attai-thanipaasurathokuthi

இல்லறத்தில் இனிது வாழ்க

ஆடலு மழகும் பாடலுஞ் சான்றீர்

இன்னிசைக் குயில்கள்! பன்னருங் கலைவலீர்

நும்வகைப் பட்டோர் நுமைத்தெய்வ மென்பர்

நுந்தமக் கோர்சொல் சிந்தை செய்ம்மினோ

வாய்ப்பாரு நலனெலாம் வாய்க்கப் பெற்றீர்

என்கொ லவற்றைப் புல்லிடை யுகுக்கின்றீர்

தூய இல்லறக் கோயி லில்லை கொல்?

இன்னற மணியெனு மியற்கை நலத்தீர்

வீழ்ந்த மகளிர்காள் விரைவினி லெழுமின்

ஆழ்ந்திடா தின்னே யறிவுகைப் பற்றுமின்

இழிந்தார் புகழுரை யேற்றுக் கொள்ளலிர்

இன்புடன் மேவி யில்லறத்

தினிது வாழிய எங்கை மீரே

– பரிதிமாற்கலைஞர்: தனிப்பாசுரத் தொகை

parithimalkalaignar01