இலக்குவனார் எழுதுகோல்-வீழாமல் காக்கும் ஊன்றுகோல்!
மண்ணுக்கும் பொண்ணுக்கும் பொன்னுக்கும் போராடும்
மாந்தரிடை மொழிக்காய்ப் போராடி, தமிழர்
இனமானம் காத்தபேரா சிரியர் இலக்குவனார்
தனக்கு இலக்கு தமிழர் முன்னேற்றம்
காசுபணம் விலக்கி நேர்மைத் திறத்தால்
மாசிலா மனத்தால் போராடும் குணத்தால்
ஓரிடம் நின்று பணியாற்ற வழியின்றி
வேறுவேறு ஊர்கள் தோறும் சென்று
காலத்தை வென்று சாதனை படைத்தவர்!
கால்பதித்த இடமெலாம் தன்தடம் பதித்தவர்!
கன்னித் தமிழை உயிராய் மதித்தவர்!
செல்லும் இடமெலாம் தமிழ்முழக்கம் செய்ததால்
செல்லரித்த மனங்கள் மலர்ந்தன! சோம்பிய
இறகுகள் துடித்தன! சாம்பிய இமைகள்
திறந்தன! தமிழை நினைந்து, தமிழால்
இணைந்து வாழ்வதே நன்றென வீறுகொண்டு
எழுந்த தமிழர் இமயம் தொட்டனர்!
இலக்குவனார் எழுதுகோல் தமிழின் செழுமை
துலக்கும் திறவுகோல்! தமிழர் பண்பாடு
விளக்கும் மந்திரக்கோல்! வழுக்கியும் பிறமொழிச்
சேற்றில் வீழாமல் காக்கும் ஊன்றுகோல்!
ஆங்கிலக் கலப்பால் தாய்மொழிக்கு நேரும்
இழுக்கை விலக்க, இலக்குவனார் பாடுபட்டார்!
தமிழ்ஒளி வீசும் கிழக்காய் இருந்து
குவியும் பகைஇருளை விலக்கியவர் இலக்குவனார்!
மாணவர் ஆற்றுப்படை, துரத்தப் பட்டேன்,
எழிலரசி என்றெலாம் கவிதை மாண்பினை
அமிழ்தென ஊட்டினார் இலக்குவனார்! இலக்கண
வித்தகர், சித்தமெலாம் நித்திலத் தமிழ்மேல்
வைத்தவர், பகுத்தறிவு பகலவன், தொல்காப்பிய
இலக்கண நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்!
பழந்தமிழ்க் கவிதைக்குப் புத்துரை வழங்கினார்!
தமிழ்மொழி ஆய்வும் திருக்குறள் ஆய்வும்
வாழும் நாளெலாம் மேற்கொண்ட அறிஞர்!
உழைப்பின் உறைவிடம், தமிழர் வாழ்வின்
தனிப்பெரும் தகவிடம், தன்மானப் புகலிடம்
கனிதமிழ்க் காவலர், தமக்கிணை இல்லா
இலக்குவனார் அரும்புகழ் இருந்தமிழ்போல்
துலங்கி என்றும் வாழ்க வாழ்கவே!
– முனைவர் நா.உசாதேவி
ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி
Leave a Reply