இருந்தபோது நாடு தொழுதது!

இறந்த பின்பு நாடு அழுதது!

 

பொன்மனச்செம்மலே!

என்

பொழுத்து புலரக்

கூவிய சேவலே!

உனக்கென்று

நான் எழுதிய

முதல் வரியில்தான்

உலகுக்கு

என்

முகவரி

தெரிய வந்தது!

 

என் கவிதா விலாசம்

உன்னால்தான்

விலாசமுள்ள

கவிதையாயிற்று!

 

இந்த நாட்டுக்குச்

சோறிடு முன்னரே

என்

பாட்டுக்குச்

சோறிட்டவன் நீ!

 

என்னை

வறுமைக் கடல்மீட்டு

வாழ்க்கைக் கரை சேர்த்த

படகோட்டியே!

கருக்கிருட்டில்

என்

கண்களில் தென்பட்ட

கலங்கரை விளக்கமே!

 

நான் பாடிய பாடல்களை

நீ பாடிய பிறகுதான்

நாடு பாடியது!

ஏழை எளியவர்களின்

வீடு பாடியது!

 

இல்லையென்று

இரப்போர்க்கு

இல்லையென்று

சொல்லாதவன்!

 

இன்று

இல்லையென்று போனான்!

இனி நான்!

யாரைப்பாடுவேன்?

 

புரட்சித் தலைவனே!

நீ

இருந்தபோது

உன் அடக்கத்தைப் பார்த்து

நாடு தொழுதது!

இன்று

இறந்த பின்பு

உன்

அடக்கத்தைப் பார்த்து

நாடு அழுதது!

 

வைகை யாறும்

பொன்னி யாறும்

வற்றிப்போகலாம்;

நீ

வற்றாத

வரலாறல்லவா!

 

கலைத்தாயின்

தலைமகனே!

கோட்டையில்

கொலுவிருந்தால் மட்டும்

நீ

‘சி.எம்’ அல்ல!

கோடம்பாக்கத்திலும்

கருச்சித்துக் கொண்டிருந்த

சீயம் தான்!

 

இன்று

படத்தை நிரப்பப்

பலர் இருக்கிறார்கள்;

உன் இடத்தை நிரப்பத்தான்

எவருமே இல்லை!

 

நான்

மனிதர்களில்

நடிகர்களைப் பார்த்திருக்கிறேன்

ஆனால்,

நடிகர்களில்

நான் பார்த்த

முதல் மனிதன் நீதான்!

 

அதனால்தான்,

நீ

நோயுற்ற போது

தங்களது

வாழ்நாட்களின் மிச்சத்தை

உன் கணக்கில்

வரவு வைத்துவிட்டு

எத்துணையோ பேர்

தங்கள் கணக்கை

முடித்துக்கொண்டு

தீக்குளித்தார்கள்!

 

என்

இதய தெய்வமே!

உன்

இறப்பில்

நான்

இரண்டாவது முறையாக

என்

தாயை இழந்தேன்!

இனி

நான் யாரைப் பாடுவேன்?

 

– கவிஞர் வாலி

(புரட்சித்தலைவர் எம்ஞ்சியார் மறைவின் பொழுது பாடியது)