உதிக்கும் சூரியனே!

பனியை உருக்க வரும் சூரியன்போல்
பகலெல்லாம் உழைத்து ஓய்வெடுடா
பனிமலையையே உருக்க நீ நினைத்தால்
பகலவனாய் வானில் நீ எரிந்திடடா!

சிறுகச் சிறுக வரும் வியர்வைத்துளி
உன் உழைப்பிற்குக் கிடைத்த பொன்துளிகள்
பெருகி பெருகி வரும் ஊனின் வலி
உன் உடலை செய்யும் உறுதியடா!

ஓடும் ஓட்டமும் ஓயாது வாழ்வு
முடியாப் பாதையின் தொடர்ச்சியடா,
வாழ்வில் கடினப் பாதைகள் பலவுண்டு
அதைக் கண்கள் மூடாமல் ஓடிடடா,
கடினப் பாதைகளில் ஓடிப் பழகிவிட்டால்
இனி எந்தப் பாதையிலும் ஓடிடலாம்!

சூழும் துன்ப இருளை நீ நீக்கிடவே
புது சூரியனாய் வானில் உதித்திடடா,
சிகர தூரம் அது மிகத் தூரமில்லை
உன் புன்சிரிப்பால் அதை நீ கடந்திடலாம்,
கடக்கும் முன்பு ஒரு எச்சரிக்கை
கடந்தப் பாதையை என்றும் மறக்காதே!

உலகம் பழிக்கலாம் உள்ளம் வலிக்கலாம்
உன் இதய அறைகள் ஓய்வதுண்டா?
வேகம் குறையலாம் சிந்தை குழம்பலாம்
உன் பெருமுயற்சி குறைந்திடுமா?
வரும் கண்ணீரையே தாக மருந்தாக்கிடு
உன் முயற்சிக்கு புதுவேகம் கொடு!

– க. இராசேசு

கவிதை இணையத் தளம்

https://kavithai.com/poem/k-raajeess-utikkum-cuuriynnnee