தலைப்பு-இப்படியும்உண்டோ-தமிழ்சிவா : thalaippu_ippadiyumundoa_thamizhsiva

இப்படியும் உண்டோ?

 

எங்கள் ஊரில் கடற்கரைக் குதிரைக்கு

இலையாய் இறக்கை முளைக்கும், நட்பே!

உங்கள் ஊரில் அப்படி உண்டா?

எங்கள் நாட்டில் பேய்மழை பெய்தால்

ஏரியைத் திறந்து விட்டுக் கொள்(ல்)வோம்

உங்கள் நாட்டில் இப்படி உதவலுண்டா?

வண்டி வண்டியாய்த் த(வ)ந்த பொருளின்மேல்

வருத்தமே படாமல் படத்தை ஒட்டுவோம்

பச்சைக் குழந்தைக்கும் பச்சை குத்துவோம்

தேரின் சக்கரத்தில் விழுந்த கன்றாய்

காரின்’ சக்கரத்திலும் விழுவோம் நன்றாய்

இருக்கும் திசைநோக்கி இங்கிருந்தே வணங்குவோம்

சிரிக்கும் குழந்தையாய் எரிக்கும் வெயிலை ஏற்று

செத்துப் போவதையும் சிரமேற் கொள்வோம்!

ஆலையில் வடித்த நீரும் சாவும் ஆருயிர்க்குக்

காலை யிலேயே கையளிப்போம், நீண்ட

பாடாண் பாட்டு பாடும் பயிற்சியும்

மேசையைக் கொட்டும் மேதமைத் தேர்ச்சியும்

வேண்டுவதே இம்மா நிலத்தே, நட்பே!

வழக்கு வடக்கிருக்க வருத்தம் ஒன்றின்றிக்

கிடக்கும் பொருள் யாவும் சேர்க்கும்

நடப்பு தெரிந்தே எம்மனோர் சேவிப்பர்

உங்கள் ஊரில் ஊரில்

நாட்டில் நாட்டில் இப்படி யுமுண்டோ?

தமிழ்சிவா