இலக்குவனார் பெயர் நிலைக்கும்! – இளவரச அமிழ்தன்
இலக்குவனார் பெயர் நிலைக்கும்!
கமழ்கின்ற செம்மொழிக்குப் பணிகள் செய்து
களம்கண்ட பல்லோரும் பிறந்த நாட்டில்
தமிழேதன் மூச்சென்று முழங்கி நின்ற
தன்மான இலக்குவனார் தோன்ற லானார்
தமிழ்க்காப்புக் கழகங்கள் தழைக்கச் செய்து
தரமான மொழியினையே தமிழர் ஆள
தமிழுக்கு அடுத்ததென ஆங்கி லத்தை
தமிழர்கள் கற்றிடவும் வழிவ குத்தார்!
தொன்மையான நாகரிகம் பண்பா டென்று
தூயதமிழ் இலக்கணந்தான் கொண்ட தாலும்
முன்தோன்றி மூத்தமொழி; என்னும் போழ்தில்
மூத்தகுடி நம்குடியே! பெருமை பூண்டோம்!
முன்னேற்றங் கருதியேதான் ஆங்கி லத்தை
முனைப்புடனே போற்றிடுஅவ் வேளை தன்னில்
தன்தாயைக் காப்பதுபோல் தமிழைக் காத்த
தகைமையாளர் இலக்குவனார் புகழும் வாழ்க!
இலக்கணத்தின் வரம்புடனே அடையும் மாற்றம்
ஈடில்லா மொழிவளர்ச்சி நெறிதான் என்றார்!
இலக்குடனே விதிவிலக்க ளிக்கும் நல்ல
இன்தமிழின் புறனடைநூல் பாக்கள் தந்தார்!
இலக்குவனார் வாழ்வினிலே பெரும்பங் கென்றால்
இன்குறளே; “வாழ்க்கைப் போர்” நூலில் சொன்னார்!
இலக்கியத்தில் இலக்குவனார் பெயர்நி லைக்கும்!
இணையில்லாப் புகழுடைத்துப் பெருமை சேர்க்கும்!
– பாவலர் இளவரச அமிழ்தன்
இளவரச அமிழ்தன் கவிதைகள்
பக்கம் 40
Leave a Reply