்தையா)
பெரியார் ஆண்டு 135 தொ. ஆ. 2880 தி.ஆ.2046
ஆடவை ( ஆனி ) 30 15–07–2015
பிறந்த நாள் !
ஏ …….மனிதா.. …….!
ஏறுபோல் பீடுநடைஅன்று எறும்புபோல் ஊறும்நடைஇன்று
ஊறுஏதேனும் உண்டோ வீறுகொண்ட மனமே
மாறுபடில்லா அறிவுகேட்டது மாறுபடும் மனமோ
ஊறில்லா சொல்லால் கூறியது மறுமொழி !
* * *
அகவை எண்பதை அங்கையால் தொடஎண்ணி
தகவுடன் நடக்கிறேன் ; முகவாய் திரும்பிஎன்
கால்பதித்த தடங்களில் கண்பதித்துப் பார்க்கிறேன்
கோல்கொண்டு அளக்கக் கொஞ்சமும் இயலாதே !
* * *
இயலாது என்பதால்தான் எறும்பூறும் நடையா என்றறிவு
புயலாக வந்தாலும் புறமொதுக்கும் மனமேபெருங்
கயலாக வெள்ளத்தைத் தயங்காது நீந்துவாயே
இயல்பான நிலையைநீ பயலேஎங்கே தொலைத்தாய் !
* * *
தொலைக்க வில்லைஅறிவே விலையில்லா என்னுயிர்
தொலைந்து ஆண்டுநான்கு நிலையான தால்தான்
கலையிழந்த சித்திரமாய்க் குலையிழந்த மரமாய்கொதி
உலைமேல் மூடியாய்ஆன உடற்கூடு நான்அறிவே !
பாசத்தைப் பகுதிபகுதியாகப் படைக்காது குளத்துப்
பாசியாக குடும்பத்தின்பால் படர்ந்துவிட்ட மகள்பிறர்
ஏசினாலும் எடுத்தெறிந்து பேசினாலும் பொறுத்துக்
கூசாமல் பாசத்தைக் குடமாகக் கொட்டினாளே !
வாசமுள்ள மலர்களை நேசமுடன் பூத்தசெடி
பேசாதுபேசி உள்ளப் பெருமூச்சை அடக்கினாளே !
எட்டிப்பாய நானென்ன குட்டிப் புலியா ?
மட்டிப்போன மட அறிவே தட்டிகேட்க ஆளில்லைஎன
தட்டுக் கெட்டுநீ தறிகெட்டுப் பேசியே
மட்டிலா வார்த்தைகளால் மனதைக் குத்துகிறாயே !
* * *
குத்தவில்லை மனமே கொத்துங் குலையுமாய்
எத்திக்கும் வாழும் தித்திக்கும் மாந்தகுலம்தான்
தத்தித் தவழ்ந்து முத்தம்தரும் குழந்தை
மொத்தமாய் வளர்ந்து முத்துக்களைத் தந்துவிட்டு
இத்தரை வாழ்வை இறுதியாக்கிப் போனதில்லையா ?
கத்துகடல் சூழ்தமிழ்மண் ணில்கணியன் பூங்குன்றன்
முத்திரைத் தமிழில் முழங்கினானே நிலையாமையை
நித்தம் பிறப்பதும்பின் இறப்பதும் இயல்பென்றானே !
படித்தாயே மனமேபின்ஏன் இடிந்தாய்; என்றும்
குடித்தாயே தமிழ்ப்பால் குடித்தும் ஏன்என்னை
அடிக்கோலால் மட்டிஎன்று அடித்துத் துடிக்கவைத்தாய்
பொடித்தாய மனமேஉன் புன்மையைப் புறமொதுக்கு !
* * *
ஒதுக்கினேன் அறிவேஉணர்ந்து புதுக்கினேன் உன்னைஉன்
புத்தறிவுக்கு எப்போதும் சித்தம் அடிமைதானே
நித்தமும் நீதானேமுன் நிற்பாய் வெற்றியோடு
மொத்தத்தில் மனம்ஒரு மரமேறும் குரங்குதானே !
குரங்கானதால் மிகவும் இறைஞ்சுகிறேன் இயற்கையிடம்
ஆறறிவு – ஐயமனம் அமைவுறப் படைத்தாய்
இருமனம் கலந்த திருமணம் என்பார்கள்அந்த
இருமனமும் எனக்குள் இருக்கவேண் டுமெதெற்கு
மறப்பதற்கு ஒருமனமும் மறவாமல் இருப்பதற்கு
பிறிதோர் மனத்துடன் பிறந்திருக்க வேண்டும்
வறியவன் வள்ளலிடம் சிறிதளவு கேட்பதுதான்
அறியாது கேட்கவில்லை அறிந்தே கேட்கிறேன் !
* * *
கேட்கிறேன் என்றாயே கேலிக்குரிய மனமே
பார்க்கிறேன் என்றுசொல் பார்க்கலாம் மனத்தளவில்
சேர்கிறேன் எனக்கூறு சேரலாமொருநாள் அதையின்று
கேட்கிறாயே கேள்வியாக கேடுள்ள மனமே !
* * *
போதும்போதும் அறிவேஎனைப் போகவழி விடுநீ
ஓதும்உன் சொற்களை ஓரம்கட்டு உன்னை
வாதில் வென்றிட தோதுஇல்லை என்றாலும்
காதில் வாங்கிக் கொள்கிறேன்நீ கழறியதை !
* * *
தப்பிக்க நினைக்காதே தப்படி போடாதே
எப்போதும் போல்நீ ஏறுநடை போடுமனமே
முப்போதும் உன்னைக் காப்பதற்கு முக்கனிகள்
இமைபோதும் உனக்காக இருக்கின்றனரே போதாதா !
வழிநடக்கும் போதுஅவர்தம் மொழியாலே கேட்பரே
ஊழியில் நடக்கும் உலுத்தசெயலை உதிர்க்கும்போது
விழியைக் காப்பதற்கு விழியிமைகேட்டா காக்கிறதுஎன
மொழிந்து கூறியே முக்கனிகள்காப் பைப்போற்றுவாயே !
அந்தமனம் எங்கே ? நொந்தமனம் கூடாதுஎன்றும்
விந்தை மாந்தர்வாழும் எந்தாய் மண்ணில்
மொந்தையில் மதுவானஎண்ணம் சிந்தையில் கூடாது
முந்தைக்குப் பிந்தைமகனே முகமகிழ்வான வாழ்வுவாழ
எண்பதுஎன்ன எண்பதுக்கு மேல்எட்டிப் பிடித்து
ஒண்பதமாய் உன்னுயிரும் ஒருமித்து உடனிருந்து
தண்பதமாய்த் தமிழ்மண்ணில் திண்ணிய வாழ்வினை
பண்பான மக்களுடன் பரிவானஉறவு களும்வாழ்த்த
இந்நாள் இனியநாள் இதுவுமன்றி ஈன்றவள்
இன்னார் இவரிவர்என உன்பிறப்பின் பின்அறிமுகம்செய்த
பொன்நாள் இந்நாள் என்றுமனமே உறவுகளுடன்உன்
பொன்அறிவாம் நானும் பொன்றும்வகை வாழ்த்துகிறேன் !
–உடற் கூட்டின் எண்ணச் சிதறல்
அகவை 78 அருந்தமிழ் வரிகள் 78
Leave a Reply