ஈழச்சிறுமி ; eezhachirumiதலைப்பு-ஈழத்தாய் எங்கள் தாய், அம்பாளடியாள் ;thalaippu_eezhathaay_engalthaay

ஈழத் தாயவளேதான் எங்கள் தாயம்மா!

ஆழ்கடல் தனிலே அந்தப்
பேதையின் குரலைக் கேட்டேன்!
ஊழ்வினைப் பயனாய் எண்ணி
உலகமே வெறுக்கக் கண்டேன்!
வாழ்வினை அளிக்க வல்ல
வசந்தமும் விலகிச் செல்ல
மூழ்கிடும்  திருநா டெம்மின்
முகவரி என்றார் அம்மா!

பொன்னென விளைந்த தேசம்
பொலிவினை இழக்க நாளும்
இன்னலைத் தொடுத்தார் அங்கே
இதயமும் மரித்துப் போக!
அன்னவர் செயலைக் கண்டே
அடிமைகள் விழித்த தாலே
வன்முறை பொலிந்தே  இன்றும்
வாழ்வினைப்  பொசுக்கு தம்மா!

கற்றவர் நிறைந்த பாரில்
காத்திட ஒருவர் இன்றி
குற்றமே பொலிந்து நம்மின்
குரல்வளை நசுக்க லாமோ?.
வற்றலாய்த்  தொங்கும் மக்கள்
வாழ்வினைக் கண்டும் எம்மைப்
பெற்றவள் விட்ட கண்ணீர்
பெருங்கடல் ஆன தம்மா!

செம்மொழித்  தமிழைக் கற்றுச்
செழிப்புடன் வாழ்ந்த மக்கள்
அம்மண மாக வீழ்ந்தார்
ஆருயிர் துடிக்க மண்ணில்!
எண்ணிலா உயிரின் ஓலம்
இன்றுமே கேட்கு தென்றால்
புண்ணிலே வேலைப் பாய்ச்சும்
புத்திதான் மாறு மோசொல்?

பன்மலர்ச் சோலை நீயும்
பாரினில் நீதி காக்க
வன்முறை அழித்துச் சென்றாய்
வாழ்வினில் என்ன கண்டாய்!
உன்னையே அழித்து மக்கள்
ஊனினை வளர்க்க நாளும்
இன்னலே விளைந்த திங்கே
இயற்கையே காணும் அம்மா!

பட்டது சொன்னால் போதும்
பாருடன் உள்ளம் மோதும்!
கெட்டவர் குடியை வெல்லக்
கேடுகள் விளையும் மெல்ல!
சட்டென மறையத் துன்பம்
சத்தியம் அருள்வாய் இன்பம்!
கட்டளை இட்டுச் சும்மா
காத்திடு இயற்கை அம்மா!

கவிஞர் அம்பாளடியாள் 01 ;kavignar_ambaaladiyaal

–  கவிஞர் அம்பாளடியாள்